Sunday, May 15, 2016

192. தலைவி கூற்று

192.  தலைவி கூற்று

பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 30 – இல் காணலாம்.
திணை:
பாலை.
கூற்று: பிரிவிடை வற்புறுத்த (வலியுறுத்த) வன்புறை எதிரழிந்து (வன்புறை = தலைவியைத் தலைவன் ஆற்றி வற்புறுத்துதல்; வன்புறை எதிரழிதல்  - தலைவன் ஆற்றுவித்துப் பிரிந்தபின் தனிமையால் தலைவி வருந்துதல்) கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “அவர் விரைவில் வந்துவிடுவார். நீ வருந்தாதேஎன்று தோழி தலைவிக்கு வலியுறுத்தி ஆறுதல் கூறுகிறாள். ”இளவேனிற் காலமும் வந்துவிட்டது. அவர் இன்னும் வரவில்லை. நான் எப்படி வருந்தாமல் இருப்பேன்?” என்று தலைவி தோழிக்கு மறுமொழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

ஈங்கே வருவர் இனையல் அவர்என
அழாஅற்கோ இனியே நோய்நொந்து உறைவி
மின்னின் தூவி இருங்குயில் பொன்னின்
உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை
நறுந்தாது கொழுதும் பொழுதும்
வறுங்குரல் கூந்தல் தைவரு வேனே. 

கொண்டு கூட்டு: நோய்நொந்து உறைவி! ”அவர் ஈங்கே வருவர்; இனையல்எனஇனியே அழாற்கோ? மின்னின் தூவி இருங்குயில் பொன்னின் உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை நறுந்தாது கொழுதும் பொழுதும் வறுங்குரல் கூந்தல் தைவருவேன். 

அருஞ்சொற்பொருள்: ஈங்கே = இங்கே; இனைதல் = வருந்துதல்; அழாஅற்கோ = அழாமல் இருப்பேனா; நொந்து = வருந்தி; உறைவி = உறையும் (வாழும், இருக்கும்); தூவி = இறகு; இரு = கரிய; உரைத்தல் = தேய்த்தல்; கட்டளை = உறசிப் பார்க்கும் உரைகல்; கடுப்ப = ஒப்ப (உவம உருபு); மா = மாமரம்; சினை = கிளை; கொழுதும் = கோதும்;  வறு = வறிய; குரல் = கொத்து; தைவருதல் = தடவுதல்.

உரை: துன்பத்தோடு வருந்தி வாழும் தோழி! தலைவர் இங்கே திரும்பி வருவார். வருந்தாதே!” என்று நீ சொல்வதனால், இப்பொழுது நான் அழாமல் இருப்பேனா? பொன்னிறமான பூந்த்தாதுக்கள் படிவதால் மின்னும் சிறகுகளையுடைய கருங்குயில், பொன்னை உரைத்துப் பார்க்கப் பயன்படும் கட்டளைக்கல் போல் தோன்றுகிறது. அத்தகைய குயில், மாமரத்தின் கிளையில், பூந்தாதைக் கோதுகின்ற இளவேனிற் காலத்திலும் (சித்திரை, வாகாசி மாதங்களிலும்) அவர் வராததால், அலங்கரிக்கப்படாமல் வறிய கொத்தாக இருக்கும் என் கூந்தலைத் தடவுவேன்.

சிறப்புக் குறிப்பு: “இன்றூவிஎன்றது இனிய இறகைக் குறிக்கிறது. குயிலின் இறகு, காண்பதற்கு இனிமையானதாகவும் தொடுவதற்கு இனிமையானதாகவும் இருப்பதால் அதை இன்றூவிஎன்றாள், மாம்பூவின் தாதிற்குப் பொன்னின் பொடியும்,  குயிலுக்குக் கட்டளைக்கல்லும் உவமை.

 குயில் கோதும் தாதின் மணம் அவள் இருக்கும் இடத்தளவும் வந்து வீசுவதால். அத்தாதைத் தலைவி நறுந்தாதுஎன்றாள். ”குயில் மாம்பூவின் தாதைக் கொழுதும்என்றது இளவேனிற்காலம் வந்தது என்பதைக் குறிக்கிறது.  இளவேனிற் காலம் காமத்தை மிகுவிப்பதால் அக்காலத்திற் பிரிவுத் துன்பம் மிகுதியாகத் தோன்றும் என்ற கருத்தும் இப்பாடலில் உள்ளது.  கரிய குயிலின் மின்னுகின்ற இறகுகளில் பூந்தாது படிந்திருப்பது, கரிய உரைகல்லில் ஒட்டிக்கொண்டிருக்கும் பொன்னைப்போல் உள்ளது என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.

  ”வறுங்குரற் கூந்தல் என்றது மகளிர் தம் காதலரைப் பிரிந்த காலத்தில், மலரணிந்து கூந்தலை அலங்கரிப்பதில்லை என்பதைக் குறிக்கிறது.  இக் கருத்தும், புறநானூற்றுப் பாடல் 147 – இல், வையாவிக் கோப்பெரும் பேகனின் மனைவி, அவனைப் பிரிந்திருக்கும் பொழுது தன் கூந்தலில் மலர் அணியவில்லை என்று புலவர் பெருங்குன்றூர்க் கிழார் கூறுவதும் ஒப்பு நோக்கத் தக்கது.

அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்
 மண்ணுறு மணியின் மாசுஅற மண்ணிப்
 புதுமலர் கஞல, இன்று பெயரின்
 அதுமன், எம்பரிசில் ஆவியர் கோவே!                             (புறநானூறு 147; 5-9)


(பொருள்:அவள் கண்கள் செவ்வரியுடனும் செருக்குடனும் கண்ணீர் மல்கி இருந்தது. அழகிய நிறமுள்ள அப்பெண்ணின் நெய் தடவப்படாத கரிய கூந்தலை கழுவப்பட்ட நீல மணி போல் மாசு இல்லாமல் கழுவிப் புதுமலர் பொலியச் செய்வதற்கு இன்றே நீ புறப்பட்டால், அதுவே எம் பரிசு.)

No comments:

Post a Comment