134. தலைவி
கூற்று
பாடியவர்: கோவேங்கைப்
பெருங்கதவனார். இவர் இயற்றியதாகக் குறுந்தொகையில்
உள்ள இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடை ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியால் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வருந்துகிறாள். ”தலைவர் விரைவில் வந்துவிடுவார். வருந்தாதே.” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். “தலைவரின் நட்பு சிறந்ததுதான். அவர் என்னைவிட்டுப் பிரியாமல் இருந்திருந்தால் அந்த நட்பு மிகவும் நன்றாக இருந்திருக்கும். பிரிவினால் எனக்கு வருத்தம் உண்டாகிறது. என்னால் அந்த வருத்தத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே!” என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
அம்ம வாழி தோழி நம்மொடு
பிரிவின் றாயின் நன்றுமற் றில்ல
குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப்
பூவுடை அலங்குசினை புலம்பத் தாக்கிக்
கல்பொரு திரங்கும் கதழ்வீழ் அருவி
நிலங்கொள் பாம்பின் இழிதரும்
விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே.
கொண்டுகூட்டு: தோழி! வாழி! அம்ம! குறும் பொறைத்தடைஇய
நெடுந்தாள் வேங்கைப் பூவுடை அலங்குசினை புலம்பத் தாக்கிக் கல்பொருது இரங்கும் கதழ்வீழ்
அருவி, நிலங்கொள் பாம்பின் இழிதரும் விலங்குமலை நாடனொடு கலந்த நட்பு, நம்மொடு பிரிவு இன்றாயின் நன்று
மன்! தில்ல!
அருஞ்சொற்பொருள்: அம்ம = இடைச் சொல்,
கேட்பாயாக என்னும் பொருளில் வந்துள்ளது; மன் = உறுதியாக; தில் = விழைவுக் குறிப்பு; தில்ல = விருப்பம்; பொறை = குன்று; தடைஇய = திரண்ட; வேங்கை = ஒருவகை மரம்;
அலங்குதல் = அசைதல்; புலம்பு = தனிமை; பொருது = மோதி; இரங்குதல் = ஒலித்தல்; கதழ் = விரைந்து; இழிதருதல் = இறங்கி வருதல்;
விலங்கு = குறுக்கானது;
விலங்குமலை
= குறுக்கிடும் மலை.
உரை: தோழி!, வாழ்க! நான் கூறுவதைக் கேட்பாயாக! குறுகிய கற்களின் இடையே பருத்து வளர்ந்த, உயர்ந்த அடிப்பக்கத்தை உடைய வேங்கை மரத்தின், அசையும்
கிளைகளில் மலர்கள் மலர்ந்திருக்கின்றன. அந்த மலர்களை நீக்கித் தனிமைப்படுத்தும்படி, அடித்து, கற்களை அலைத்து, ஒலிக்கும், விரைந்து வீழும் அருவி, நிலத்தைத் தனக்குரிய இடமாக ஊர்ந்து செல்லும் பாம்பைப்போல, இறங்குதற்கிடமாகிய, ஒன்றோடொன்று குறுக்கிடும் மலைகளையுடைய நாட்டுக்குத் தலைவனோடு நமக்கு உண்டான தொடர்பு, தலைவன் பிரியாமல் இருந்தால் நிச்சயமாக நன்றாகும். அதுவே என் விருப்பம்.
சிறப்புக் குறிப்பு: மலையிலிருந்து
விழும் அருவி பாம்புபோல் தோற்றம் அளிக்கிறது. அந்த அருவி,
கீழே உள்ள கற்களின் மேலே விழுந்தவுடன் அருவியைக் காணமுடியாது. இந்தக் காட்சி, மண்ணுக்குள் ஊர்ந்து சென்று மறையும் பாம்புபோல் தோற்றம் அளிக்கிறது. அருவி மலையிலிருந்து கீழே விழுந்து வேங்கைமரத்திலிருந்து பூக்களைத் தனிமைப் படுத்தியதைப்போல், தன் நலத்தை அழித்துத் தலைவன் தன்னைத் தனிமைப் படுத்தினான் என்று தலைவி கருதுகிறாள். மற்றும், அருவி, வேங்கை மரத்தின் பூக்களைத் தாக்கித் தனிமைப் படுத்திய பிறகு, பாம்பு மண்ணுக்குள் மறைந்ததைப்போல் மலையிலுள்ள கற்களிடையே விழுந்து அருவி மறைந்தது, தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றதை உள்ளுறை உவமமாகக் குறிக்கிறது.
No comments:
Post a Comment