Sunday, July 12, 2015

58. குறிஞ்சி - தலைவன் கூற்று

58. குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடியவர்: வெள்ளி வீதியார். இவரை பற்றிய செய்திகளைப் பாடல் 27 – இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவிமீது தலைவன் தீராத காதலுடன், தான் செய்யவேண்டிய செயல்களையும் தன் கடமைகளையும் மறந்து எப்பொழுதும் தலைவி நினைவாகவே இருக்கிறான். தலைவனின் தோழன், “நீ இந்தக் காம நோயைப் பொறுத்துக்கொண்டு உன் கடமைகளைச் செய்வதுதான் சிறந்தது.” என்று தலைவனைக் கடிந்துரைக்கிறான். அதற்கு மறுமொழியாகத் தன் நிலைமையைத் தலைவன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. 

அருஞ்சொற்பொருள்: இடித்தல் = கண்டித்துரைத்தல்; கேளிர் = நண்பர்; குறை = குற்றம்; நிறுக்கல் = நிறுத்தல்; மன் = மிகுதி; தில்ல = தில்அசைச்சொல், விழைவுக் குறிப்பு; அறை = பாறை; மருங்கு = இடம்; உணங்கல் =  உருகுதல்; பரந்தன்று = பரவியது; நோன்றல் = பொறுத்தல்.

உரை: என்னைக் கண்டித்துரைக்கும் நண்ப! என்னுடைய குறையாக நீ கருதும் என் காமநோயை என்னால் தடுத்து நிறுத்த முடிந்தால் மிகவும் நன்றுதான்அதுவே என் விருப்பமும் ஆகும். கதிரவனின் வெயில் அடிக்கும் நேரத்தில் வெம்மையான பாறையிடத்தே, கையில்லாத ஊமை ஒருவன் கண்ணால் பாதுகாக்க முயலும், உருகிய  வெண்ணெயைப் போல்  இந்த காமநோய் என்னிடம் பரவியுள்ளது. அது பொறுத்துக்கொள்வதற்கு அரிதாக இருக்கின்றது.


விளக்கம்: வெப்பமான பாறையில் வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய் கதிரவனின் வெப்பத்தால் உருகாமல்  இருப்பதற்குப் பாதுகாவலாக ஒருவன் இருக்கிறான். அவன் இருகைகளும் இல்லாத ஊமன். அவனுக்குக் கைகளிருந்தால் அந்த வெண்ணையை எடுத்து வேறிடத்தில் வைத்து அவனால் பாதுகாக்க முடியும். அவனால் பேச முடிந்தால், பிறரை உதவிக்கு அழைக்கலாம். கைகளும் பேசும் திறமையும் இல்லாததால், பாதுகாவலாக இருப்பவன் உருகும் வெண்ணெயைத் தன் கண்களால் பார்த்துக்கொண்டு செயலற்ற நிலையில் இருக்கிறான். வெண்ணெய் கதிரவனின் வெப்பத்தால் உருகிப் பரவுவதைப் போலத் தலைவனின்  காமநோய் பரவுகிறது.. செயலற்ற நிலையில் வெண்ணையைப் பாதுகாக்க முடியாத கையில்லாத ஊமன் போலத், தலைவன் தன் காமநோயை அடக்கிப் பாதுகாப்பதற்குரிய ஆற்றலும் பிறரிடம் அதை வெளிப்படுத்தக்கூடிய நிலையிலும் இல்லாததால் அவனால் அவனுடைய காமநோயைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

57. நெய்தல் - தலைவி கூற்று

57. நெய்தல் - தலைவி கூற்று

பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார். இவரை பற்றிய செய்திகளைப் பாடல் 56 – இல் காணலாம்.

பாடலின் பின்னணி:  தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் மிகவும் காதலிக்கிறார்கள். தன் மகளின் களவொழுக்கத்தை அறிந்த தாய், தலைவியைக் கடுமையான காவலில் வைத்தாள். தலைவனைக் காணமுடியாததால், தலைவி மிகவும் வருந்துகிறாள். பிரிவினால் வாடும் தலைவிக்கு ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகம் போல் தோன்றுகிறது. இந்தப் பிரிவினால் உண்டாகும் வருத்தத்தைத் தவிர்ப்பதற்கு ஒரேவழி, தலைவனும் அவளும் ஒருங்கே இறப்பதுதான் என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவேம் ஆகிய வுலகத்
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே. 

