Monday, September 14, 2015

88. குறிஞ்சி - தோழி கூற்று

88. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: மதுரைக் கதக்கண்ணனார்.  இவர் இயற்றியதாகச் சங்க இலக்கியத்தில் இந்த ஒரு பாடல் மட்டுமே காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: இதுவரைப் பகலில் வந்து தலைவியைச் சந்தித்த தலைவன், இனி இரவில் வரவிரும்புவதாகத் தோழியிடம் கூறினான். அந்தச் செய்தியைத் தலைவியிடம் தோழி கூறுகிறாள். தலைவனை இரவில் சந்திப்பது யாருக்காவது தெரியவந்தால் அதனால் பழிவரும் என்று எண்ணித் தலைவனை இரவில் சந்திப்பதற்குத்  தலைவி வெட்கப்படுகிறாள்.  ”தலைவனை இரவில் சந்திப்பதற்கு நீ வெட்கப்படக் கூடாது; தயங்கக் கூடாது.” என்று கூறித் தோழி தலைவியை ஊக்குவிக்கிறாள்.
ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்
சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
தொல்முரண் சோருந் துன்னருஞ் சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம்
வடுநா ணலமே தோழி நாமே. 

கொண்டுகூட்டு: தோழி, ஒலிவெள் அருவி ஓங்குமலை நாடன், சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித் தொல்முரண் சோரும் துன் அரும் சாரல் நடுநாள் வருதலும் வரூஉம்நாமே வடு நாணலம்.

அருஞ்சொற்பொருள்: ஓங்குதல் = உயர்தல்; களிறு = யானை; வயம் = வலி; தொல் = பழைய; முரண் = வலி, மாறுபாடு; சோர்தல் = தளர்தல், வாடல்; துன்னுதல் = நெருங்குதல்; நடுநாள் = நள்ளிரவு; வடு = பழி, குற்றம்.

உரை: தோழி, ஒலிக்கும் வெண்ணிறமான அருவியை உடைய உயர்ந்த மலைகள் உள்ள நாட்டிற்குத் தலைவன், சிறிய கண்களையுடைய பெரிய களிறு, வலிமையான புலியை எதிர்த்துப் போரிட்டுத் தன்னுடைய பழைய பகையை தீர்த்துக் கொள்கின்ற, மக்கள் கடத்தற்கரிய மலைப்பக்கத்தின் வழியே நள்ளிரவில் வரப்போகிறான். அதனால், நமக்கு உண்டாகும் பழிக்கு நாம் நாண மாட்டோம்.

விளக்கம்: புலியும் யானையும் போரிடும் மலைச் சாரலாதலால் அது மக்களால் நெருங்குதற்கு அரியதாயிற்று. வழியில் உள்ள பல கொடுமைகளுக்குத் தலைவனே அஞ்சாமல் வரும்பொழுது அவனை ஏற்றுக்கொள்ளாமல், பழிக்காக நாம் நாணி அவனை இரவில் சந்திக்க மறுப்பது சரியன்று என்று தோழி தலைவிக்கு அறிவுரை கூறுவதாகத் தோன்றுகிறது.


உயர்ந்த மலையிலிருந்து கீழே வந்து அங்குள்ளவருக்குப் பயனளிப்பது போலத் தலைவன் பல இன்னல்களைக் கடந்து வெகுதொலைவிலிருந்து வந்து தலைவியுடன் அன்போடு இருந்து இன்பமும் அளிப்பான் என்பது இங்கு உள்ளுறை உவமமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

87. குறிஞ்சி - தலைவி கூற்று

87. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: கபிலர்.இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 13-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவனும் தலைவியும் பழகிய காலத்தில்,  “உன்னை என்றும் பிரிய மாட்டேன்என்று கடம்பு மரத்தில் வாழும் தெய்வத்தின் முன்னிலையில் தலைவன் சூளுரை செய்தான். பின்னர், பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்றான். பிரிந்து சென்றவன் இன்னும் திரும்பி வரவில்லை. தலைவனின் பிரிவால் வருந்திய தலைவியின் நெற்றியில் பசலை படர்ந்தது; தோள்கள் மெலிந்தன. பிரிந்து செல்ல மாட்டேன் என்று குளுரைத்துப் பின்னர் பிரிந்து சென்றதால் அந்தத் தெய்வம் தன் தலைவனைத் தண்டிக்குமோ என்று தலைவி அஞ்சினாள். ”என்னுடைய உடலில் தோன்றிய மாற்றங்களுக்குக் காரணம் என் தலைவர் எனக்குச் செய்த கொடுமை அன்று. அவற்றிற்குக் காரணம் என்னுடைய மனநிலைதான். ஆகவே, என் தலைவரைத் தண்டிக்க வேண்டா.” என்று தலைவி தெய்வத்திடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லரெங் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே. 

