57.
நெய்தல் - தலைவி கூற்று
பாடியவர்:
சிறைக்குடி ஆந்தையார். இவரை பற்றிய செய்திகளைப் பாடல் 56 – இல் காணலாம்.
பாடலின்
பின்னணி:
தலைவனும் தலைவியும்
ஒருவரை ஒருவர் மிகவும் காதலிக்கிறார்கள். தன் மகளின் களவொழுக்கத்தை
அறிந்த தாய், தலைவியைக் கடுமையான காவலில் வைத்தாள். தலைவனைக் காணமுடியாததால், தலைவி மிகவும் வருந்துகிறாள்.
பிரிவினால் வாடும் தலைவிக்கு ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகம் போல் தோன்றுகிறது.
இந்தப் பிரிவினால் உண்டாகும் வருத்தத்தைத் தவிர்ப்பதற்கு ஒரேவழி,
தலைவனும் அவளும் ஒருங்கே இறப்பதுதான் என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
பூவிடைப்
படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவேம் ஆகிய வுலகத்
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவேம் ஆகிய வுலகத்
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.
அருஞ்சொற்பொருள்: இடைப்படுதல் = இடையில் வருதல்; யாண்டு = ஆண்டு (ஒருவருடம்); உறைதல் = வாழ்தல்; மகன்றில் = நீரில் வாழும் பறவை. (இந்தப் பறவை இனத்தில், ஆணும் பெண்ணும் எப்பொழுதும் சேர்ந்தே இருக்கும்); புணர்ச்சி = சேர்க்கை; தண்டா = நீங்காத; தில்ல – விழைவுக் குறிப்பு; கடன் = கடமை; இருவேம் = இருவர்; ஒருவேம் = ஒருவர்; புன்மை = துன்பம்; உயற்கு = தப்புதற்கு.
உரை: தோழி, செய்ய வேண்டிய கடமைகளுக்காக இருவேறு உடல் உடையவர்களாக இந்த உலகத்தில்
நானும் தலைவனும் இருந்தாலும் உள்ளத்தால் இணைந்து ஓருயிர் ஈருடலாகக் கருத்தொருமித்த
காதலர்களாக இருந்தோம். இப்பொழுது, ஒருவரை
ஒருவர் சந்திக்க முடியாத சூழ்நிலையில் பிரிந்து வாழ்கிறோம். நீரில் எப்பொழுதும் சேர்ந்தே இருக்கும்
மகன்றில் பறவைகள், பூ இடையே வந்ததால் சிறிது நேரம் பிரிய
நேரிடும் பொழுது, அந்தப்பிரிவு ஓராண்டுகாலம் கடந்தாற் போல அப்பறவைகளுக்குத்
துன்பத்தை உண்டாக்குமாம். இந்தப் பிரிவினால் நாங்கள் அந்தப் பறவைகளைப்
போல வருந்துகிறோம். இந்தத் துன்பத்திலிருந்து தப்புவதற்கு ஒரேவழி,
பிரிதலே இல்லாமல், நீங்காத காதலோடு எங்கள் இருவரின்
உயிரும் ஒருங்கே போகட்டும்.
விளக்கம்: நீர்வாழ்
பறவைகளுள் மகன்றிலும் ஒன்று. இப்பறவைகளுள், ஆணும் பெண்ணும் எப்பொழுதும் பிரிவின்றி இணைந்து வாழ்வனவாகக் கருதப்படுகின்றன.
எப்பொழுதும் இணைந்தே இருப்பதால், அவை நீரில் சென்றுகொண்டிருக்கும்
பொழுது அவை செல்லும் வழியில் ஒரு பூ குறுக்கே வந்தாலும் அந்தப் குறுகிய காலப் பிரிவைக்கூட
இப்பறவைகள் தாங்க முடியாமல் வருந்தும் என்று புலவர் கூறுகிறார்.
இப்பாடலின்
அடிப்படையில் சில திரைப்படல்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment