6. நெய்தல் - தலைவி கூற்று
பாடியவர்: பதுமனார். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது.
பாடலின் பின்னணி: தலைவி தலைவனைப் பிரிந்திருக்கிறாள். பிரிவினால் விளைந்த
வருத்தத்தால் அவளால் தூங்க முடியவில்லை. நள்ளிரவில் அனைவரும்
உறங்கிய பிறகும் தான் மட்டும் தூங்க
முடியாமல் பட்ட துன்பத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.
நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
அருஞ்சொற்பொருள்: நள் = நடு, செறிதல், மிகுதிப்பொருள் தரும் ஓர் இடைச்சொல், இரவு; யாமம் = நள்ளிரவு; அவிந்து
= ஓய்ந்து ; மாக்கள் = ஐய்யறிவு
உடையவர்கள், மனிதர்; முனிவு = வெறுப்பு, வருத்தம்; நனம்
= அகற்சி; நனந்தலை =அகன்றவிடம்;
துஞ்சுதல் = தூங்குதல்; மன்ற
= உறுதியாக.
உரை: நடு
இரவு இருள் மிகுந்ததாக உள்ளது. மனிதர்கள் அனைவரும் பேசுவதை நிறுத்திவிட்டு,
இனிமையாக உறங்குகின்றனர். அகன்ற இடத்தையுடைய இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் வருத்தமின்றி உறங்குகின்றன.
நான் ஒருத்தி மட்டும் (உறுதியாகத்) தூங்காமல் இருக்கிறேன்.
விளக்கம்: இப்பாடலில், தலைவி “மாக்கள்”
என்று குறிப்பிடுவது அவள் வீட்டில் உள்ளவர்களைக் குறிக்கும்.
அவர்கள் அனைவரும் அவளுடைய மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதால்,
சினமுற்ற தலைவி, அவர்களை ஐய்யறிவு உடையவர்கள் என்று
குறிப்பிடுகிறாள் என்று கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
இப்பாடலில், உரிப்பொருளாகிய
இரங்கல் குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் நெய்தற் திணையைச்
சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment