Sunday, June 14, 2015

38. குறிஞ்சி - தலைவி கூற்று

38. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 13 –இல் காணலாம்.

பாடலின் பின்னணி: திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலைவி வருந்துகிறாள். தலைவியைக் காண்பதற்குத் தோழி வருகிறாள். தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி, “ திருமணத்திற்குப் பொருள் திரட்டுவதற்காகத்தானே உன் தலைவர் உன்னைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறார். அவர் விரைவில் திரும்பி வருவார். பிரிவைப் பொறுத்துக்கொள்என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். ஆனால், தலைவி, “பிரிவைப் பொறுத்துக்கொள்ளும் ஆற்றல் மனவலிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இருக்கும். அது எனக்கு இல்லையே! “ என்று கூறுகிறாள்.

கான மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரொ டொராங்குத் தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே. 

அருஞ்சொற்பொருள்: கானம் = காடு; மஞ்ஞை = மயில்; அறை = பாறை; ஈனுதல் = பெறுதல்; முசு = குரங்கு (கருங்குரங்கு); குருளை = குட்டி; கேண்மை = நட்பு; நன்று = பெருமை; உண்கண் = மை தீட்டிய கண்கள்; உள்ளாது = நினையாது; ஒராங்கு =  ஒரு படியாக; தணத்தல் = பிரிதல்.

உரை: தோழி! நீ வாழ்க! காட்டிலுள்ள மயில்  பாறையில் ஈன்ற முட்டைகளை, வெயிலில் விளையாடும் குரங்குக் குட்டிகள் உருட்டும் இடமாகிய, மலைநாட்டையுடையவனாகிய தலைவனது நட்பு என்றும் பெருமைக்குரியது. ஆனால், அவன் என்னைவிட்டுப் பிரிந்ததால், மை தீட்டிய என் கண்களிலிருந்து நீர் பெருகுகின்றன. அந்தப் பிரிவை நினைத்து ஒரேயடியாக வருந்தாமல், பொறுத்துக்கொள்ளும் ஆற்றல், மனதில் வலிமை உடையவர்களுக்கு மட்டுமே இருக்கும். எனக்கு அது இல்லையே!


விளக்கம்: குரங்குக் குட்டிகள் மயிலின் முட்டையை உருட்டி விளையாடுவதால் முட்டை உடைந்து அழியக்கூடும். அதுபோல், தலைலவனுடைய பிரிவால் தலைவியின்  காதல் முறியக்கூடும் என்று உள்ளுரை உவமமாகப் புலவர் கூறுவதாகத் தோன்றுகிறது. மயிலின் முட்டையை குரங்குக் குட்டிகள் உருட்டி விளைடுவதைப் போல் தலைவனின் பிரிவினால் அவனுக்கும் தலைவிக்கும் இடையே உள்ள காதல் ஊராரால் எள்ளி நகையாடப்படுகிறது என்றும் பொருள்கொள்ளலாம்.

No comments:

Post a Comment