169. தலைவி கூற்று
பாடியவர்: வெள்ளிவீதியார். இவரைப் பற்றிய
செய்திகளைப் பாடல்
29 - இல் காணலாம்.
திணை: மருதம்.
திணை: மருதம்.
கூற்று -1: கற்புக்காலத்துத் தெளிவிடை
விலங்கியது. (விலங்கியது = மாறுபட்டது)
கூற்று - 2: இனி, தோழி வரைவு நீட்டித்தவழி வரைவுகடாயதூஉம் ஆம்.
கூற்று விளக்கம் -1:
கணவன் பரத்தையரோடு தொடர்பு கொண்டான் என்று எண்ணி மனைவி அவனோடு ஊடல் கொண்டாள். தனக்குப் பரத்தையரோடு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அவன் மிகத் தெளிவிவாகக் கூறிய பிறகும், அவள் அவனை நம்பாமல், “நான் என் உயிரையே வெறுக்கிறேன். நான் உன்னோடு வாழாமல் இறப்பதே நல்லது” என்று கூறுகிறாள்.
கூற்று விளக்கம் -2:
தலைவன் திருமணம் செய்துகொள்வதற்குக் காலம் தாழ்த்துகிறான். அதனால் தலைவி வருத்தம் அடைந்தாள். அவள் வருத்தத்தை அறிந்த தோழி, “நீ திருமணம் செய்து கொள்வதற்குக் காலம் கடத்துகிறாய். நீ அவள் நலனை நுகர்ந்தாய். இனி, உன்னைத் திருமணம் செய்துகொள்ளாமலே அவள் உயிர் நீங்குவதாகுக” என்று தலைவனிடம் கூறுகிறாள்.
சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்
றெற்றென இறீஇயரோ ஐய மற்றியாம்
நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே
பாணர், பசுமீன் சொரிந்த மண்டைபோல
எமக்கும் பெரும்புல வாகி
நும்மும் பெறேஎம் இறீஇயரெம் முயிரே.
கொண்டு கூட்டு: ஐய! யாம் நும்மொடு நக்க வால்வெள் எயிறு சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற் தெற்றென
இறீஇயரோ! பாணர் பசுமீன்
சொரிந்த மண்டைபோல எமக்கும் பெரும்புலவு ஆகி நும்மும் பெறேஎம், எம் உயிர் இறீஇயர்!
அருஞ்சொற்பொருள்: சுரம் =பாலைநிலம்; கல் = மலை; கோடு = யானையின் தந்தம்; தெற்றென
= விரைவாக; இறீஇயர் = கெடுவதாக
( முறிந்து போவனவாக, அழிவதாக); மற்று – அசை; நக்க = சிரித்த; வால் = தூய்மை,
வெண்மை; எயிறு = பல்;
மண்டை = இரப்பவர்கள் பயன்படுத்தும் பாத்திரம்,
வாயகன்ற பாத்திரம்; புலவு = புலால் நாற்றம்; புலவுதல் = வெறுத்தல்.
உரை: ஐய! உம்மோடு மகிழ்ந்து சிரித்த என்னுடைய தூய வெண்மையான பற்கள், பாலை நிலத்தில் செல்லும் யானையின், மலையைக் குத்திய
கொம்பைப் போல, விரைவாக, முறியட்டும்.
எனது உயிர், பாணர் தாம் பிடித்த பச்சை மீனை வைத்திருகிகும் பாத்திரத்தைப் போல, எனக்குப் பெரிய வெறுப்பைத் தந்து, உம்மையும் நான் பெறாமல்
அழியட்டும்.
சிறப்புக்
குறிப்பு:
“நாம் முன்பு அன்போடு மகிழ்ந்து சிரித்துப் பழகினோமே! அதை எல்லாம் மறந்து என்னிடம் கோபித்துக் கொள்கிறாயே” என்று தலைவன் கூறியதற்குத், தலைவி, “அவ்வாறு உம்மோடு மகிழ்ந்து சிரித்த
என் பற்கள் முறியட்டும்” என்று கூறியதாகவும் கருதலாம்.
”வால்வெள் எயிறு” என்பதற்குத் ”தூய வெண்மையான பற்கள்” அல்லது “மிகவும் வெண்மையான பற்கள்” என்று பொருள்கொள்ளலாம்.
இது ஒருபொருட் பன்மொழிக்கு எடுத்துக்காட்டு.
முதற்
கருத்து:
தலைவனின் பரத்தமையால் சினங்கொண்ட தலைவி, “பாணர்
மீன் பிடித்துத் தமக்குரிய பாத்திரங்களில் போட்டு வைத்ததால் அப்பாத்திரம் மீன்
நாற்றத்தால் வேறு எதற்கும் பயன்படாதது போல, என் உயிர் எனக்கே வெறுப்புத் தருவதாயிற்று;
உமக்கும் நான் இனிப் பயன்பட மாட்டேன். ஆகவே,
என் உயிர் போகட்டும்” என்று தலைவனை நோக்கிக் கூறுவதாகத்
தோன்றுகிறது.
இரண்டாவது கருத்து: ”நீ இன்னும் தலைவியைத் திருமணம்
செய்துகொள்ளாமல் இருக்கின்றாய். நீ தலைவியின் நலனை நுகர்ந்தாய்;
அவள் உன்னை அடைய மாட்டாள் போலத் தோன்றுகிறது. ஆகவே, இனி அவள் வாழ்ந்து என்ன பயன்?. அவள் உயிர் போகட்டும்” என்று தோழி கூறியதாகவும்,
அவ்வாறு கூறினால், தலைவன் தலைவியை விரைவில் மணந்துகொள்வான்
என்று தோழி கருதுவதாகவும் பொருள் கொள்ளலாம். இந்தக் கருத்தைவிட,
முதற்கருத்து பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
|
||
|
No comments:
Post a Comment