Sunday, July 31, 2016

224. தலைவி கூற்று

224. தலைவி கூற்று

பாடியவர்: கூவன் மைந்தனார்.இவர் இயற்றியதாக குறுந்தொகையில் உள்ள இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: பிரிவிடை இறந்து படுமெனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவையைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவினால் தலைவி வருந்துவதைக் கண்ட தோழி, பிரிவின் துயரத்தைத் தாங்க முடியாமல் தலைவி இறந்துவிடுவாளோ என்று எண்ணி மிகவும் வருந்துகிறாள். தலைவனின் பிரிவினால் வருந்தி வாடும் தலைவி, தோழி வருந்துவதைக் கண்டு இன்னும் அதிகமாக வருந்துகிறாள். தோழி வருத்தப்படுவதைக் கண்ட தலைவி தன்னுடைய வருத்தத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். தலைவி,  கிணற்றில் விழுந்த பசுவைக் கண்ட ஊமன், தன் வருத்தத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிப்பதைப் போல் தானும் வருந்துவதாகத் தோழியின் காதுகளில் கேட்குமாறு தனக்குத் தானே கூறிக்கொள்கிறாள்.

கவலை யாத்த அவல நீளிடைச்
சென்றோர் கொடுமை யெற்றித் துஞ்சா
நோயினு நோயா கின்றே கூவற்
குராலான் படுதுயர் இராவிற் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர்பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே. 

கொண்டு கூட்டு:
கூவல்  குரால் ஆன் படுதுயர் இராவிற் கண்ட  உயர்திணை ஊமன் போல தோழி நோய்க்கே துயர் பொறுக்கல்லேன்.  கவலை யாத்த, அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா நோயினும் நோய் ஆகின்று.  

அருஞ்சொற்பொருள்: கவலை = பல கிளைவழிகள்; யாத்த = யாமரங்களையுடைய; அவலம் = துன்பம்; எற்றி = நினைத்து; துஞ்சுதல் = உறங்குதல்; கூவல் = கிணறு; குரால் = கபில நிறம் ( கருமை கலந்த பொன்மை); ஆன் = பசு; ஊமன் = ஊமை, கோட்டான்; உயர்திணை ஊமன்  - இங்கு குறிப்பிடப்பட்ட ஊமன் கோட்டான் அன்று  என்பதைக் குறிக்கிறது.

உரை: கிணற்றில் வீழ்ந்த குராற்பசு படும் துன்பத்தை, இரவில் கண்ட, ஊமை அத்துயரத்தை வெளியிட முடியாமல் துன்புற்றது போல, எனக்காகத் தோழி படும் துன்பத்தைப் பார்த்து நான் மிகவும் வருந்துகிறேன். தோழியின் துயரத்தால் நான் பெற்ற துன்பம், பல கிளைவழிகளும் பல யா மரங்களும் உள்ள நீண்ட வழியில் சென்ற தலைவன் செய்த கொடுமையை நினைத்து நான் தூங்காமல் இருக்கும் துன்பத்தைக் காட்டிலும்,மிகுந்த துன்பமாக இருக்கின்றது.


சிறப்புக் குறிப்பு: தன் துயரத்தைக் கூற இயலாத நிலையில் உள்ள தலைவிக்குக் குராற்பசு கிணற்றில் விழுவதைக் கண்ட ஊமன் உவமை. இந்த உவமைச் சிறப்பினால் இப்புலவர் கூவன் மைந்தனார் என்று அழைக்கப்பட்டதாகக்  கருதப்படுகிறது.  

No comments:

Post a Comment