202.
தலைவி கூற்று
பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 32 – இல் காணலாம்.
திணை: மருதம்.
கூற்று: வாயிலாகப்
புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது.
கூற்று
விளக்கம்:
தலைவன்
தலைவியைவிட்டுப் பிரிந்து பரத்தையோடு வாழ்ந்தான். இப்பொழுது அவன்
தன் மனைவியோடு வாழ விரும்புகிறான். தலைவியின் தோழியைத் தலைவியிடம்
தூதாக அனுப்புகிறான். “இப்பொழுது தலைவன் மனம் மாறிவிட்டான்.
மீண்டும் உன்னோடு வாழ வேண்டும் என்று விரும்புகிறான். நீ அவனை ஏற்றுக்கொள்வாய் என்று நினைக்கிறேன்” என்று தோழி
தலைவியிடம் கூறுகிறாள். ”முன்பு என்னோடு அன்பாக இருந்த தலைவன்
இப்பொழுது எனக்குத் துன்பத்தைத் தருபவனாக மாறிவிட்டான். என்னால் அவனை ஏற்றுக்கொள்ள முடியாது”
என்று கூறித் தலைவி தோழியின் வேண்டுகோளை மறுக்கிறாள்.
நோமென்
னெஞ்சே நோமென் னெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே.
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே.
கொண்டு கூட்டு: என் நெஞ்சு நோம்; என் நெஞ்சு நோம்; புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சி, கட்கு இன் புதுமலர் முள் பயந்தாங்கு இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல்; என் நெஞ்சு நோம்.
அருஞ்சொற்பொருள்: நோதல் = வருந்துதல்; புன்புலம் = முல்லை
நிலம் (புன்செய் நிலம்); அமன்ற
= நெருங்கிப் படர்ந்த; கட்கு = கண்ணுக்கு.
உரை: தோழி,
என் நெஞ்சு வருந்துகிறது; என் நெஞ்சு வருந்துகிறது.
முல்லை நிலத்தில், நெருங்கி முளைத்த, சிறிய இலைகளையுடைய நெருஞ்சி, முன்னர் கண்ணுக்கு இனிய
புதியமலரைத் தோற்றுவித்துப் பின் துன்பத்தைத்தரும்
முள்ளைத் தருவதைப்போல, முன்பு நமக்கு இனியவற்றைச் செய்த நம்
தலைவர், இப்பொழுது இன்னாதனவற்றைச் செய்வதால், என் நெஞ்சு வருந்துகிறது.
சிறப்புக்
குறிப்பு: ”நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே” என்று தலைவி இருமுறை
கூறுவது, அவளுடைய இடைவிடாத வருத்தத்தைக் குறிக்கிறது.
No comments:
Post a Comment