78.
குறிஞ்சி - பாங்கன் கூற்று
பாடியவர்:
நக்கீரனார். இவர் மதுரைக் கணக்காயனாரின் மகன் என்பதனால் மதுரைக் கணக்காயனார்
மகனார் நக்கீரனார் என்றும் அழைக்கப்பட்டார்.
இவரும் மதுரை நக்கீரர் என்பவரும் ஒருவரே என்பது ஒரு சாரர் கருத்து. வேறு சிலர், மதுரை நக்கீரர்
வேறு இவர் வேறு என்பர். இவர்
கடைச்சங்கத்தின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தெளிந்த அறிவும் சிறந்த புலமையும்
உடையவர். இவர் புறநானூற்றில் மூன்று
செய்யுட்களையும் (56, 189, 395), அகநானூற்றில் 17 செய்யுட்களையும், நற்றிணையில் 7 செய்யுட்களையும், குறுந்தொகையில் 6 செய்யுட்களையும் ( 78, 105, 161, 266, 280, 368) இயற்றியவர். மற்றும் பத்துப்பாட்டில் முதலாவதாகிய
திருமுருகாற்றுப்படையையும் ஏழாவதாகிய நெடுநல்வாடையையும் இயற்றியவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இறையனார் அகப்பொருளுக்கு இவர் எழுதிய உரை
மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
குறுந்தொகையில், ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்று தொடங்கும் பாடலைச்
(குறுந்தொகை - 2) சிவபெருமான் இயற்றியதாகக்
கருதப்படுகிறது. அப்பாடலில் பொருள்
குற்றம் இருப்பதாக நக்கீரர் கூறியதாகவும், அப்பொழுது
சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து தான் யார் என்பதை நக்கீரருக்குத்
தெரிவித்ததாகவும், நக்கீரர், ‘நெற்றிக்
கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே’ என்று சொன்னதாகவும்
திருவிளையாடற் புராணத்தில் கூறப்படுகிறது.
பாடலின் பின்னணி: தலைவன்
ஒரு பெண்மீது காதல் கொண்டிருக்கிறான். அவன் காதல் ஒருதலைக்
காதலாகத் தோன்றுகிறது. தன்னுடைய காதல் வெற்றி பெறாததால்,
தலைவன் உடல் மெலிந்து காணப்படுகிறான். தலைவனுடைய
மெலிந்த தோற்றத்தைக் கண்ட தோழன் (பாங்கன்) தலைவனுக்கு அறிவுரை கூறி, அவனைத் தேற்றுகிறான்.
பெருவரை மிசையது நெடுவெள் ளருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச்
சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப
நோதக் கன்றே காமம் யாவதும்
நன்றென உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே.
கொண்டுகூட்டு: பெருவரை மிசையது நெடுவெள் அருவி முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச் சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப ! காமம் யாவதும்
நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்து. (அது) நோதக்கன்றே !
அருஞ்சொற்பொருள்: வரை = மலை; மிசை = மேல், உச்சி; முதுமை = பேரறிவு;
வாய் = வாய்த்த;கோடியர்
= கூத்தர்; முழவு = முரசு;
ததும்புதல் = முழங்குதல்; சிலம்பு =பக்கமலை; இழிதல்
= விழுதல்; இலங்குதல் = விளங்குதல்;
வெற்பன் = குறிஞ்சிநிலத் தலைவன்; யாவதும் = சிறிதும்; நோதக்கது
= துன்பம் தரும் தன்மையது.
உரை: பெரிய
மலையின் உச்சியிலுள்ள,
நெடிய வெண்மையான அருவியானது, மிகுந்த அறிவுடைய
கூத்தர்களின் முரசைப் போல ஒலித்து, பக்கமலையில் விழுகிறது.
அத்தகைய, விளங்குகின்ற மலைகளையுடைய குறிஞ்சிநிலத் தலைவ!
காமமானது, சிறிதும், இது நன்மையென உணரும் அறிவில்லாதவர்களிடத்தும்
சென்று தங்குகின்ற, பெரிய அறிவின்மையையுடையது; ஆதலின் அது, துன்பம் தரும் தன்மையையுடையது.
விளக்கம்:
மிக உயர்ந்த மலையின் உச்சியிலுள்ள அருவி மிகத்தாழ்ந்த மலையில் வீழ்ந்தது போல, மிகுந்த
பெருமையையுடைய தலைவன், அவனுடைய பெருமையையும் அறிவையும் நீக்கிக்
காமங்கொண்டான் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம். மற்றும்,
அந்த அருவியின் ஒலி தலைவனைப் பற்றி ஊர் மக்கள் எழுப்பும் அலரைக் குறிப்பதாகவும்
கொள்ளலாம்.
சென்ற
இடத்தாற் செல்விடா தீதொரீஇ
நன்றின்பால்
உய்ப்பது அறிவு. (குறள் – 422)
என்ற குறள், தீயவழிகளில் மனத்தைச் செலுத்தாது நல்ல வழிகளில் மனத்தைச் செலுத்துவது அறிவு
என்கிறது. காமம் அதன் நன்மையை உணராதவரிடத்தும் செல்வதால் அதைப்
பேதை என்று இப்பாடலில் புலவர் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது. ”காமத்துக்குக் கண்ணில்லை” என்னும் பழமொழி இங்கு நினைவு
கூரத்தக்கது.
இப்பாடலில், தலைவனின் காதல் ஒருதலைக் காதலாகத் தோன்றுகிறது. தன்னைக்
காதலிக்காத ஒருவரைக் காதலிப்பவர்கள் தங்கள் மான உணர்வைப் பற்றிக் கவலைப்படமாட்டர்கள்
என்ற கருத்து,
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அரிவதொன்று அன்று. (குறள் – 1255)
என்ற குறளில் காணப்படுவது இங்கு ஒப்பு
நோக்கத்தக்கது.
No comments:
Post a Comment