கொண்டுகூட்டு: மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப. எம் குன்றுகெழு நாடர் யாவதும் கொடியர் அல்லர். (என்) நுதல் பசைஇ பசந்தன்று;
(என்) தடமென்தோள் ஞெகிழ ஞெகிழ்ந்தன்று. 

அருஞ்சொற்பொருள்: மன்றம் = பொதுவிடம்; மரா = கடம்பு மரம்; பேஎம் = அச்சம்; முதிர் = முதிர்ந்த; தெறூஉம் = வருத்தும்; யாவதும் = சிறிதும்; கெழு = பொருந்திய; பசைஇ = விரும்பி; நுதல் = நெற்றி; ஞெகிழ்தல் = நெகிழ்தல், மெலிதல், உருகுதல்; தட = பெரிய, பரந்த.


உரை:  பொதுவிடத்திலுள்ள கடம்பு மரத்தில்  தங்கியுள்ள, பிறர்க்கு அச்சத்தைத் தரும் பழமையான தெய்வம், கொடியவர்களை வருத்தும் என்று கூறுவர். குன்றுகள் பொருந்திய நாட்டையுடைய எம் தலைவர், சிறிதளவும் கொடியவரல்லர். நான் அவரை விரும்பியதனால் என் நெற்றி தானாகவே பசலை பெற்றது; என் மனம் அவரை நினைத்து உருகியதால், என்னுடைய  பரந்த மெல்லிய தோள் தானாகவே மெலிந்தது.

86. குறிஞ்சி - தலைவி கூற்று

86. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: வெண்கொற்றனார். இவர் பாடியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: தலைவனின் பிரிவைப் பொறுக்க முடியாததால்  தலைவி தூங்காமல்  வருத்தத்துடன் இருக்கிறாள். தோழியும் அவளோடு இருக்கிறாள்.  அவள் வீட்டிற்கு அருகே எருது ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அந்த எருதின் முகத்தில் ஈ ஒன்று மீண்டும் மீண்டும் வந்து உட்கார்கிறது. ஈயின் தொல்லை தாங்காமல் அந்த எருது தன் தலையை அசைக்கிறது. எருது தலையை அசைப்பதால் அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணி மெல்லிய ஓசையை எழுப்புகிறது. தூங்காமல் இருப்பதால், அந்த மெல்லிய மனியோசையைத் தலைவியால் கேட்க முடிகிறது.  “தலைவனோடு இன்புற்றிருக்க வேண்டிய இந்தக் கூதிர்காலத்தின் நள்ளிரவில் என்னுடைய தனிமைத் துயரத்தை மிகுதிப்படுத்தும் எருதுவின் மணியோசையை கேட்பவர்கள் வேறு யாராவது இருப்பார்களோ?” என்று தலைவி தோழியைக் கேட்கிறாள்.

சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆனுளம் புலம்புதொ றுளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.
-

கொண்டுகூட்டு: உறை சிறந்து ஊதை தூற்றும் கூதிர் யாமத்து ஆன்நுளம்பு  உலம்புதொறு உளம்பும் நாநவில் கொடுமணி நல்கூர் குரலை, சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண் பொறை அரு நோயொடு, புலம்பு அலைக் கலங்கிப் பிறரும் கேட்குநர் உளர்கொல் ?

அருஞ்சொற்பொருள்: பனி = கண்ணீர்; சிறை பனி =  கட்டுப்படுத்தியிருந்த கண்ணீர்; சேயரி = சே + அரி = செவ்வரி = கண்ணிலுள்ள சிவந்த கோடுகள் (இரேகைகள்); மழைக்கண் = குளிர்ந்த கண் ; பொறையரு = பொறை + அரு = பொறுத்தற்கரிய; நோய் = பிரிவினால் விளைந்த துன்பம்; புலம்பு = தனிமை; அலைத்தல் = வருத்துதல்;  உறை = மழைத்துளி; சிறந்து = பெரிதாக; ஊதை = வாடைக்காற்று; கூதிர் = கூதிர் காலம் (ஐப்பசி கார்த்திகை மாதங்கள்); யாமம் = நள்ளிரவு; ஆன் =  எருது; நுளம்பு =   (மாட்டு ஈ); உலம்புதல் = ஒலித்தல்; உளம்புதல் = அலைத்தல்; நா = மணியின் நா; நவிலுதல் = ஒலித்தல்; கொடு = கொடிய; நல்கூர் குரல் =  மெல்லிய ஓசை.

உரை: தோழி, பெரிய மழைத்துளிகளை வாடைக்காற்று வீசித் தூவுகின்ற கூதிர்காலத்தின் நள்ளிரவில், எருது தன் முகத்தருகே வந்து ஓசையிடும் ஈக்களை விரட்டத் தன் தலையை அசைக்கிறது.  ஏருது தலையை அசைப்பதால் அதன் கழுத்தில் உள்ள கொடிய மணியின் நா அசைந்து மெல்லிய ஓலியை எழுப்புகிறது. அந்த ஒலி காதில் விழும்பொழுது, கட்டுப்படுத்தியிருந்த கண்ணீர் துளித்துளியாக விழுகின்ற, சிவந்த வரிகளையும் குளிர்ச்சியையுமுடைய கண்களோடும் பொறுத்தற்கரிய காமநோயோடும் தனிமை வருத்துவதால் அந்த ஒலியைக் கேட்டுக் கலங்கி வருந்துபவர்கள் என்னைத் தவிர பிறரும் உளரோ?


விளக்கம்: சிறைபனிஎன்றது தலைவி தன் துயரத்தை அடக்க முயலும் முயற்சியைக் குறிக்கிறது. தனிமைத் துயரத்தை மேலும் அதிகப்படுத்துவதால்  எருதின் கழுத்திலுள்ள மணிகொடுமணிஎன்று குறிப்பிடப்பட்டது

85. மருதம் - தோழி கூற்று

85. மருதம் - தோழி கூற்று

பாடியவர்: வடம வண்ணக்கன் தாமோதரனார். இவர் இயற்பெயர் தாமோதரனார்.  இவர் வட நாட்டிலிருந்து தமிழ் நாட்டில் குடியேறியதால் வடமஎன்ற அடைமொழி இவர் பெயரோடு சேர்க்கப்பட்டிருக்கிறது.  இவர் பொன்னின் தரத்தைப் பரிசோதனை செய்யும் தொழிலைச் செய்ததனால் வண்ணக்கனார்என்று அழைக்கப்பட்டார்.  இவர் புறநானூற்றில் 172 - ஆம் பாடலையும் குறுந்தொகையில் 85-ஆம் பாடலையும் இயற்றியுள்ளார். 

பாடலின் பின்னணி: தலைவன் தன் மனைவியைப் பிரிந்து  பரத்தையரோடு வாழ்கிறான். அவன் தன் இல்லத்திற்குத் திரும்பிவர விரும்புகிறான். தன் மனைவி (தலைவி)கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்த தலைவன், பாணன் ஒருவனைத் தன் மனைவியிடம்  தூதுவனாக அனுப்புகிறான். அந்தப் பாணன், “தலைவன் மிகவும் இனிமையானவன். அவன் உன்மீது மிகுந்த அன்புடையவன்.” என்று தலைவியிடம் கூறுகிறான். அதைக் கேட்ட தோழி, “ இதெல்லாம் இவனுடைய வெறும் வாய்ப்பேச்சு. இவன் சொல்லுவதைபோல் தலைவனின் செயல் இல்லையே !” என்று தலைவியிடம் கூறுகிறாள். தலைவி தலைவனை ஏற்க மறுக்கிறாள்.

யாரினும் இனியன் பேரன் பினனே
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்
யாண ரூரன் பாணன் வாயே. 

கொண்டுகூட்டு: உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்சூல்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர் தேம் பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் நாறா வெண்பூக் கொழுதும் யாணர் ஊரன், பாணன் வாயே யாரினும் இனியன் பேரன்பினனே.

அருஞ்சொற்பொருள்: உள்ளூர் = ஊர் உள் (ஊருள் என்பது முன்பின் மாறி உள்ளூர் என்று வந்தது) குரீஇ = குருவி; சூல் = கருப்பம்; பேடை = பெண்குருவி; ஈனுதல் = பெறுதல்; ஈனில் = ஈனுவதற்காக அமைக்கப்பட்ட இல்லம் (முட்டை இடுவதற்காக அமைக்கப்பட்ட கூடு); இழைத்தல் = செய்தல், அமைத்தல்; தேம் = தேன்; பொதிதல் = நிறைதல்; தீ = இனிமை; கழை = தண்டு; நாறா = மணமில்லாத; கொழுதல் = கோதியெடுத்தல்; யாணர் = புதுவருவாய்; ஊரன் = மருதநிலத் தலைவன்; வாய் = சொல்; வாயே = சொல்லில் மட்டும்.

உரை: ஊரினுள் இருக்கும் பெண்குருவியின் துணையாகிய ஆண்குருவி துள்ளிய நடையை உடையது. அந்த ஆண்குருவி, கருப்பம் முதிர்ந்த தன் துணையாகிய பெண்குருவி முட்டை இடுவதற்காக ஒரு கூட்டை அமைப்பதற்குத் தேன் போன்ற இனிமை நிறைந்த  தண்டுகளையுடைய கரும்பின் மணமில்லாத பூக்களைக் கோதியெடுக்கும். அத்தகைய குருவிகள் வாழும் ஊரனாகிய தலைவன் புதுவருவாயை உடையவன். அந்தத் தலைவனிடமிருந்து தூதுவனாக வந்த பாணன், ”தலைவன் எல்லாரினும் இனிமையானவன்; உன்மீது மிகுந்த அன்புடையவன்.” என்று தலைவியிடம் கூறுகிறான். “இந்தப் பாணன் சொல்லுவது பேச்சளவில் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாமே தவிர, தலைவன் உண்மையில் அத்தகையவன் அல்லன்என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

விளக்கம்: முட்டையிடும் இடம் மெதுவாக இருத்தல் கருதி, சேவல் கரும்பின் பூவைக் கோதியது என்று தோன்றுகிறது. பறவைகளும் தங்கள் துணையிடம் பேரன்பு காட்டும் ஊருக்குத் தலவனுக்கு அந்தப் பண்பு இல்லையே என்பது குறிப்பு.
தேன் போன்ற இனிமையுடைய கரும்பின் தண்டுகள் இருக்க, மணமும் நன்னிறமும் இல்லாத கரும்பின் பூவைக் குருவி கோதுவது, அறத்தோடு கூடிய இன்பத்தைத் தரும் தலைவி (மனைவி) இல்லத்தில் இருக்கும்பொழுது அவள்மேல் அன்பின்றி, அறநெறியிலிருந்து தவறி வாழும் அன்பில்லாத பரத்தையரைத் தலைவன் விரும்பினான் என்பதை உள்ளுறை உவமமாகக் குறிக்கிறது.


அன்பினனே என்பதில் ஏகாரம் அசைநிலை; வாயே என்பதில் ஏகாரம் பிரிநிலை (பலவற்றுள் ஒன்றைப் பிரித்துக் கொள்வது).

84. பாலை - செவிலி கூற்று

84. பாலை - செவிலி கூற்று

பாடியவர்: மோசிகீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 59-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: பொழுது புலர்ந்தது. வீட்டில் தலைவியைக் காணவில்லை. தலைவியின் தாய்என் மகளைக் காணவில்லையே. அவள் எங்கே போயிருப்பாள்? உனக்குத் தெரியுமா?” என்று செவிலித்தாயைக் கேட்கிறாள். செவிலித்தாய், “அப்படியா? அவளைக் காணவில்லையா? ஐயோ ! எனக்குத் தெரியாதே.” என்கிறாள். அப்பொழுது, தோழி அங்கே ஓடிவருகிறாள். தலைவியின் தாய்என் மகளைக் காணவில்லையே! அவள் உன்னிடம் ஏதாவது சொன்னாளா? அவள் எங்கே இருக்கிறாள் என்று உனக்காவது தெரியுமா?” என்று பதட்டத்துடன் கேட்கிறாள். “எனக்கு இப்பொழுது தான் தெரியும். நேற்று இரவு, தலைவி தன் காதலனோடு இந்த ஊரைவிட்டுச் சென்றதாகவும், அவர்கள் இருவரும் போவதைச்  சிலபெண்கள் பார்த்ததாகவும் கேள்விப்பட்டேன். அதைச் சொல்லத்தான் நான் ஓடோடி வந்தேன்.” என்று தோழி கூறுகிறாள்.  தலைவியின் தாய் செய்வதறியாது  மனம் கலங்குகிறாள். ”உன்னோடுதானே நேற்று இரவு படுத்திருந்தாள். அவள் போனது உனக்குத் தெரியாதா?” என்று தாய் குழப்பத்தோடு செவிலித்தாயைக் கேட்கிறாள். ”நேற்று இரவு அவள் என்னோடு படுத்து இருந்தபொழுது நான் அவளைத் தழுவிக்கொண்டு படுத்திருந்தேன். அவள் என்னைவிட்டு விலகிச் சற்றுத் தள்ளிப் படுத்தாள். நான் அவளை மீண்டும் தழுவினேன். அப்பொழுது அவள், ’எனக்கு வியர்க்கிறதுஎன்று கூறினாள். அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்பது எனக்கு அப்பொழுது புரியவில்லை; இப்பொழுது புரிகிறது. வீட்டைவிட்டுத் தலைவனோடு போவதற்கு நான் அவளைத் தழுவியது அவளுக்கு இடையூறாக இருந்தது போலும்.” என்று செவிலித்தாய் கூறுகிறாள்.

பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள்
இனியறிந் தேனது துனியா குதலே
கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான்தண் ணியளே. 
-

கொண்டுகூட்டு: கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான் தண்ணியள்.  பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள். அது துனியாகுதல் இனி அறிந்தேன்.

அருஞ்சொற்பொருள்: பெயர்தல்  = மீளுதல்; பெயர்த்து = மீண்டும்; முயங்குதல் = தழுவுதல்; வியர்த்தனென் = வியர்வை அடைந்தேன்; இனி = இப்பொழுது; துனி = வெறுப்பு; கழல்தொடி = கழலுமாறு அணியப்பட்ட தோள்வளை; ஆஅய் = ஆய் , கடையெழு வள்ளல்களில் ஒருவன்; மழை = மேகம்; பொதியில் = பொதிய மலை; வேங்கை = ஒருவகைப் பூ; காந்தள் = ஒருவகைப் பூ; நாறி = மணந்து; ஆம்பல் = ஆம்பல் மலர்; தண்ணியள் = குளிர்ச்சியானவள்.

உரை: கழலுமாறு அணிந்த தோள் வளையையுடைய ஆய் என்னும் வள்ளலின்,  மேகங்கள் தவழும் பொதியின் மலையில் பூக்கும் வேங்கை மலரையும் காந்தள் மலரையும் போல மணத்தையும், ஆம்பல் மலரைக் காட்டிலும் குளிர்ச்சியையும் உடையளாகிய என்மகள், யான் ஒருமுறை தழுவியதோடு நிறுத்தாமல் மீண்டும் தழுவும்பொழுது,  எனக்கு வியர்க்கிறது.” என்று கூறினாள்; நான் தழுவியது அவளுக்கு வெறுப்பை உண்டாக்கியதற்குக் காரணத்தை அவள் அவ்வாறு கூறியபொழுது நான் அறிந்திலேனாயினும் இப்பொழுது அறிந்தேன்.
விளக்கம்: செவிலித்தாய் தலைவியைத் தன் அருகில் தூங்க வைப்பதும், தூங்கும் பொழுது அவளை அன்போடு தழுவிக்கொள்வதும் வழக்கம். ” பெயர்த்தனென் என்றதால் அன்றிரவு முன்பு ஒருமுறை தழுவினாள் என்பது தெரியவருகிறது. அவ்வாறு தழுவிய பழக்கத்தால் செவிலித்தாய் மீண்டும் ஒருமுறை தலைவியைத் தழுவ முயன்றாள்.  வியர்த்தனென்என்று தலைவி கூறியதுஎன்னைத் தழுவாதேஎன்று தலைவி செவிலித்தாயை நோக்கிக் கூறியதைக் குறிக்கிறது. தலைவி செவிலித்தாயிடம் தன்னைத் தழுவ வேண்டாம் என்று கூறியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, தலைவி தலைவனோடு இரவில் யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டுச் செல்லுவதற்குத் திட்டமிட்டிருக்கலாம். செவிலித்தாய் அவளைத் தழுவினால் அவளைவிட்டுப் பிரிந்து செல்லுவது கடினம். ஆகவே, தலைவிஎனக்கு வியர்க்கிறது; என்னைத் தழுவாதே.” என்று கூறியிருக்கலாம். மற்றொரு காரணம், அவள் தலைவனால் தழுவப்படுவதை மட்டுமே விரும்பியிருக்கலாம்.

 பொதிய மலைக்கு உரியவன் ஆய். அவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். ”மழைதவழ் பொதியில்என்றது, காந்தளும் வேங்கையும் வளமாக வளர்தற்குரிய மழை பொதிய மலையில் உண்டு என்பதைக் குறிக்கிறது.

தலைவியோடு நெருங்கிப் பழகி, தினமும் அவளோடு தூங்கும் பழக்கம் உள்ளவளாதலால், செவித்தாய்க்குத் தலைவியின் உடலின் நறுமணத்தையும் தண்மையையும் நன்கு அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது. குறிஞ்சிநிலத்திற்குரிய மலர்களாகிய வேங்கை, காந்தள் ஆகியவற்றின் மணத்தை செவிலித்தாய் நன்கு அறிந்தவளாதலால் அவற்றைத் தலைவியின் உடலில் இயற்கையாக உள்ள மணத்திற்கு உவமையாகக் கூறினாள். ஆம்பல்மலர் தண்ணீரில் உள்ள மலராகையால் செவிலித்தாய் அதைத் தலைவியின் உடலின் குளிர்ச்சிக்கு உவமையாகக் கூறினாள்.

83. குறிஞ்சி - தோழி கூற்று

83. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: வெண்பூதனார்:  இவர் இயற்றியதாக சங்க இலக்கியத்தில் இந்த ஒரு பாடல் மட்டுமே காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: தலைவியைப் பிரிந்திருந்த தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டான் என்றும் அவன் விரைவில் தலைவியின் இல்லத்திற்கு அவளைப் பெண்கேட்க வரப்போகிறான் என்றும் செவிலித்தாய் தோழிக்குத் தெரிவித்தாள். அந்த மகிழ்ச்சியான செய்தியை, செவிலித்தாயை வாழ்த்துவது போலத் தோழி தலைவிக்குத் தெரிவிக்கிறாள்.  

அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை
தம்மில் தமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழந் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை வரும்என் றாளே. 

கொண்டுகூட்டு:  தம் இல் தமது உண்டன்ன சினைதொறும் தீம்பழந் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை அன்னை வரும் என்றாள். அவள் அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ!

அருஞ்சொற்பொருள்: அரும்பெறல் = பெறுதற்கரிய; அமிழ்தம் = சாவா மருந்து; ஆர்பதம் = உண்ணும் உணவு; பெரும்பெயர் = மிகுந்த புகழ்; இல் = இல்லம்; சினை = கிளை; தீ = இனிமை; தூங்கும் = தொங்கும்; பல = பலா; ஓங்குமலை = உயர்ந்த மலை; நாடன் = குறிஞ்சிநிலத் தலைவன்; பெறீயரோ = பெறுவாளாக.

உரை: தமது வீட்டில் இருந்து, தமது முயற்சியால் தேடிய பொருளால் பெற்ற உணவை உண்ணுவதைப் போன்ற இனிய சுவையைத் தரும் பழங்கள், கிளைகள் தோறும், தொங்குகின்ற பலாமரங்களையுடைய, உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சிநிலத்  தலைவன், தலைவியைத் திருமணம் செய்துகொள்வதற்குத் தேவையான பொருளோடு வரப்போகிறான் என்று என் அன்னை கூறினாள். அவள் பெறுதற்கரிய அமிழ்தத்தை உணவாக உண்ணும், பெரும்புகழைடைய துறக்கவுலகைப் (சுவர்க்கத்தைப்) பெறுவாளாக !

விளக்கம்: தம்மில் தமது உண்டன்ன’“ என்பது, ”தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால், அம்மா வரிவை முயக்கு.”  என்ற குறளோடு (குறள், 1107)  ஒப்பு நோக்கத் தக்கது. களவொழுக்கத்தில் பெறும் இன்பம்தம்மில் தமது உண்டன்னஇன்பம் தருவது அன்று என்பதும் கற்பொழுக்கமே அத்தகைய இன்பம் தரும் என்பதும் இங்கு குறிப்பால் உணர்த்தப்பட்டுள்ளன. “தீம்பழம் தூங்கும் ஓங்குமலை நாடன்என்றது தலைவனுடைய நாட்டின் வளத்தையும் அவன் செல்வச் சிறப்பையும் குறிக்கிறது.