Tuesday, June 30, 2015

45. மருதம் - தோழி கூற்று

45. மருதம் - தோழி கூற்று

பாடியவர்: ஆலங்குடி வங்கனார்.  இவரது இயற்பெயர் வங்கன். இவர் சோழ நாட்டிலுள்ள ஆலங்குடி என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் ஆலங்குடி வங்கனார் என்று அழைக்கப்பட்டார். இவர் அகநானூற்றில் ஒருபாடலும் (106), குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (8,45), நற்றிணையில் மூன்று பாடல்களும் (230, 330, 400), புறநானூற்றில் ஒருபாடலும் (319) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: தன் மனைவியைவிட்டு ஒருபரத்தை வீட்டுக்குச் சென்ற தலைவன் மீண்டும் தன் மனைவியோடு வாழவிரும்புகிறான். ஆகவே, ஒரு பாணனைத் தலைவியிடம் தூதுவனாக அனுப்புகிறான். தலைவியும் தோழியும் உரையாடிக்கொண்டிருக்கும் இடத்திற்குத் தூதுவன் வருகிறான். தலைவன் மீண்டும் வரவிரும்புகிறான் என்று தூதுவன் கூறியதைக் கேட்ட தலைவி, தலைவன் வருவதற்குச் சம்மதிக்கிறாள். தலைவன் எவ்வளவு கொடுமைகளைச் செய்தாலும் அவற்றை எல்லாம்  பொறுத்துக் கொண்டு தலைவன் வரவுக்குத் தலைவி உடன்பட்டதைக் கண்டு தோழி வியக்கிறாள்.


காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்ல லூரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே. 

அருஞ்சொற்பொருள்: கடு = விரைவு; வால் = மிகுதி; தழீஇய = தழுவ; மல்லல் = வளமை; எல் = ஒளி, பெருமை; மறுவரல் = மயக்கம், கலக்கம்; தெறு = துன்பம்  ; திணை =  குடி.

உரை: காலையில் எழுந்து, விரைந்து செல்லும் குதிரைகளைத் தேரில் பூட்டி, மிகுந்த அணிகலன்களை அணிந்த பரத்தையரைத், தழுவும் பொருட்டு, வளமை பொருந்திய ஊரையுடைய தலைவன் சென்றான். அவன், மிகுந்த பெருமைக்குரியவன். அவன் மீண்டும் தன்னிடம் வந்தால் அவனை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்றெண்ணி, சிறுவனைப் பெற்ற தலைவி மனம் கலக்கம் அடைகிறாள். தலைவியின் மனம் கலங்கக்கூடிய செயலைத் தலைவன் செய்தாலும் அதனை மறந்து அவனைத் தலைவி  ஏற்றுக்கொள்வது துன்பத்திற்குரியதாயினும் அஃது இந்தக் குடியிற் பிறந்தவர் செய்யும் செயல் போலும்.


விளக்கம்:  வாலிழை மகளிர்என்றது மிகுந்த அளவில் அணிகலன்களை அணிந்து, இயற்கை அழகால் அன்றி, அவர்கள் அணிந்திருக்கும் அனிகலன்களின் அழகால்  ஆண்களை மயக்கும் பரத்தையரைக் குறிக்கிறது. உயர்ந்த குடியிற் பிறந்த கற்புடைய மகளிர் தம் தலைவர் கொடுமை புரிந்தாலும்  அதனை மறந்து அன்பு பாராட்டுதல் அக்குடிப் பிறப்பிற்குரிய இயல்பு என்னும் கருத்து  குறுந்தொகைப் பாடல்கள் 9 மற்றும் 10 ஆகியவற்றிலும் காணப்படுகிறது.

1 comment: