Sunday, July 31, 2016

229. கண்டோர் கூற்று

229.  கண்டோர் கூற்று

பாடியவர்: மோதாசானார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை:
பாலை.
கூற்று: இடைச் சுரத்துக் கண்டார், தம்முள்ளே சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் பாலை நிலத்தில் உடன் போகிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் சிலர் அவர்களைக் காண்கிறார்கள். தலைவனும் தலைவியும் சிறுவர்களாக இருந்த பொழுது அவர்கள் சிறுசிறு சண்டைகள் போட்டுக் கொண்டதையும்,  இப்பொழுது, அவர்கள் இணைபிரியாத காதலர்களாக இருப்பதையும் கண்ட வழிப்போக்கர்கள், அவர்களை சேர்த்துவைத்த ஊழ்வினையை வியந்து பாராட்டுகிறார்கள்.

இவனிவ ளைம்பால் பற்றவும் இவளிவன்
புன்றலை யோரி வாங்குநள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா
தேதில் சிறுசெரு வுறுப மன்னோ
நல்லைமன் றம்ம பாலே மெல்லியல்
துணைமலர்ப் பிணைய லன்னவிவர்
மணமகிழ் இயற்கை காட்டி யோயே.

கொண்டு கூட்டு: இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,  காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது ஏதில் சிறுசெரு உறுப, மன்னோமெல்லியல் துணைமலர்ப் பிணையல் அன்ன இவர் மணம் மகிழ் இயற்கை காட்டியோய்,  பாலே, நல்லை மன்ற. அம்ம.

அருஞ்சொற்பொருள்: ஐம்பால்  - சங்க காலத்தில், பெண்கள் தங்கள் கூந்தலை குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என்ற ஐந்து வகையாக அலங்கரித்துக் கொள்வது வழக்கிலிருந்தது. அதனால், ஐம்பால் என்பது பெண்களின் கூந்தலைக் குறிக்கும் சொல் ஆகியது; ஓரி = ஆணின் தலைமுடி ; வாங்குதல் = வளைத்து இழுத்தல்; பரிதல் = ஓடுதல்; ஏது = காரணம்; ஏதில் = காரணமில்லாத; செரு = சண்டை; மன்கழிந்தது என்ற பொருளில் வந்த இடைச் சொல்; அம்மஅசைச்சொல்; பால் = ஊழ்வினை; பிணையல் = பின்னிய மாலை.


உரை: சிறுவயதில்,  இவன் இவளது கூந்தலைப் பிடித்து இழுக்கவும், இவள் இவனது சிறிய தலைமுடியை வளைத்து இழுத்து ஓடவும், அன்புடைய செவிலித்தாயார் இடைமறித்துத் தடுக்கவும், ஓயாமல், காரணமில்லாமல் இவர்கள் சிறுசிறு சண்டை போட்டுக்கொள்வார்கள்.  இப்பொழுது, மெல்லிய இயல்புடைய மலர்களால் பின்னிய இரட்டை மாலையைப் போன்ற இவர்கள்,  மணம் புரிந்து மகிழும் இயல்பை உண்டாக்கிய  ஊழ்வினையே, நிச்சயமாக நீ நன்மையை உடையாய்.

No comments:

Post a Comment