108.
தலைவி கூற்று
பாடியவர்: வாயிலான் தேவனார். இவரைப்
பற்றிய குறிப்புகளைப் பாடல் 103 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று:
பருவங்கண்டு
அழிந்த
(வருந்திய) தலைமகள் தோழிக்குக் கூறியது.
கூற்று விளக்கம்: கார்காலம் வந்தும் தலைவன் இன்னும் திரும்பிவரவில்லை. அத்தகைய கார்காலத்தில், ஒருநாள்
மாலைப்பொழுதில், தன் கணவனின் பிரிவை நினைத்துத் தலைவி
வருந்துகிறாள். தான் இனி உயிர் வாழ மாட்டேன் என்று தோழியிடம்
கூறுகிறாள்.
மழைவிளை யாடுங் குன்றுசேர்
சிறுகுடிக்
கறவை கன்றுவயிற் படரப் புறவிற்
பாசிலை முல்லை ஆசில் வான்பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று
உய்யேன் போல்வல் தோழி யானே.
கறவை கன்றுவயிற் படரப் புறவிற்
பாசிலை முல்லை ஆசில் வான்பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று
உய்யேன் போல்வல் தோழி யானே.
கொண்டு
கூட்டு:
தோழி ! மழை விளையாடும் குன்றுசேர் சிறுகுடிக் கறவை
கன்றுவயிற் படரப் புறவிற் பாசிலை முல்லை ஆசில் வான்பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று;
உய்யேன் போல்வல் யானே.
உய்யேன் போல்வல் யானே.
அருஞ்சொற்பொருள்: மழை = மேகம்; சிறுகுடி = சிற்றூர்;
கறவை = பாற்பசு; வயின்
= இடம்; புறவு = முல்லை
நிலம்; பாசிலை = பசுமையான இலை; ஆசில் = ஆசு + இல்; ஆசு = குற்றம்; வான் = சிறப்பு; செவ்வான் = செ+வான் = சிவந்த வானம்; செவ்வி
= அழகு; உய்யேன் = உயிர்
வாழேன்.
உரை: தோழி! மேகங்கள் விளையாடும் மலையைச் சார்ந்த சிற்றூரில், மேய்வதற்காகச்
சென்றிருந்த கறவைப் பசு தன் கன்றை நோக்கிச் செல்லுகிறது. சிவந்த
முல்லை நிலத்தில், பசுமையான இலைகளையுடைய முல்லையினது
குற்றமற்ற சிறந்த பூக்கள், சிவந்த வானத்தில் உள்ள
விண்மீன்கள் போல் அழகாகக் காட்சி அளிக்கின்றன. இத்தகைய கார்காலத்தில், மாலைநேரத்தில், என் தலைவர் என்னோடு இல்லாததால் நான்
உயிர் வாழ மாட்டேன் போலிருக்கிறது.
No comments:
Post a Comment