அருஞ்சொற்பொருள்: இடைப்படுதல் = இடையில் வருதல்; யாண்டு = ஆண்டு (ஒருவருடம்); உறைதல் = வாழ்தல்; மகன்றில் = நீரில் வாழும் பறவை. (இந்தப் பறவை இனத்தில், ஆணும் பெண்ணும் எப்பொழுதும் சேர்ந்தே இருக்கும்); புணர்ச்சி = சேர்க்கை; தண்டா = நீங்காத; தில்லவிழைவுக் குறிப்பு; கடன் = கடமை; இருவேம் = இருவர்; ஒருவேம் = ஒருவர்; புன்மை = துன்பம்; உயற்கு = தப்புதற்கு.

உரை: தோழி, செய்ய வேண்டிய கடமைகளுக்காக இருவேறு உடல் உடையவர்களாக இந்த உலகத்தில் நானும் தலைவனும் இருந்தாலும் உள்ளத்தால் இணைந்து ஓருயிர் ஈருடலாகக் கருத்தொருமித்த காதலர்களாக இருந்தோம். இப்பொழுது, ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத சூழ்நிலையில் பிரிந்து வாழ்கிறோம்.  நீரில் எப்பொழுதும் சேர்ந்தே இருக்கும் மகன்றில் பறவைகள், பூ இடையே வந்ததால் சிறிது நேரம் பிரிய நேரிடும் பொழுது, அந்தப்பிரிவு ஓராண்டுகாலம் கடந்தாற் போல அப்பறவைகளுக்குத் துன்பத்தை உண்டாக்குமாம். இந்தப் பிரிவினால் நாங்கள் அந்தப் பறவைகளைப் போல வருந்துகிறோம். இந்தத் துன்பத்திலிருந்து தப்புவதற்கு ஒரேவழி, பிரிதலே இல்லாமல், நீங்காத காதலோடு எங்கள் இருவரின் உயிரும் ஒருங்கே போகட்டும்.  

விளக்கம்: நீர்வாழ் பறவைகளுள் மகன்றிலும் ஒன்று. இப்பறவைகளுள், ஆணும் பெண்ணும் எப்பொழுதும் பிரிவின்றி இணைந்து வாழ்வனவாகக் கருதப்படுகின்றன. எப்பொழுதும் இணைந்தே இருப்பதால், அவை நீரில் சென்றுகொண்டிருக்கும் பொழுது அவை செல்லும் வழியில் ஒரு பூ குறுக்கே வந்தாலும் அந்தப் குறுகிய காலப் பிரிவைக்கூட இப்பறவைகள் தாங்க முடியாமல் வருந்தும் என்று புலவர் கூறுகிறார்.


இப்பாடலின் அடிப்படையில் சில திரைப்படல்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

56. பாலை - தலைவன் கூற்று

56. பாலை - தலைவன் கூற்று

பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார். இவர் சிறைக்குடி என்னும் ஊரைச் சார்ந்தவராக இருந்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் குறுந்தொகையில் எட்டுப் பாடல்களும் (56, 57, 62, 132, 168, 222, 273, 300), நற்றிணையில் ஒருபாடலும் (16) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்ல விரும்புகிறான். தலைவியையும் உடன் அழைத்து செல்லுமாறு தோழி கூறுகிறாள். தலைவன் தலைவியை அழைத்துச் செல்லாமல் தனியே செல்கிறான். அவன் செல்லும் வழியில் ஒருபாலை நிலத்தைக் கடக்க வேண்டியதாக உள்ளது. அந்தப் பாலை நிலத்தின் கொடுமையைக் கண்ட தலைவன், தலைவியைத் தன்னுடன் அழைத்து வந்திருந்தால் அவள் மிகவும் துன்பப்பட்டு இரங்கத் தக்கவளாக இருந்திருப்பாள் என்று தனக்குத் தானே கூறிக்கொள்கிறான்.

வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்
வருகதில் அம்ம தானே
அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே. 
-
அருஞ்சொற்பொருள்: வேட்டச் செந்நாய் = மான், பன்றி, முயல் போன்ற விலங்குகளை வேட்டையாடும் நாய்கள்; கிளைத்தல் = கிளறுதல், தோண்டுதல்; மிச்சில் = எஞ்சிய
பொருள்; குளவி = காட்டு மல்லிகை; மொய்த்தல் = மூடுதல்; அழுகல் = அழுகிய; சின்னீர் = சிறிதளவு உள்ள நீர்; உணீயர் = உண்ண; தில்அசை நிலை ; அம்மஅசை நிலை ; அளியள் = இரங்கத் தக்கவள்;

உரை: விலங்குகளை வேட்டையாடும் காட்டுநாய்கள் தோண்டிய குழிகளில் தோன்றிய நீரில் அந்த நாய்கள் குடித்ததுபோக எஞ்சிய சிறிதளவு நீரைக் காட்டுமல்லிகைப் பூக்கள் விழுந்து மூடியதால், அந்த நீர் அழுகிய நாற்றமுடையதாக உள்ளது. வளையலை அணிந்த, என் நெஞ்சில் அமர்ந்த, என் தலைவி என்னோடு வந்திருந்தால் அந்த நீரை என்னோடு சேர்ந்து உண்ண வேண்டியதாக இருந்திருக்கும். அவள் மிகவும் இரங்கத் தக்கவளாக இருந்திருப்பாள்.


விளக்கம்: ஒருவர் உண்ட உணவில் எஞ்சியதைப் பிறர் உண்ணுவது அருவருக்கத் தக்கதாகும். நாய் குடித்ததில் எஞ்சியுள்ள நீரைக் குடிப்பது அதைவிட அருவருக்கத் தக்கது. நாய் குடித்து எஞ்சிய நீர் அழுகல் நாற்றமுடையதாக இருந்தால் அதைக் குடிப்பது எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அருவருப்புடையது. பாலை நிலத்தைக் கடந்து செல்லும் தலைவன் அத்தகைய நீரை உண்ண வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் பாலை நிலத்தின் கொடுமையை நினைத்துத் தலவன் வருந்துகிறான். ஆகவே, தலைவியைத் தன்னுடன் அழைத்து வராதாது ஒருநல்ல முடிவு என்று எண்னுகிறான்

55. நெய்தல் - தோழி கூற்று

55. நெய்தல் - தோழி கூற்று

பாடியவர்: நெய்தற் கார்க்கியர். கார்க்கியர் என்பது ஒரு முனிவரின் பெயர்.  அதுவே இவரது இயற்பெயராகும். நெய்தல் திணையைப் பாடும் ஆற்றல் மிகுந்தவராதலால் இவர் நெய்தல் கார்க்கியர் என்ற பெயரைப் பெற்றார் போலும். இவர் குறுந்தொகையில் இரண்டு பாடல்களை (55, 212) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: களவொழுக்கம் நீடிப்பதைத் தலைவி விரும்பவில்லை. அவள் விரைவில் தலைவனைத் திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறாள்திருமணத்திற்கான முயற்சிகளைத் தலைவன் செய்யாததைக் கண்டு தலைவி மிகவும் வருந்துகிறாள். தலைவியின் துயரத்தைக் கண்ட தோழியும் வருந்துகிறாள். தலைவியைக் காணவந்த தலைவன் மறைவான ஓரிடத்தில் இருக்கிறான். அவன் வந்திருப்பது தோழிக்குத் தெரியும். “விரைவில் திருமணம் நடைபெற  வேண்டும் என்ற மிகுந்த  விருப்பத்துடன் இருக்கிறாள். திருமணத்திற்கான  காலம் நீடிப்பதால் தலைவி மிகவும் வருந்துகிறாள், இந்நிலையில் அவள் இந்த ஊரில் அதிக நாட்கள் வாழமாட்டாள்.” என்று தலைவனுக்குக் கேட்குமாறு தோழி கூறுகிறாள்.

மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்
பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட் டாகும்
சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே. 

அருஞ்சொற்பொருள்: மா = கருமை; கழி = உப்பங்கழி; மணி = நீலமணி; கூம்புதல் = குவிதல்; தூ = தூய்மை; திரை = அலை; பிதிர் = பிசிர் = துளி மழை; துவலை = மழைத்தூவல்; மங்குல் =  மேகம்; தைஇ = பொருந்திய; கையறுதல் = செயலற்ற நிலை; தைவரல் = தடவுதல்; ஊதை = வாடைக்காற்று; இன்னா = துன்பம் தருபவை; உறையுள் =  ஆயுள், தங்குமிடம்; சின்னாட்டு = சில்+நாட்டு = சில நாட்களையுடையது; அம்மஅசை நிலை.

உரை:  கரிய உப்பங்கழியில் உள்ள நீலமணி போன்ற நெய்தல் மலர்கள் கூம்பும் மாலை நேரத்தில்,  தூய அலைகளிடத்திலிருந்து பொங்கிவரும் நீர்த்துளிகளோடு பொருந்திய மேகத்தோடுகூடிய  வாடைக்காற்று தங்கள் காதலர்களைப் பிரிந்தவர்கள் செயலறுமாறு வீசுகிறது. இத்தகைய துன்பங்களைத் தரும் இந்தச் சிறிய நல்ல ஊரில், இன்னும் சிலநாட்களே வாழமுடியும்.

விளக்கம்: மணிப்பூ என்பது நீலமணி போன்ற முள்ளி  அல்லது நெய்தல் மலரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ”கூம்பஎன்று கூறியது மலர்கள் கூம்பும் மாலை நேரத்தைக் குறிக்கிறது.    ”இன்னாவுறையுட்டாகுஞ் சின்னாட்டம்ம இவ்வூர்'” என்று ஊரைக் குறிப்பிட்டாலும்,  ”தலைவி இன்னும் சில நாட்களே இவ்வூரில் உயிர் வாழ்வாள்; அந்தச் சிலநாட்களும் துன்பம் தரும் இயல்புடையவைஎன்று தோழி கூறுவதாகப் பொருள்கொள்வது பொருந்தும். அதனால், தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தோழி வலியுறுத்துவதாகத் தோன்றுகிறது.


 ”சிறு நல்லூர்என்று கூறியதால், இன்னா உறையுளும், சிலநாட்களாதலும் ஊரின்மேல் உள்ள குறையன்று என்று தோழி கூறுவதாகத் தோன்றுகிறது

54. குறிஞ்சி - தலைவி கூற்று

54. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: மீனெறிதூண்டிலார்.   யானையால் கைவிடப்பட்டு நிமிரும் மூங்கிலுக்கு மீனெறி தூண்டிலை உவமையாகக் கூறிய சிறப்பினால் இச்செய்யுளை இயற்றிய புலவர் மீனெறி தூண்டிலார் என்னும் பெயர் பெற்றார். இவரது இயற்பெயர் தெரியவில்லை.

பாடலின் பின்னணி: தலைவனோடு கூடிக் களவொழுக்கத்தில்  இருந்த பொழுது, ஒருநாள் தலைவி தலைவனோடு கூடி மகிழ்ச்சியாக இருந்தாள்.  அதற்குப் பிறகு, தலைவனைச் சிலகாலமாகக் காணவில்லை. தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளையும் செய்யவில்லை. அவனைக் காணததால் தன்னுடைய மகிழ்ச்சியை இழந்துவிட்டதாகத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

யானே யீண்டை யேனே யென்னலனே
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலி னிவக்கும்
கானக நாடனொ டாண்டொழிந் தன்றே. 
-
அருஞ்சொற்பொருள்: ஈண்டு = இவ்விடம்; நலன் = இன்பம், அகமகிழ்ச்சி; ஏனல் = தினைப்புனம்; கவண் = கல்லை எறிவதற்குப் பயன்படுத்தப்படும் கருவி; வெரீஇ = அஞ்சி; கானம் = காடு; கழை = மூங்கில்; நிவத்தல் = உயர்தல்; கானகம் = காடு; ஆண்டு = அவ்விடம்.

உரை: தோழி, நான் மட்டும்தான் இங்கே இருக்கிறேன். முன்பு என்னோடு கூடியிருந்த என்னுடைய மகிழ்ச்சி இப்பொழுது இங்கு இல்லை. அஃது, மீன் பிடிப்பவர்கள், மீன் தூண்டிலில் சிக்கியதை உணர்ந்து தூண்டிலை விரைவாக மேலே தூக்குவதைப்போல்  தினைப் புனங் காப்பவர்கள் விடும் கவண்கல்லின் ஒலிக்கு அஞ்சி விரைவாகக்  காட்டு யானை கைவிட்ட பசுமையான மூங்கில் உள்ள காட்டுக்குரிய தலைவனோடு சென்றொழிந்தது.

விளக்கம்: மூங்கிலைத் தின்றுகொண்டிருந்த காட்டுயானை, கவண்கல்லின் ஒலியைக் கேட்டு அங்கிருந்து விரைவாக விலகிச் சென்றது என்றது  ஊராரின் அலரால் தலைவியின் பெண்மை நலத்தைத் துய்த்த தலைவன் அவளை விட்டு வெகு விரைவாக விலகிச் சென்றுவிட்டான் என்பதை உள்ளுறை உவமாகக் குறிக்கிறது.


இப்பாடலில் ஐந்து அடிகளிலும் எதுகை வருவது குறிப்பிடத்தக்கது

53. மருதம் - தோழி கூற்று

53. மருதம் - தோழி கூற்று

பாடியவர்: கோப்பெருஞ் சோழன். இவரை பற்றிய செய்திகளைப் பாடல் 20 – இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவியைத் திருமணம் செய்துகொள்வதாகத் தலைவன் உறுதிமொழி அளித்தான். ஆனால், திருமணத்திற்கான முயற்சிகளைத் தலைவன் செய்யவில்லை. தலைவன் திருமணத்திற்குக் காலம் தாழ்த்துவதால் தோழியும் தலைவியும் வருந்துகிறார்கள். தோழி தலைவனை நோக்கி, “ நீ கொடுத்த உறுதிமொழிகளை நீ நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது எங்களை வருத்துகிறது. ஆகவே, நீ தலைவியை விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.” என்று கூறுகிறாள்.

எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோ டுற்ற சூளே. 

அருஞ்சொற்பொருள்: அணங்குதல் = வருத்துதல்; மகிழ்நன் = மருதநிலத் தலைவன்; முன்றில் = முற்றம்; நனை = அரும்பு; புன்கு = புன்க மரம்; தாழ் = மேலிருந்து விழுதல்; வேலன் = வெறியாட்டம் ஆடுபவன் (முருகன் கோயில் பூசாரி); புனைதல் = அலங்கரித்தல்; அயர்தல் = விளையாடுதல், உணர்வழிதல்; வான் =  வெண்மையான; எக்கர் = மணல் மேடு; நண்ணிய = நெருங்கிய; வியன் = அகன்ற; நேரிறை = நேர் + இறை; நேர் = நுட்பம், செவ்வை, தகுதி; இறை =  கையில் அணியும் தொடி; சூரரமகளிர் = தெய்வமகளிர் ; சூள் = உறுதி மொழி (சத்தியம்).

உரை: மருதநிலத் தலைவனே! வேலன் (வெறியாட்டு நடத்துபவன்) அழகாக அமைத்த வெறியாட்டு நடைபெறும் இடத்தில் செந்நெல்லின் வெண்ணிறமான பொரியைச் சிதறியது போல, முற்றத்தில் அரும்புகளாக இருந்து  முதிர்ந்த புன்க மரத்தின் மலர்கள் உதிர்ந்து கிடக்கும் வெண்மையான மணல்மேடுகள் பொருந்திய எமது ஊரில் உள்ள பெரிய நீர்த்துறையில், தன் கைகளில் நல்ல வளையல்களை அணிந்த தலைவியின் முன்கையைப் பற்றி அச்சம் தரும் தெய்வமகளிர்முன் நீ கொடுத்த உறுதிமொழிகள் எம்மை வருத்துகின்றன.

விளக்கம்: தலைவன் தலைவியை மணந்துகொள்வதாகத்  தெய்வங்களின் முன்னிலையில் உறுதிமொழி அளித்தான். ஆனால், திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல் காலம் தாழ்த்துகிறான். தலைவன் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிடுவோனோ என்று தோழியும் தலைவியும் அஞ்சி வருந்துகிறார்கள். தெய்வங்களின் முன்னிலையில் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றவிட்டால் உறுதிமொழி கொடுத்த தலைவனுக்கு தீங்கு விளையும் என்ற அச்சம் தோழிக்கும் தலவிக்கும் இருக்கலாம் என்று எண்ணுவதற்கும் இடமுள்ளது.


புன்கின் பூக்கள் பொரியைச் சிதறினாற் போலத் தோன்றுகிறது என்றது தலைவன் அளித்த பொய்யான உறுதிமோழி மெய்போலத் தோன்றி தங்களைக் கலக்கமுறச் செய்தது என்று தோழியும் தலைவியும் எண்ணுவதாகவும் பொருள்கொள்ளலாம்.

52. குறிஞ்சி - தோழி கூற்று

52. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: பனம்பாரனார்.  அகத்தியரின் மாணவருள் பனம்பாரனார் என்பவர் ஒருவர். அவர் பனம்பாரம் என்ற இலக்கண நூலை இயற்றியவராகவும்தொல்காப்பியத்துக்குப் பாயிரம் இயற்றியவராகவும் கருதப்படுகிறார். அந்தப் பனம்பாரனாரும் இப்பாடலை இயற்றியவரும் ஒருவர்தானா என்பது ஆய்வுக்குரியது. சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே உள்ளது.

பாடலின் பின்னணி: திருமணத்திற்கான முயற்சிகளைத் தலைவன் செய்வதையும், தலைவியின் பெற்றோர்கள் அதனை ஏற்றுக் கொண்டதையும் அறிந்து மகிழ்ந்த தோழி, தலைவியை நோக்கி, “நீ வருந்துவதை அறிந்த நான், உன் காதலைப் பற்றிய உண்மையை உன் தாய்க்கு  அறிவித்தேன்; அதனால் உன் திருமணம் விரைவில் நடைபெறப்போகிறது.” என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
நிரந்திலங்கு வெண்பல் மடந்தை
பரிந்தனென் அல்லனோ இறையிறை யானே.

அருஞ்சொற்பொருள்: ஆர் = பொருந்திய; களிறு = ஆண் யானை (யானை); திகழ்தல் = விளங்குதல்; சிலம்பு = பக்க மலை; சூர் = தெய்வம்; நசை = விருப்பம்; நரந்தம் =  ஓருவகைப்பூ (நாரத்தை); குவை = திரட்சி; நிரந்துவரிசையாக; பரிதல் = பரிந்து பேசுதல்; இறை = சிறிது; இறையிறை = கொஞ்சம் கொஞ்சமாக (பலமுறை).

உரை: நரந்தம்பூவின் மணம் கமழும் திரண்ட கரிய கூந்தலையும், வரிசையாக விளங்கும் வெண்மையான பற்களையுமுடைய பெண்ணே (தலைவியே)!  யானைகள் மிதித்ததால் உண்டாகிய பள்ளத்தில் தங்கிய நீர் விளங்கும் மலைப் பக்கத்திலுள்ள தெய்வத்தால் விரும்பப்பட்டவளைப் போல் நீ நடுங்கியதை அறிந்து, உன் வருத்தத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத நான் அதை நினைத்து நினைத்துப் பலமுறை உனக்காகப் பரிந்து பேசினேன் அல்லனோ?


