Saturday, January 16, 2016

132. தலைவன் கூற்று

132. தலைவன் கூற்று

பாடியவர்: சிறைக்குடியாந்தையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 56-இல் காணலாம்.
திணை:
குறிஞ்சி.
கூற்று: கழற்றெதிர்மறை. (கழறு எதிர்மறை - தோழன் இடித்துரைத்தபோது தலைவன் அதனை எதிர் மறுத்துக் கூறியது.)
கூற்று விளக்கம்: அறிவிற் சிறந்த நீ, ஒரு பெண்ணுக்காக இவ்வாறு மனமுடைந்து வருந்துவது அழகாகுமா என்று இடித்துரைத்த தோழனை நோக்கித் தலைவியின் இயல்பையும் அழகையும் கூறி, “இத்தகைய தன்மையுடையவளை நான் எப்படி மறந்து  வாழ்வேன்?” என்று தலைவன் கூறுகிறான்.

கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள்
குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே
யாங்குமறந் தமைகோ யானே ஞாங்கர்க்
கடுஞ்சுரை நல்லா னடுங்குதலைக் குழவி
தாய்காண் விருப்பி னன்ன
சாஅய்நோக் கினளே மாஅ யோளே.

கொண்டுகூட்டு: தோழ! மாஅயோள் கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்; குவவும் மென்முலையள்; கொடிக் கூந்தலள்;  ஞாங்கர்க் கடுஞ்சுரை நல் ஆன் நடுங்குதலைக் குழவி தாய்காண் விருப்பின் அன்ன, சாஅய் நோக்கினளே!  யான் யாங்கு மறந்து அமைகோ?

அருஞ்சொற்பொருள்:  கவவுதல் = தழுவுதல்; கடுமை = விரைவு; கடுங்குரையள் = விரைவுடையவள்; குரை  - அசை; காமர் = விருப்பம்; வனப்பு =  அழகு; குவவு = குவிந்த; ஞாங்கர் = பக்கம்; கடுத்தல் = விரைதல்; சுரை = பசுவின் பால் சுரக்கும் சுரப்பிகள் (பசுவின் முலைகள்); ஆன் = பசு; குழவி = கன்று; சாஅய் நோக்கு = ஒருக்கணித்த பார்வை.

உரை: தோழ! தலைவி மாமை (கருமை) நிறத்தை உடையவள்; தழுவுவதில் விரைவுடையவள்; விருப்பம் தரும் அழகுடையவள்; குவிந்த மென்மையான மார்பகங்களை உடையவள்; கொடிபோன்ற நீண்ட கூந்தலை உடையவள். பக்கத்தில் மேயச் சென்ற, விரைவாகப் பால் சுரக்கும் முலைகளையுடைய நல்ல பசுவின்நடுங்கும் தலையையுடைய கன்று, அத்தாய்ப் பசுவைக் காண வேண்டும் என்ற விருப்பத்தோடு பார்ப்பதுபோல ஒருக்கணித்துப் பார்க்கும் பார்வையையுடையவள்; இத்தகையவளை  நான் எப்படி மறந்து வாழ்வேன்?

சிறப்புக் குறிப்பு: வனப்பு என்பது  பல உறுப்புக்களிலும் காணப்படும் அழகைக் குறிக்கிறது. தான் அவளை விரும்புவது மட்டுமல்லாமல், தலைவியும் அவனை விரும்புகிறாள் என்றும் அவள் அவனை ஆவலோடு விரைந்து தழுவினாள் என்றும் தலைவன் கூறுகிறான். கடுஞ்சுரையென்றது விரைவாகப் பால் சுரக்கும் பசு என்பதைக் குறிக்கிறது. ”நடுங்குதலைஎன்றது கன்றின் இளமையைக் குறிக்கிறது.

 ”கன்று பசுவைப் பார்ப்பதைப் போல் தலைவி என்னை அன்போடு பார்க்கும் பண்புடையவள்மற்றும் அவள் மனம் கவரும் இயல்புடையவள். ஆகவே, அவளை  மறந்து அமைதல் அரிது என்று தலைவன் கூறுகிறான்.  தலைவனுக்குப் பசுவும் தலைவிக்குக் கன்றும் உவமை.  

ஏகாரங்கள் அசைநிலை; அமைகோ: ஓகாரம் இரக்கக் குறிப்பு; அசைநிலையுமாம்.

No comments:

Post a Comment