212.
தோழி கூற்று
பாடியவர்: நெய்தற் கார்க்கியன். இவரைப் பற்றிய செய்திகளைப்
பாடல்
55 – இல் காணலாம்
திணை: நெய்தல்.
திணை: நெய்தல்.
கூற்று: குறைநேர்ந்த
தோழி குறைநயப்பக் கூறியது. (குறை நேர்ந்த - தலைவனது
குறையை நிறைவேற்றுவதற்குஉடன்பட்ட, குறை நயப்ப - தலைவனது
குறையைத் தீர்த்தலைத் தலைவி விரும்பும் வண்ணம்.)
கூற்று
விளக்கம்:
தலைவி
தலைவனோடு ஊடி இருக்கிறாள்.
அவளைக் காண்பதற்காக, தலைவன் தன் தேரில் வருகிறான்.
ஆனால், தலைவி அவனை காண விரும்பவில்லை. ”உன்னைக் காண வந்தவனைக் காணாமல் திருப்பி அனுப்புவது அறச்செயல் அன்று;
உன் செயல் நாணத் தகுந்தது. தலைவன் உன்மீது கொண்ட
காதலை நினைத்து நான் வருந்துகிறேன். நீஅவனை ஏற்றுக்கொள்”
என்று தோழி தலைவியை வேண்டுகிறாள்.
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
தெண்கட லடைகரைத் தெளிமணி யொலிப்பக்
காண வந்து நாணப் பெயரும்
அளிதோ தானே காமம்
விளிவது மன்ற நோகோ யானே.
கொண்டு
கூட்டு:
கொண்கன்
ஊர்ந்த, கொடுஞ்சி நெடுந்தேர் தெண்கடல் அடைகரைத் தெளிமணி
ஒலிப்ப, காண வந்து நாணப் பெயரும். காமம் அளிதோ தானே; மன்ற விளிவது; யான் நோகு.
அருஞ்சொற்பொருள்: கொண்கன் = நெய்தல் நிலத் தலைவன்; கொடுஞ்சி = தாமரை மொட்டின் வடிவமாகச் செய்து தேரின் முன்பக்கத்தில் நடப்பட்டிருக்கும்
ஓர் உறுப்பு. தேரில் செல்பவர் இதனைக் கையால் பற்றிக் கொள்வது வழக்கம்; அளிது = இரங்கத் தக்கது; விளிவது = அழிவது.
ஓகாரம், ஏகாரம், தான் அசை
நிலைகள்.
உரை: நெய்தல் நிலத் தலைவன் ஏறி வந்த, கொடுஞ்சியை உடைய தேரானது, தெளிந்த நீரைஉடைய கடற்கரையில்,
தெளிந்த ஓசையை உடைய மணிகள்
ஒலிக்கும்படி, நம்மைக் காண வந்தது. ஆனால்,
நாம் நாணும்படி திரும்பிச் சென்றது. தலைவனின் காமம் இரங்கத் தக்கது;
அது நிச்சயமாக அழியக் கடவதாகும்.
இவற்றை நினைத்து நான் வருந்துகின்றேன்.
சிறப்புக்
குறிப்பு: தம்மை நாடி
வந்தவரின் குறையைத் தீர்க்காமல் அவரை
வறிதே திருப்பி அனுப்புவது அறநெறி அன்று. ஆகவே, தலைவியின் செயல்
நாணத் தக்கதாயிற்று.
No comments:
Post a Comment