219.
தலைவி கூற்று
பாடியவர்: வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார். இவரைப் பற்றிய
செய்திகளைப் பாடல்
97 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
திணை: நெய்தல்.
கூற்று: சிறைப்புறம்.
கூற்று
விளக்கம்: தலைவன் வந்து வேலிக்கு வெளியே நிற்பதை அறிந்த தலைவி,
தோழிக்குக் கூறுவது போல், தன்னுடைய வருத்தத்தை
தலைவனின் காதுகளில் விழுமாறு கூறுகிறாள்.
பயப்பென் மேனி யதுவே நயப்பவர்
நாரில் நெஞ்சத் தாரிடை யதுவே
செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே
ஆங்கட் செல்கம் எழுகென வீங்கே
வல்லா கூறியிருக்கு முள்ளிலைத்
தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க்
கிடமற் றோழியெந் நீரிரோ வெனினே.
கொண்டு
கூட்டு:
தோழி! பயப்பு என் மேனியது. நயப்பு அவர் நார்இல் நெஞ்சத்து ஆர் இடையது. செறிவும் சேண் இகந்தன்று;
அறிவு ”ஆங்கண் செல்கம் எழுக” என, ஈங்கே வல்லா கூறி இருக்கும். முள்ளிலைத் தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க்கு :எ நீரிரோ” எனின் இடம் மன்.
அருஞ்சொற்பொருள்: பயப்பு = பசப்பு; நயப்பு = விருப்பம்;
நார் = அன்பு; ஆர் – இடைச்சொல்; செறிவு = அடக்கம்; சேண்
= தொலை (தூரம்); இகத்தல்
= கடத்தல் (பிரிதல்); வல்லா
= முடியாதவற்றை; தடவு நிலை = அகன்ற அடிப்பாகம்; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்; இடம் = காலம்
(சமயம்).
உரை: தோழி! பசலையானது என் மேனியில் படர்ந்துள்ளது. காதல் அவரது அன்பற்ற
நெஞ்சமாகிய அரிய இடத்தில் உள்ளது. எனது அடக்கம், என்னைவிட்டு நெடுந்தூரம் விலகியது. எனது அறிவு,
“தலைவர் உள்ள இடத்திற்குச் செல்வதற்காக எழுவாயாக” என்று நம்மால் முடியாதவற்றைக் கூறி இங்கேயே தங்கி இருக்கிறது. பருத்த அடிகளையுடைய தாழைகள் உள்ள கடற்கரைத் தலைவருக்கு “எத்தன்மையுடன் இருக்கின்றீர்?” என்று பரிவுடன் கேட்டு,
நம் குறை தீர்க்க இது தக்க சமயமாகும்.
No comments:
Post a Comment