Saturday, March 26, 2016

176. தோழி கூற்று

176. தோழி கூற்று
.

பாடியவர்: வருமுலையாரித்தியார். இவர் பாடியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: தோழி, கிழத்தியைக் குறைநயப்பக் கூறியது.  (குறை நயப்ப - தலைவனது காரியத்தை விரும்பி நிறைவேற்றுதற்கு.)
கூற்று விளக்கம்: தலைவன் ஒருபெண்ணைப் பார்த்தான், அவள் அழகில் மயங்கினான். அவளை அடைய விரும்பினான். தனக்குத் தலைவியின் மேல் உள்ள விருப்பத்தைத் தலைவியின் தோழியிடம் கூறி, தலைவியைச் சந்திப்பதற்கு அவள் உதவியை நாடினான். ஒருமுறை அன்று; இருமுறை அன்று; அவன் பலமுறை தோழியின்  உதவியை வேண்டினான். தோழி தலைவியிடம் அவனுக்காகப் பரிந்துரைத்தாள். ஆனால், தலைவி அவனை ஏற்கவில்லை.  அதனால் ஏமாற்றம் அடைந்த தலைவன் இப்பொழுது எங்கோ சென்றுவிட்டான்தோழி, உன்னை அவன் மிகவும் விரும்பினான். அவன் மிகவும் பணிவானவன்; நல்லவன். உன்னைச் சந்திப்பதற்கு என் உதவியை வேண்டினான். நான் சொன்ன சொற்களை நீ ஏற்கவில்லை. இப்பொழுது அவனைக் காணவில்லை. அவன் இப்பொழுது எங்கே இருக்கின்றானோ என்று தோழி தலைவியிடம் தன் வருத்தத்தைக் கூறுகிறாள்.

ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி என்
நன்னர் நெஞ்சம்  நெகிழ்த்த பின்றை
வரைமுதிர் தேனின் போகியோனே
ஆசுஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ?
வேறுபுலன் நன்னாட்டுப் பெய்த
ஏறுடை மழையின் கலிழும் என் நெஞ்சே. 


கொண்டு கூட்டு: ஒருநாள் வாரலன், இருநாள் வாரலன்பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி  என் நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றைவரைமுதிர் தேனிற் போகியோன்.
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோவேறு புலன் நன்னாட்டுப் பெய்த ஏறுடை மழையிற் கலிழும் என் னெஞ்சே. 

அருஞ்சொற்பொருள்: பணிமொழி = பணிவான சொற்கள்; பயிற்றி = கூறி; நன்னர் = நன்மை ( நல்ல); பின்றை = பிறகு; வரை = மலை; ஆசு = பற்றுக்கோடு ; எந்தை = என் தலைவன் ( நம் தலைவன்); புலன் = புலம் = இடம்; ஏறு = இடி; கலிழும் = கலங்கும்.

உரை: தலைவன் ஒருநாள் வரவில்லை; இரண்டு நாட்கள் வரவில்லை. பல நாட்கள் வந்து, பணிவான சொற்களைப் பலமுறை கூறி எனது நல்ல நெஞ்சத்தை இரங்கச் செய்த பிறகு மலையிலிருந்து முதிர்ந்து விழுந்த தேனடையைப் போலப் போனவனும், நமக்குப் பற்றுக்கோடாக இருக்கும் எம் தந்தை போன்றவனுமாகிய நம் தலைவன் இப்பொழுது  எங்கே இருக்கின்றானோ? வேற்றுப் புலங்களையுடைய நல்ல நாட்டில், இடியுடன் பெய்த மழைநீர் கலங்கி நம் நாட்டிற்கு வருவது போல, எங்கோ இருக்கும் தலைவனை நினைத்து என் நெஞ்சு கலங்குகின்றது.


சிறப்புக் குறிப்பு: மலையில் முதிர்ர்ந்த தேனடை, தன்னிடம் உள்ள தேன் ஒருவருக்கும் பயன்படாது விழுந்து அழிந்ததைப் போல, தான் கூறுவதை யாரும் ஏற்றுக் கொள்ளாததால்  தலைவன் எங்கோ சென்றான் என்பது குறிப்பு. வேற்று நாட்டில் இடியுடன் பெய்த மழை கலங்கித் தலைவி இருக்கும் நாட்டிற்கு வருவதைப் போல் எங்கோ இருக்கும்  தலைவனைப் பற்றிய நினைவு தோழிக்கு மனக்கலக்கத்தைத் தருகின்றது.

No comments:

Post a Comment