59.
பாலை - தோழி கூற்று
பாடியவர்: மோசி கீரனார். இவர் மோசி என்பவரின் மகன் என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர், இவர் மோசுக்குடி அல்லது மோசிக்குடி என்ற ஊரைச் சார்ந்தவராக இருந்ததாலும், கீரர் குடியினராக இருந்ததாலும் மோசிகீரனார் என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். இவர் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறையையும் கொண்கான நாட்டுத் தலைவனையும் பாடியுள்ளார். இவர் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறையைக் காணச் சென்றபோது களைப்பு மிகுதியால் அங்கிருந்த முரசுக் கட்டிலில் படுத்து உறங்கினார். அதைக் கண்ட சேரமன்னன், இவரை உறக்கத்திலிருந்து எழுப்பாமல் இவருக்குக் கவரி வீசிய செய்தியைப் புறநானூற்றுப் பாடல் 50-இல் காணலாம். ”நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்ற கருத்துச் செறிவுள்ள பாடல் (புறநானூறு - 186) இவர் இயற்றிய பாடல்களில் ஒன்று. இவர் புறநானூற்றில் ஐந்து செய்யுட்களும் (50, 154, 155, 156, 186) அகநானூற்றில் ஒரு செய்யுளும் ( 392), குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களும் (59, 84), நற்றிணையில் ஒரு செய்யுளும் (342) இயற்றியவர்.
பாடலின்
பின்னணி:
தலைவன்
பொருள் தேடச் சென்றிருக்கிறான். அவன் பிரிவால் வருந்தும் தலைவிக்குத்
தோழி ஆறுதல் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அதலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்
நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்
சுரம்பல விலங்கிய அரும்பொருள்
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே.
அருஞ்சொற்பொருள்: பதலை = ஒருகண் பறை ; பாணி = இசை, ஒலி; பரிசிலர் = பரிசுகள் வேண்டிப் பிறரிடம் இரப்பவர்; கோமான் = அரசன், தலைவன்; அதலை = ஒரு குன்றின் பெயர் ; அகல்வாய் = அகன்ற வாய்; குண்டு = ஆழம்; சுனை = நீர்நிலை; குளவி = காட்டு மல்லிகை; பொதிதல் = நிறைதல்; நுதல் = நெற்றி; முயலவும் = முயற்சிகளைச் செய்தாலும்; விலங்குதல் = குறுக்கிடுதல்.
உரை: பதலை
என்னும் இசைக்கருவியை தாளத்தோடு இயக்கும் பாணர் முதலிய இரவலர்களைப் பாதுகாக்கும் தலைவனுடைய அதலை என்னும் குன்றில்
உள்ள அகன்ற வாயையுடைய ஆழமான நீர்நிலைகளில் மலர்ந்த குவளை மலர்களோடு நிறைந்த காட்டு
மல்லிகையும் மணக்கும் உன்னுடைய மணம் கமழும் நெற்றியைத் தலைவர் மறப்பாறோ? பல முயற்சிகளைச் செய்தாலும்,
பாலை நிலத்தில், பல குறுக்கீடுகளால் கிடைத்தற்கரிய
பொருள் முற்றிலும் கை கூடாததால் தலைவரின் பிரிவு நீடிக்காது, அவர் விரைவில் திரும்பி வருவார்.
No comments:
Post a Comment