399. தலைவி கூற்று
பாடியவர்: பரணர்.
திணை: மருதம்.
கூற்று : வரைவு
நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கூற்று
விளக்கம்: தலைவனும்
தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்திவந்தான்.
அதனால் வருத்தம் அடைந்த தலைவி, தோழியை நோக்கி,
“தலைவர் என்னோடு இருக்கும் பொழுது பசலை நீங்குகிறது. அவர் என்னைவிட்டுப் பிரியும் பொழுது பசலை என்னைப் பற்றிக்கொள்கிறது”என்று கூறுகிறாள்.
ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே.
கொண்டு
கூட்டு:
பசலை
காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி, விடுவுழி
விடுவுழிப் பரத்தலான், ஊருண் கேணி உண்துறைக் தொக்க பாசி அற்று.
அருஞ்சொற்பொருள்: கேணி = குளம்.
உரை: பசலையானது, தலைவர், நம்மைத் தொடுந்தோறும் தொடுந்தோறும் நம் உடலை
விட்டு அகன்று, அவர் நம்மை விட்டுப் பிரியுந்தோறும்
பிரியுந்தோறும் பரவுவதால், ஊரார் நீர் உண்ணும் குளத்தில்,
அவர்கள் நீரை உண்ணும் துறையில் திரண்டிருக்கும் பாசியைப் போன்றது.
சிறப்புக்
குறிப்பு:
பசலைக்குப்
பாசியை உவமையாகக் கூறியிருப்பது மிகவும் பொருத்தமானதாகவும் சிறப்பானதாகவும் உள்ளது. பாசி படர்ந்த குளத்தில் நீரை உண்ணுபவர்கள் பாசியை விலக்கி நீரை உண்பர்.
அவர்கள் கையால் நீரைத் தொட்டு, முகந்து
குடிக்கும் பொழுது, பாசி விலகி இருக்கும். அவர்கள் நீரைக் குடித்து முடித்துக் கரையேறிய பிறகு பாசி மீண்டும் ஒன்று
சேர்ந்துகொள்ளும். அதுபோல், தலைவனோடு
இருக்கும் பொழுது பசலை விலகியும், தலைவன் பிரியும் பொழுது
பசலை தலைவியைப் பற்றிக்கொண்டு அவள் உடலில் பரவுவதும் பசலையின் இயல்பு. பசலை என்பது, காமநோயால் உடலில் தோன்றும்
நிறமாற்றத்தையும் பொலிவிழந்த நிலையையும் குறிக்கிறது. தலைவைனைத்
திருமணம் செய்துகொண்டு அவனைவிட்டுப் பிரியாமல் வாழ்ந்தால் பசலை முழுமையாகத்
தன்னைவிட்டு நீங்கும் என்பது தலைவியின் கருத்து.
தலைவனின் பிரிவால், தலைவியின் உடலில் பசலை உடனே பரவும் என்ற கருத்தைத் திருக்குறளிலும் காணலாம்.
விளக்கற்றம்
பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம்
பார்க்கும் பசப்பு.
(குறள் – 1186)
பொருள்: விளக்கொளி எப்பொழுது மறையும் என்று பார்த்துகொண்டிருந்து, அப்பொழுதே பரவக் காத்திருக்கும் இருளைப்போல், கணவன்
என்னைத் தழுவுவதைச் சற்றே தளர்த்தும் சமயம் பார்த்து, பசலைநிறம்
என் உடலில் பரவக் காத்திருக்கின்றது.
புல்லிக் கிடந்தேன்
புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
(குறள் - 1187)
பொருள்: என் கணவனைத் தழுவிக்கொண்டு கிடந்த நான், பக்கத்தே
சிறிது அகன்றேன். அவ்வளவிலேயே பசலை நிறம் என்னை
அள்ளிக்கொள்வது போல் பற்றிகொண்டது.