விளக்கம்: சூர் நசைந்த அனையாய் நடுங்கல்”  என்பது தெய்வம் ஏறிய பெண்ணின் உடல் நடுங்குவதைக் குறிக்கிறது. இங்கு சூர் என்பது குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகனைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ”தலைவனுக்கும் உனக்கும் திருமணம் நடைபெறாதோ என்று நீ வருந்தி நடுங்கியபொழுதெல்லாம் நானும் வருந்தினேன். உன் காதலைப் பற்றி உன் பெற்றோர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் உன் திருமணத்திற்குச் சம்மதித்துவிட்டார்கள். உனக்கும் நீ விரும்பும் உன் தலைவனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். ஆகவே, நீ வருந்தாதே!” என்று தோழி கூறுவதாகத் தோன்றுகிறது

51. நெய்தல் - தோழி கூற்று

51. நெய்தல் - தோழி கூற்று

பாடியவர்: குன்றியனார். இவரை பற்றிய செய்திகளைப் பாடல் 50 – இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவியை மணந்துகொள்வதற்கான முயற்சிகளில் தலைவன் ஈடுபட்டுகொண்டிருக்கிறான். ஆனால், திருமணம் நடைபெறுமோ அல்லது அதற்கு ஏதாவது தடை வருமோ என்று தலைவி கவலைப்படுகிறாள். “உன் தலைவனை எனக்குப் பிடித்திருக்கிறது. உன் தாய்க்கும் அவனைப் பிடித்திருக்கிறது. உன்னை அவனுக்குத்தான் உன் தந்தை திருமணம் செய்து கொடுக்கப் போகிறார். ஊரில் அதைப் பற்றித்தான் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.” என்று தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுகிறாள்.

கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானும் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரும் அவனொடு மொழிமே. 

அருஞ்சொற்பொருள்: கூன் = வளைவு ; கூன்முண் = கூன் +முள் = வளைந்த முள்; முண்டகம் =  ஒரு செடி (கழி முள்ளி); கூர் = மிகுதி; பனி = குளிர்ச்சி; மா = கருமை; கால் = காற்று; பாறுதல் = சிதறுதல்; தூ = தூய்மை; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்; யாய் = தாய் (தலைவியின் தாய்); நனி = மிகவும்; வெய்து = விருப்பத்தைக் கொடுப்பது; எந்தை = எம்+தந்தை (தலைவியின் தந்தையைக் குறிக்கிறது); கொடீஇயர் = கொடுக்க; அம்பல் = சிலர் அறிந்த அலர் (சிலர் அறிந்த பழிமொழி)

உரை: வளைந்த  முட்களை உடைய கழிமுள்ளியின் மிகுந்த குளிர்ச்சியான கரிய மலர்கள், நூலறுந்ததால் உதிர்ந்த முத்துக்களைப் போல, காற்றில் சிதறி, நீர்த்துறைகளுள்ள இடங்கள்தோறும் பரவும் தூய மணலையுடைய கடற்கரைக்குத் தலைவனை எனக்குப் பிடித்திருக்கிறது. உன் தாய்க்கும் அவனை மிகவும் பிடித்திருக்கிறது. உன் தந்தையும் உன்னை அவனுக்கே திருமணம் செய்துகொடுக்க விரும்புகிறார். உங்கள் காதலைப் பற்றி அறிந்த ஊர்மக்கள் உன்னையும் உன் தலைவனையும் சேர்த்தே பேசுகிறார்கள்.

விளக்கம்: முட்கள் நிறைந்த முள்ளியிடத்திலுள்ள முண்டக மலரைப் பறித்தால் அதிலுள்ள முட்கள் பறிப்பவரின்  கைகளை வருத்தும். ஆனால், காற்றில் பறந்து கடற்கரையில் பரவிக் கிடக்கும் முண்டக மலர்களைப் பறிப்பது எளிது அதுபோல், தலைவன் தலைவியின் காதலைப் பற்றிய செய்தி ஊர் மக்களிடம் பரவியிருப்பதாலும், தலைவனைத் தோழி, தலைவியின் தாய் மற்றும் தந்தை ஆகியோருக்குப் பிடித்திருப்பதாலும், தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் நடைபெறுவது எளிதாகிவிட்டது  என்பது குறிப்பு.


தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்துகொடுக்கும் உரிமை தந்தைக்கே உரியதாகையால், ‘எந்தையுங் கொடீஇயர் வேண்டும்.என்று தோழி கூறுகிறாள் என்று தோன்றுகிறது.