173.
தலைவன் கூற்று
பாடியவர்: மதுரைக் காஞ்சிப்புலவன். மதுரைக் காஞ்சிப் புலவர், மாங்குடி கிழார், மாங்குடி மருதனார் என்ற மூன்று பெயர்களும் ஒருவரையே குறிப்பதாக உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். இந்தப் புலவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 164 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: குறைமறுக்கப்பட்ட தலைமகன்
தோழிக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவியைக்
காண்பதற்கு உதவி செய்யுமாறு தலைவன் தலைவியின் தோழியை வேண்டினான். தோழி உதவி செய்ய மறுத்தாள். ”நீ உதவி செய்யாவிட்டால்,
என்ன செய்வது என்று எனக்குத் தெரியும். மடலேறுவதுதான்
இதற்குச் சரியான வழி” என்று கூறி அங்கிருந்து செல்கிறான்.
பொன்நேர்
ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க ஏறி நாண் அட்டு
அழிபடர் உள்நோய் வழிவழி சிறப்ப
இன்னள் செய்தது இது என முன்னின்று
அவள் பழி நுவலும் இவ்வூர்
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகுமார் உளெனே.
பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க ஏறி நாண் அட்டு
அழிபடர் உள்நோய் வழிவழி சிறப்ப
இன்னள் செய்தது இது என முன்னின்று
அவள் பழி நுவலும் இவ்வூர்
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகுமார் உளெனே.
கொண்டு கூட்டு: பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த பல்நூல் மாலைப் பனைபடு கலிமாப் பூண்மணி கறங்க ஏறி, நாண் அட்டு அழிபடர் உள்நோய் வழிவழி சிறப்ப, இன்னள் செய்தது இது என, இவ்வூர் முன்னின்று அவள் பழி நுவலும். ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகுமார் உளென்.
அருஞ்சொற்பொருள்: ஆவிரை = ஒரு மலர்; மிடைந்த = கலந்த;
பன்னூல் = பல நூல்கள்; படுதல்
= உண்டாதல்; கலிமா = குதிரை;
கறங்க = ஒலிக்க; நாண்
= நாணம்; அடுதல் = அழித்தல்;
அழிபடர் = மிகுந்த துன்பம்; வழிவழி = பரம்பரை (மேலும் மேலும்);
சிறப்ப = மிகுதியாக; நுவலுதல்
= கூறுதல்; ஆங்கு = அவ்வாறு
(அப்படி); ஈங்கு = இவ்விடம்;
ஏகுதல் = செல்லுதல்.
உரை: பொன்னைப்
போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருக்கமாகக் கட்டிய, பல நூல்களாலான மாலைகளை அணிந்த, பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையை, அதன் கழுத்திற்
பூட்டிய மணி ஒலிக்கும்படி ஊர்ந்து, நாணத்தைத் தொலைத்து, என் உள்ளத்தேயுள்ள காமநோய், மேலும்
மேலும் மிகுதியாகுமாறு, ”இது (இந்தக் காம
நோய்) இன்னாளால் உண்டாக்கப்பட்டது” என்று
நான் கூற, அதைக் கேட்ட இவ்வூரில் உள்ளவர்கள், எல்லோர்க்கும் முன்னே நின்று, தலைவியைப் பழி தூற்றுவர். அப்படி ஒரு வழி உண்டு என்பதை நான் அறிந்திருப்பதால், இவ்விடத்திலிருந்து செல்கிறேன்.
No comments:
Post a Comment