90.
தோழி கூற்று
பாடியவர்: மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார். இவருடைய இயற்பெயர் பூதன் என்றும் இவர் சேந்தன் என்பவரின் மகன் என்றும் கருதப்படுகிறது. இவர் அரசரின் கட்டளைகளை எழுதும் தொழிலை உடையவர். இவர் குறுந்தொகையில் மூன்று பாடல்களும் (90, 226, 247), நற்றிணையில் இரண்டு பாடல்களும் ( 69, 261) அகநானூற்றில் ஒரு பாடலும் (84, 207) இயற்றியுள்ளார்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவு
நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகத் தோழி கூறியது.
கூற்று விளக்கம் : தலைவனும்
தலைவியும் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். தலைவன் திருமணத்திற்கான
முயற்சிகளைச் செய்யவில்லை. அவர்களுடைய உறவு ஊரில் பலருக்கும்
தெரிய ஆரம்பித்தது. அதனால், அலர் தோன்றியது.
தலைவன் திருமணத்திற்குக் காலம் தாழ்த்துவதை எண்ணி வருந்தித் தலைவி உடல்
மெலிந்தாள். ஒருநாள் இரவு, தலைவியைக் காணவந்த
தலைவன் வேலிக்குப் புறத்தில் மறைவான இடத்தில் நின்றுகொண்டிருக்கிறான். தலைவன் அங்கே இருப்பதை அறிந்த தோழி,
அவன் காதில் கேட்கும்படி, “ உடல் மெலிந்தாலும்,
நீ இன்னும் மன அமைதியோடும் உறுதியோடும் இருக்கிறாயே ! அது எப்படி?” என்று தன் வியப்பைத் தலைவியிடம் கூறுகிறாள்.
எற்றோ வாழி தோழி முற்றுபு
கறிவளர் அடுக்கத் திரவின் முழங்கிய
மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்
கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி
வரையிழி அருவி உண்துறைத் தரூஉம்
குன்ற நாடன் கேண்மை
மென்தோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே.
கொண்டுகூட்டு: தோழி ! வாழி ! கறிவளர் அடுக்கத்து இரவின் முழங்கிய முற்றுபு
மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க் கலைதொட
இழுக்கிய பூநாறு பலவுக்கனியை வரையிழி அருவி உண்துறைத்
தரூஉம் குன்றநாடன் கேண்மை மென்தோள்
சாய்த்தும் சால்பு ஈன்றன்றே ! எற்றோ !
அருஞ்சொற்பொருள்: எற்று = எத்தகையது; முற்றுபு = முற்றிய; கறி
= மிளகு; அடுக்கம் = மலைப்பக்கம்;
மங்குல் = மேகம்; மா
= பெரிய; பொங்குதல் = மிகுதல்;
கலை = ஆண் கருங்குரங்கு; இழுக்கிய = நழுவிய; பூநாறு
= பூ போன்ற மணத்தையுடைய; பலவுக்கனி = பலாப்பழம்; வரை = மலை; இழிதல் = விழுதல்; உண்துறை
= நீர் உண்ணும் துறை; தரூஉம் = தரும்; கேண்மை = நட்பு; சால்பு = மன
அமைதி, உறுதி போன்ற நற்பண்புகள்; ஈனுதல்
= தருதல்.
உரை: தோழி ! நீ வாழ்க ! மிளகுக்கொடி வளர்கின்ற மலைப்பக்கத்தில், இரவில் கரிய
மேகம் முழக்கத்தோடு பெரிய மழையைப் பெய்ததால், மிகுந்த மயிரையுடைய
ஆண் கருங்குரங்கு தீண்டியதால் நழுவிய, பூ போன்ற மணத்தை
வீசும் பலாப்பழத்தை, மலைப்பக்கத்தில் விழும் அருவி, நீருண்ணுந் துறைக்குக் கொண்டுவருகின்ற
குன்றுகள் உள்ள நாட்டையுடைய தலைவனது நட்பு, உன் மெல்லிய தோள்களை மெலியச்
செய்தாலும், அமைதியைத் தந்தது ! இஃது எத்தகையது!
சிறப்புக் குறிப்பு: இரவில் பொழிந்த பெருமழையினால் குரங்கு தீண்டிய பலாப்பழம் ஊர் மக்கள் நீருண்ணும்
துறைக்கு வந்து சேர்ந்தது என்பது களவொழுக்கத்தில் தலைவனோடு இருந்த தொடர்பு இப்பொழுது
ஊர் மக்கள் பலருக்கும் தெரியும் வகையில் அலராகத் தோன்றியுள்ளது என்பதை உள்ளுறை உவமமாகக்
குறிக்கிறது.
”எற்று” என்றது தலைவனின் நட்பால் தோன்றிய அலரால் உடல் மெலிந்தாலும் தலைவி மன அமைதியோடும்
உறுதியோடும் இருப்பதைக் கண்டு தோழி வியப்பதைக் குறிக்கிறது.
|
No comments:
Post a Comment