104. தலைவி கூற்று
பாடியவர்:
காவன் முல்லைப்பூதனார். இவரது இயற்பெயர் பூதனார். காவன் முல்லை என்பது புறத்திணைத்
துறைகளுள் ஒன்று. இவர் அத்துறையைப் பாடும் வல்லமை உடையவர் என்று கருதப்படுகிறது. காவன் முல்லை என்பது வாகைத்திணையைச் சார்ந்த ஒருதுறை.
அரசன் நாட்டைப் பாதுகாப்பதைச் சிறப்பித்துக் கூறுவது காவன் முல்லை எனப்படும்.
இவர் குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (104, 211), அகநானூற்றில்
ஐந்து பாடல்களும் ( 21, 151, 241, 293, 391) நற்றிணையில் ஒருபாடலும்
(274) இயற்றியுள்ளார்.
திணை: பாலை.
கூற்று - 1: பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள்
தோழிக்குக் கூறியது.
கூற்று - 2: சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ என்ற தோழிக்குக் கிழத்தி (தலைவி) கூறியதூஉமாம்.
கூற்று விளக்கம்: தலைவன்
நீண்ட நாட்களாகத் தலைவியைப் பிரிந்திருக்கிறான். அப்பிரிவை பொறுத்துக்கொள்ள
முடியாத தலைவி, “பின்பனிக்
காலத்தில் (பின்பனிக் கால்லம் – மாசி,
பங்குனி; கார்காலம் – ஆவணி,
புரட்டாசி) பிரிந்த தலைவர் பல நாட்களாகியும் இன்னும்
வரவில்லையே” என்று தனக்குத் தானே கூறியதாகவோ, “அவர் செய்த நன்மைகளை நினைத்து, பிரிவை மறப்பதற்கு முயற்சி
செய்.” என்று அறிவுரை கூறிய தோழிக்குத் தலைவி, ”என்னால் தலைவரின் பிரிவைப் பொறுத்துகொள்ள
முடியவில்லையே ! ” என்று கூறியதாகவோ இப்பாடல் அமைந்திருப்பதாகக்
கருதலாம்.
அம்ம வாழி தோழி காதலர்
நூலறு முத்தின் தண்சிதர் உறைப்பத்
தாளித் தண்பவர் நாளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்
பிரியும் நாளும் பலவா குபவே.
கொண்டு
கூட்டு:
வாழி ! தோழி ! அம்ம ! நூலறு முத்தின்
தண்சிதர் உறைப்பத் தாளித்தண் பவர் நாள் ஆ மேயும் பனிபடு நாளே காதலர் பிரிந்தனர்; பிரியும் நாளும் பல ஆகுப !
அருஞ்சொற்பொருள்: அம்ம
–
முன்னின்றாரை அழைக்கப் பயன்படும் அசைச்சொல்; சிதர்தல்
= சிதறுதல்; உறை = துளி;
தாளி = ஒருவகை அறுகு (நீண்ட
புல்); தண்
= குளிர்ச்சி; பவர் = கொடி;
பனிபடுநாள் = பனி பேயும் காலம்.
உரை: தோழி, நீ வாழ்க! நம் தலைவர், முத்துமாலையில்
இருந்த நூல் அறுபட்டதால் சிதறிக் கிடக்கும் முத்துக்களைப் போலக் குளிர்ந்த
பனித்துளிகளை உடைய குளிர்ந்த தாளியறுகின்
கொடியை, விடியற்காலத்தில் பசுக்கள் மேயும், பனி வீழ்கின்ற பின்பனிக் காலத்திலே என்னைப் பிரிந்து சென்றார்; அங்ஙனம் அவர் பிரிந்து சென்று பல நாட்கள் ஆகின்றன; நான் எங்ஙனம் பொறுத்துக்கொள்வேன்?
சிறப்புக்
குறிப்பு:
பின்பனிக்
காலம் தலைவனும் தலைவியும் கூடியிருப்பதற்குரிய காலம். அத்தகைய பின்பனிக்காலத்தில் தன் கணவன் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றதை அவன்
தனக்குச் செய்த கொடுமையாகத் தலைவி கருதுகிறாள். பிரிந்த கணவன்
விரைவில் திரும்பி வந்திருந்தால் அந்தக் கொடுமையை அவள் மறந்திருப்பாள். ஆனால், பிரிந்து சென்றவன் பலநாட்களாகியும் வரவில்லை என்பதை
நினைத்துத் தலைவி வருந்துகிறாள்.