20.
பாலை - தலைவி கூற்று
பாடியவர்:
கோப்பெருஞ்சோழன். கிள்ளி வளவனுக்குப்
பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவன் கோப்பெருஞ் சோழன். ஆனால் கிள்ளிவளவனுக்கும் கோபெருஞ்சோழனுக்கும்
என்ன உறவு என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கோப்பெருஞ் சோழன் சிறந்த தமிழ்ப் புலமை உடையவனாக இருந்தான் என்பது இவன்
புறநானூற்றில் இயற்றிய மூன்று பாடல்களிலிருந்தும், குறுந்தொகையில்
இவன் இயற்றிய நான்கு பாடல்களிலிருந்தும் (20, 53, 129, 147) தெரியவருகிறது. இவனுக்கும் இவனுடைய இருமகன்களுக்கும் இடையே பகை
மூண்டது. பகையின் காரணத்தால், தன் மக்களை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான். புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய புலவர்
பெருமக்கள் கூறிய அறிவுரைக்கேற்ப கோப்பெருஞ்சோழன் போர் செய்யும் எண்ணத்தைக்
கைவிட்டான். தன் மக்களுடன் தோன்றிய
பகையால் வருத்தமடைந்த கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான். இவனைப்
பாடியவர்கள்: பிசிராந்தையார், புல்லாற்றூர் எயிற்றியனார்,
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், பொத்தியார்.
பாடலின்
பின்னணி:
பொருள்
தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறன். தன் காதலனைப் பிரிந்திருக்கும் தலைவியைக் காண அவள் தோழி வருகிறாள்.
தலைவன் பிரிந்து சென்றது அறிவுடைய செயல் அன்று என்று தலைவி தோழியிடம்
கூறுகிறாள்
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
அருஞ்சொற்பொருள்: அருள் = எல்லா உயிரினங்களிடத்தும் உண்டாகும் இயல்பான இரக்கம்; அன்பு = தொடர்பு உடையவர்களிட்த்து நாம் காட்டும் பாசம்;
துறந்து = பிரிந்து; வயின்
= இடம், ஏழாம் வேற்றுமை உருபு; உரவு = அறிவு, வலிமை; மடம் = அறியாமை.
உரை: தோழி!, அருளையும் அன்பையும் துறந்து, தம் துணைவியைப் பிரிந்து,
பொருள் தேடும் பொருட்டு, சென்ற நம் தலைவர்,
அறிவுடையவராயின், அந்த
ஆற்றலை உடைய அவர் அறிவுடையவராகவே இருக்கட்டும். அவரைப் பிரிந்திருத்தற்குரிய ஆற்றல் இல்லாத நாம், அறிவில்லாதவர்களாகவே
இருப்போம்.
விளக்கம்: தன்
காதலன் பொருள் தேடும் பொருட்டுத் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றதைத் தலைவி அறிவுடைய
செயலாகக் கருதவில்லை.
ஆகவே, வஞ்சப் புகழ்ச்சியாக, தன் காதலனை அறிவிற் சிறந்தவனாகக் கூறுகிறாள்.
இப்பாடலில், பாலைத்திணைக்குரிய உரிப்பொருளாகிய பிரிதலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதால்,
இப்பாடல் பாலைத்திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment