13.
குறிஞ்சி - தலைவி கூற்று
பாடியவர்:
கபிலர்.
இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த திருவாதவூரில் அந்தணர் குலத்தில்
பிறந்தவர். ‘புலன்
அழுக்கற்ற அந்தணாளன்’ என்று மாறோக்கத்து நப்பசலையார் என்ற
புலவரால் புகழப்பட்டவர் (புறநானூறு - 126). கபிலர் பாடியதாக 234 செய்யுட்கள் எட்டுத்தொகை நூல்களில் காணப்படுகின்றன. குறிப்பாக, இவர்
புறநானூற்றில் 28 செய்யுட்களையும்,
கலித்தொகையில் காணப்படும் குறிஞ்சிக் கலி எனப்படும் 29
செய்யுட்களையும், குறுந்தொகையில் 29 செய்யுட்களையும்,
நற்றிணையில் 20 செய்யுட்களையும், அகநானூற்றில் 18 செய்யுட்களையும், பதிற்றுப்பத்தில் 10 செய்யுட்களையும் , ஐங்குறுநூற்றில் 100 செய்யுட்களையும்
இயற்றியுள்ளார். ஆரிய அரசன்
பிரகத்தனுக்குத் தமிழின் இனிமையை எடுத்துரைக்க, இவர் இயற்றிய
குறிஞ்சிப் பாட்டு பத்துப்பாட்டில் உள்ளது.
இவர் குறிஞ்சித் திணைச் செய்யுட்கள் இயற்றுவதில் மிகுந்த ஈடுபாடு
உடையவர். இவரால் பாடப்பெற்றோர்: அகுதை,
இருங்கோவேள், ஓரி, செல்வக்
கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ் சேரலிரும்பொறை, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, விச்சிக்கோன், வையாவிக் கோப்பெரும் பேகன், வேள் பாரி.
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பற்றி இவர் இயற்றிய பாடல்கள்
பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தாக அமைந்துள்ளது.
இவர் இயற்றிய பாடல்களால் பெருமகிழ்ச்சி அடைந்த செல்வக் கடுங்கோ வாழியாதன்,
நன்றா என்னும் குன்றேறி நின்று கண்ணிற்கெட்டிய இடமெல்லாம்
இவருக்குப் பரிசாக அளித்தது மட்டுமல்லாமல் நூறாயிரம் பொற்காசுகளும் தந்தான். ஆனால், கபிலர் தான் பெற்ற
பரிசையெல்லாம் பிறருக்கு அளித்து, பரிசிலராகவும்
துறவியாகவும் வாழ்ந்தார்.
இவர் வேள் பாரியின் நெருங்கிய நண்பர்.
வேள் பாரி இறந்தபின், அவன் மகளிர்க்குத் திருமணம்
செய்யும் பொறுப்பினை ஏற்றுக் கபிலர் பல முயற்சிகள் செய்தார். முடிவில், பாரி மகளிரை
ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் ஒப்படைத்துத் தான் வடக்கிருந்து உயிர் நீத்ததாகக்
கருதப்படுகிறது.
கபிலர் என்ற பெயருடைய வேறு சில புலவர்களும் இருந்ததாகத் தமிழ் இலக்கிய
ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பாடலின்
பின்னணி:
தலைவனோடு
கூடி மகிழ்ந்திருந்த தலைவி,
சிலநாட்களாகத் தலைவனைக் காணாததால் வருந்துகிறாள். குவளை மலர் போன்ற அவளுடைய அழகிய கண்கள் இப்பொழுது பசலை நோயுற்று ஒளி இழந்து
காணப்படுகின்றன. தன் நிலையைத் தன் தோழியிடம் தலைவி கூறுவதாக இப்பாடல்
அமைந்துள்ளது.
மாசறக்
கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே.
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே.
அருஞ்சொற்பொருள்: மாசு = அழுக்கு, புழுதி; கழீஇய
= கழுவிய; பெயல் = மழை;
உழந்த = தூய்மையுற்ற; இரு
= கரிய; பிணர் = சொரசொரப்பு
; துறுகல் = பாறை; பைதல்
= பசுமை; சேத்தல் = தங்குதல்,
கிடத்தல், உறங்குதல்; நாடன்
= குறிஞ்சி நிலத் தலைவன்; ஆர்தல் =அடைதல், பெறுதல்; அம் =
அழகு.
உரை:
தோழி, மேலே உள்ள தூசி முற்றிலும் நீங்கும்படிப் பாகனால் கழுவப்பட்ட யானையைப்
போன்ற, பெரிய மழையால் கழுவபட்ட கரிய, சொரசொரப்பான
பாறைக்கு அருகே பசுமையான ஓரிடத்தில் என்னோடு கூடியிருந்த குறிஞ்சி நிலத் தலைவன் இப்பொழுது
எனக்குக் காமநோயைத் தந்தான். அதனால் குவளை மலர் போன்ற என்னுடைய
அழகிய கண்கள் பசலை நோயுற்றன.
விளக்கம்: பாறையின்
இயல்பை மறைக்கும் மாசுகள் இல்லாத நாட்டிற்குத் தலைவன், அவ்வியல்புக்கு மாறாக என் கண்களின் இயல்பை மறைக்கும் பசலை நோயை எனக்குத் தந்தான்
என்று தலைவி உள்ளுறை உவமமாகக் கூறுவதாகத் தோன்றுகிறது.
இப்பாடலில், கருப்பொருளாக யானையும், குவளை மலரும், குறிஞ்சி நிலத் தலைவனும் உரிப்பொருளாக தலைவி தலைவனோடு கூடியிருந்ததும் குறிப்பிடப்படுவதால்,
இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment