Tuesday, June 30, 2015

42. குறிஞ்சி - தோழி கூற்று

42. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 –இல் காணலாம்.
பாடலின் பின்னணி: தலைவன் தலைவியோடு கூடி மகிழலாம் என்று எண்ணி, இரவு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருகிறான். அங்குத் தலைவி வரவில்லை. தோழி மட்டும் வருகிறாள். “இனி இரவு நேரங்களில் தலைவி வரமாட்டாள். இதுவரை நீ அவளோடு இரவு நேரங்களில் சந்தித்ததைப் போல் இனிமேல் சந்திக்க முடியாது. அதனால், உனக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பு குறையும் என்று எண்ண வேண்டாம்.” என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத் தியம்பு நாடவெம்
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே. 

அருஞ்சொற்பொருள்: காமம் = புணர்ச்சி; யாமம் = நள்ளிரவு (இரவு 10 மணி முதல் 2 மணி வரை); கருவி = மேகம்; மா = பெரிய; விடர் = மலைப் பிளப்பு; இயம்புதல் = ஒலித்தல்; தேய்தல் = குறைதல்; வயின் = இடம்.

உரை: நடு இரவில் மலையில் பெய்த பெருமழை, பின்னர் அருவியாக (மலைப்பிளப்புகளில்) ஒலிக்கும் குறிஞ்சிநிலத்தையுடையவனே! தலைவியோடு நீ கூடி மகிழாவிட்டாலும், உன்னிடத்தில் அவளுக்குள்ள நட்பு குறையுமோ?  

விளக்கம்: தலைவன் முதலில் பகல் நேரங்களில் தலைவியைச் சந்தித்தான். பின்னர் இரவு நேரங்களில் சந்தித்தான். இருவருக்கும் இடையே உள்ள காதல் அடுத்த நிலைக்குச் சென்றது. தலைவன் அவளோடு உடலுறவு கொள்வதில் மிகவும் ஆர்வமுடையவனாக இருக்கிறான். இரவு நேரங்களில் தலைவனை மறைமுகமாகச் சந்தித்தாலும், அவர்களுடைய நட்பையும் செயல்பாடுகளையும் பலரும் அறிய வாய்ப்பு இருக்கிறது. மற்றும், தலைவனோடு உறவு கொள்வதால் பிற பின்விளைவுகளும் ஏற்படலாம். இதைப் பற்றி எல்லாம் எண்ணிப் பார்த்த தலைவிதலைவனை இரவில் சந்திப்பதை நிறுத்திவிட்டால், அவன் விரைவில் திருமணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வான் என்று எண்ணுகிறாள். ஆகவே, தன் தோழியை அனுப்பித் தான் இனி தலைவனை இரவு நேரங்களில் சந்திக்க முடியாது எபதையும், அதனால் தான் அவனை விரும்பவில்லை என்றோ அவளுக்கும் அவனுக்கும் இடையே உள்ள நட்பு குறைந்துவிடும் என்றோ அவன் எண்ண வேண்டாம் என்பதையும் தெரிவிக்கிறாள்.


 இரவில் மலையில் பெய்த மழை பின்னர் அருவிகளிலிருந்து விழும் நீரில் இருந்து தெரியவரும் என்பதுதலைவனும் தலைவியும் யாருக்கும் தெரியாமல் உறவு கொண்டாலும், தலைவியின் செயல்பாடுகள், அவள் உடலில் தோன்றும் மாற்றங்கள் ஆகியவற்றால் அவர்களின் உறவைப் பலரும் அறியக்கூடும்என்பதை உள்ளுறை உவமமாகப் புலவர் குறிப்பிடுகிறார்

No comments:

Post a Comment