103. தலைவி கூற்று
பாடியவர்: வாயிலோன் தேவனார்.
வாயில் என்பது ஓர் ஊர். இவர் அவ்வூரைச் சர்ந்தவராக
இருந்தமையால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் குறுந்தொகையில் இரண்டு பாடல்களை (103, 108) இயற்றியுள்ளார்.
திணை: நெய்தல்.
கூற்று:
பருவங்
கண்டு அழிந்த
(வருந்திய) தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: கூதிர் காலம் ( ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்) வந்த
பின்னரும் தலைவன் வராததால் துன்பமுற்ற தலைவி, தோழியை நோக்கி,
“ வாடைக்காலமும் வந்துவிட்டது. அவர் இன்னும் வரவில்லையே.
இனி, நான் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்
இறக்கப் போகிறேன்.” என்று கூறுகிறாள்.
கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்
கவிரிதழ் அன்ன தூவிச் செவ்வாய்
இரைதேர் நாரைக் கெவ்வ மாகத்
தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும்
வாரார் போல்வர்நங் காதலர்
வாழேன் போல்வல் தோழி யானே.
கொண்டு
கூட்டு:
தோழி! கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல் இரைதேர்
கவிர் இதழ் அன்ன தூவிச் செவ்வாய் நாரைக்கு எவ்வம் ஆகத் துவலைத் தூஉம் துயர்கூர் வாடையும் நம் காதலர் வாரார் போல்வர்; யான் வாழேன் போல்வல்.
அருஞ்சொற்பொருள்: கடு = விரைவு ; புனல் = ஆறு, நீர்; கடும்புனல் = விரைவாக ஓடிவரும்
நீர்; தொகுத்த = குவித்த; அஞர் = துன்பம்; அள்ளல்
= சேறு; கவிர் = முள்ளுமுருங்கை
; தூவி = சிறகு; தேர்தல்
= ஆராய்தல், (தேடுதல்) எவ்வம்
= துன்பம்; தூஉம் = தூவும்;
துவலை = நீர்த்துளி; கூர்தல்
= மிகுதல்; வாடை = குளிர்
காற்று ( வடக்கிலிருந்து வரும் காற்று).
உரை: தோழி, விரைவாக ஓடிவரும் வெள்ளத்தால் குவிக்கப்பட்ட, நடுங்கும்படியான
துன்பத்தைத் தரும் சேற்றில், மீனாகிய உணவைத் தேடுகின்ற,
முள்ளு முருங்கை மலரின் இதழைப் போன்ற மெல்லிய இறகையும், சிவந்த அலகையும் உடைய நாரைக்கு துன்பம் உண்டாகும்படித் தூவுகின்ற
நீர்த்துளிகளையுடைய, துயரம் மிகுந்த வாடைக்காற்று வீசும் கூதிர் காலத்திலும் நம்முடைய தலைவர் வரமாட்டார் போலிருக்கிறது.
நான் இனி உயிர் வாழமாட்டேன்.
சிறப்புக்
குறிப்பு:
வாடைக்
காற்று வீசும் இந்தக் குளிர்காலத்தில், நாரையும் தான் இரை தேடும்பொழுது
துன்பப் படுகிறது. ஆனால், தலைவர் தன்னுடைய
பொருள்தேடும் முயற்சியை ஒழித்துத் தன்னிடம் திரும்பி வரமாட்டாரோ என்று தலைவி என்ணுவதாகத்
தோன்றுகிறது,
No comments:
Post a Comment