76. குறிஞ்சி - தலைவி கூற்று
பாடியவர்:
கிள்ளி மங்கலங்கிழார். இவர் குறுந்தொகையில் நான்கு பாடல்கள் (76, 110,
152, 181) இயற்றியுள்ளார்.
பாடலின்
பின்னணி:
தலைவன்
தலைவியை விட்டுப் பிரிந்து செல்லப் போகிறான் என்ற செய்தியை அறிந்த தோழி அதைத் தலைவியிடம்
கூற வந்தாள்.
ஆனால், அந்தச் செய்தி தலைவிக்கு முன்பே தெரியும்.
ஆகவே, தலைவி, “அவர் செல்வதை
நீ தடுத்து நிறுத்தாமல், இப்பொழுது என்னிடம் வந்து அவர் பிரிந்து
செல்லப் போகிறார் என்று சொல்லுகிறாயே!” என்று கூறுகிறாள்.
காந்தள் வேலி ஓங்குமலை நல்நாட்டுச்
செல்ப என்பவோ கல்வரை மார்பர்
சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள்ளிலை
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇத்
தண்வரல் வாடை தூக்கும்
கடும்பனி அச்சிரம் நடுங்கஞர் உறவே.
-
கொண்டுகூட்டு: சிலம்பிற்
சேம்பின் வள்ளிலை, வாடை தைஇ அலங்கல் பெருங்களிற்றுச் செவியின் மான தண்வரல் தூக்கும் கடும்பனி அச்சிரம் நடுங்கஞர்
உறவே கல்வரை மார்பர் காந்தள் வேலி ஓங்குமலை
நல்நாட்டுச் செல்ப என்ப.
அருஞ்சொற்பொருள்: காந்தள் = வெண்காந்தள் மலர்; ஒங்கல் = உயர்ச்சி;
செல்ப = செல்வார்; என்ப
= கூறுகின்றனர்; வரை = மலை;
சிலம்பு = பக்கமலை; சேம்பு
= ஒருவகைச் செடி (சேப்பங்கிழங்குச் செடி)
; அலங்கல் = அசைதல்; வள்
= வளம்; களிறு = ஆண் யானை ( யானை); மானல் = ஒத்தல்;
தைஇ = தடவி; தண்
= குளிர்ச்சி ; தண்வரல் = குளிர்ச்சியைக் கொண்டுவரும் ; வாடை = வாடைக் காற்று; தூக்கும் = அசைக்கும்;
அச்சிரம் = முன்பனிக்காலம்; அஞர் = துன்பம்.
உரை:
தோழி,
மலைப் பக்கத்திலுள்ள சேம்பினது செழுமையான இலைகளைத் தடவிக்கொண்டு வாடைக்காற்று
வருகிறது. அந்த வாடைக்காற்றில், சேம்பின்
இலைகள், பெரிய யானையின் காதுகளைப்போல் அசைகின்றன. குளிர்ச்சியோடு வரும் அந்த வாடைக்காற்று வீசும் கடுமையான பனியையுடைய முன்பனிக்காலத்தில்,
நான் நடுங்கும்படியான துன்பத்தை அடையும்படி, கற்களையுடைய மலையைப் போன்ற
மார்பையுடைய என் தலைவர், காந்தளை வேலியாகயுடைய உயர்ந்த மலை
பொருந்திய நல்ல நாட்டிற்கு என்னைப் பிரிந்து செல்வார் என்று கூறுகின்றனர்.
விளக்கம்: ”கல்வரை மார்பர்” என்று தலைவி தலைவனைக் குறிப்பிடுவது,
முன்பனிக்காலத்தில் தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லுவதை அவள் விரும்பாததால்
அவனை இரக்கமற்ற கல்நெஞ்சினன் என்று கூறுவதைக் குறிக்கிறது.
No comments:
Post a Comment