Monday, December 7, 2015

115. தோழி கூற்று

115.  தோழி கூற்று

பாடியவர்: கபிலர். இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று:. உடன்போக்கு ஒருப்படுத்து (தலைவியைச் சம்மதிக்க வைத்து) மீளுந் தோழி தலைமகற்குக் கூறியது.
கூற்று விளக்கம்:  தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் மிகவும் காதலிக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. பெற்றோர்களை விட்டுவிட்டுத் தன்னுடன் வந்துவிடுமாறு தலைவன் தலைவியை வற்புறுத்துகிறான். தலைவி அவ்வாறு செய்வதற்குத் தயங்குகிறாள். ஆனால், தோழி தலைவனோடு செல்லுவதுதான் சரியான செயல் என்று தலைவிக்குச் சமாதானம் கூறி, அவளைத் தலைவனோடு அனுப்புகிறாள். அப்பொழுது, ”இவளுக்கு உன்னைத் தவிர வேறு எவரும்  இல்லை. ஆகவே, எக்காலத்திலும் நீ இவளை அன்போடு பாதுகாப்பாயாக!” என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

பெருநன் றாற்றிற் பேணாரும் உளரே
ஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு
புலவி தீர அளிமதி இலைகவர்
பாடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்
நன்மலை நாட நின்னல திலளே. 

கொண்டுகூட்டு: ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல்  மெல் நடை மரையா இலை கவர்பு  துஞ்சும் நன் மலை நாட! பெருநன்று ஆற்றின் பேணாரும் உளரே ? ஒருநன்று உடையள் ஆயினும் புரி மாண்டு புலவி தீர அளிமதி! நின் அலது இலளே.

அருஞ்சொற்பொருள்: பேணுதல் = போற்றுதல்; புரிதல் = விரும்புதல்; மாண்டு = மாட்சிமைப்பட்டு; புலவி = ஊடல், வெறுப்பு; அளி = அருள், இரக்கம்; மதி - முன்னிலை அசைச்சொல்; கவர்பு = கவர்ந்து; அமை = மூங்கில்; ஒழுகுதல் = நீளுதல்; தண் = குளிர்ச்சி; மரையா = காட்டுமான்; துஞ்சும் = தூங்கும்.

உரை: அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த, குளிர்ச்சியும் மணமும் உடைய மலைப் பக்கத்தில், மெல்லிய நடையையுடைய காட்டுமான்கள்,  இலைகளை விரும்பி உண்டு, தூங்குதற்குரிய இடமாகிய நல்ல மலை நாட்டையுடைய தலைவ! பெரிய நன்மையொன்றை ஒருவர் தமக்குச் செய்தால், அங்ஙனம் செய்தாரைப் போற்றாதாரும் உளாரோ? யாவரும் போற்றுவர்; அது சிறப்பன்று; இத்தலைவி சிறிதளவு நன்மையைப் பெற்றவளாக இருக்கும் காலத்திலும் (முதுமைக் காலத்திலும்), இவளிடம் சிறந்த விருப்பத்தோடு, வெறுப்பின்றி  இவளைப் பாதுகாப்பாயாக; இவள் உன்னையன்றி வேறு பற்றுக்கோடு இல்லாதவள்.


சிறப்புக் குறிப்பு:  ”உளரேஎன்பதில் உள்ள  ஏகார வினா எதிர்மறைப் பொருள் தந்தது. காட்டுமான் தனக்குப் பயன்படாது ஓங்கி வளர்ந்த மூங்கில்களையுடைய மலைச்சாரலில் தனக்குப் பயன்படும் இலைகளைத் தேடி, விரும்பி உண்டு மகிழ்ச்சியுடன் தூங்குவதைப்போல் முதுமைப் பருவத்தில் தலைவி உனக்கு உதவி செய்ய இயலாதவளாக இருந்தாலும், அவள் இளமைப் பருவத்தில் உனக்குச் செய்த நன்மைகளை நினைத்து,  நீ அவளை அன்போடு பாதுகாக்க வேண்டும் என்று தோழி கூறுகிறாள்.

No comments:

Post a Comment