Sunday, August 14, 2016

236. தோழி கூற்று

236. தோழி கூற்று

பாடியவர்: நரிவெரூஉத் தலையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 5 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: வரைவிடை வைத்துப் பிரிவான், ‘இவள் வேறு படாமைஆற்றுவிஎன்றாற்குத் தோழி நகையாடி உரைத்தது.
கூற்று விளக்கம்:  தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரிந்து செல்ல முடிவெடுத்தான். ”நான் திரும்பி வரும்வரை, தலைவிக்கு ஆறுதலாக இருஎன்று தோழியை வேண்டுகிறான். அவன் தலைவியைவிட்டுப் பிரிந்து செல்வதைத் தோழி விரும்பவில்லை. ஆகவே, தோழி, “நீ அவளைப் பிரிந்து செல்வதானல் அவளை நீ முற்றிலும் கைவிட்டுவிட்டாய் என்று பொருள். நீ அவ்வாறு செல்லுவதற்கு உடன்பட்டால், நீ நுகர்ந்த என் நலனைத் திருப்பிக் கொடுத்துவிட்டுச் செல்வாயாகஎன்று கூறுகிறாள்.

விட்டென விடுக்குநாள் வருக அதுநீ
நேர்ந்தனை யாயின் தந்தனை சென்மோ
குன்றத் தன்ன குவவுமணல் அடைகரை
நின்ற புன்னை நிலந்தோய் படுசினை
வம்ப நாரை சேக்கும்
தண்கடற் சேர்ப்பநீ உண்டவென் னலனே. 

கொண்டு கூட்டு:
குன்றத் தன்ன குவவுமணல் அடைகரை  நின்ற புன்னை நிலந்தோய் படுசினை வம்ப நாரை சேக்கும் தண்கடற் சேர்ப்ப, விட்டென விடுக்குநாள் வருக. அதுநீ நேர்ந்தனையாயின், நீ உண்ட என் நலனே  தந்தனை சென்மோ!

அருஞ்சொற்பொருள்: நேர்தல் = சம்மதித்தல்; தந்தனை = தந்து (திருப்பித் தந்துவிட்டு); சென்மோ = செல்வாயாக; குவவுதல் = குவிதல்; அடைகரை = மணல் அடைந்த கடற்கரை; சினை = கிளை; படுசினை = நிலத்தைத் தொடும் அளவுக்குத் தாழ்ந்த கிளை; வம்பு = புதுமை; வம்பநாரை = புதிதாக வந்த நாரை; சேக்கும் = தங்கும்; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்; நலன் = அழகு, கற்பு ஆகியவற்றைக் குறிக்கும் சொல்.

உரை:  குன்றைப்போல், குவிந்து கிடக்கும் மணல் அடைந்த கடற்கரையில் வளர்ந்து, நிலத்தைத் தொடும் அளவுக்குத் தாழ்ந்து நின்ற புன்னை மரத்தின் கிளையில், புதிய நாரை வந்து தங்கும் குளிர்ந்த கடற்கரைத் தலைவனே! இப்பொழுது நீ சென்றால், நீ இவளைக் கைவிட்டுவிட்டாய் என்ற எண்ணத்தோடு செல்க; உன் பணிகளிலிருந்து உனக்கு எப்பொழுது விடுதலை கிடைக்குமோ (அதாவது, எப்பொழுது வரமுடியுமோ) அப்பொழுது நீ வருக. அத்தகைய பிரிவுக்கு நீ உடன்பட்டால். நீ நுகர்ந்த என் பெண்மை நலத்தைத் திருப்பித் தந்துவிட்டுச் செல்வாயாக.

சிறப்புக் குறிப்பு: தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமையால், தலைவியின் நலனைத் தன் நலன் என்று தோழி குறிப்பிடுகிறாள். இவ்வாறு குறிப்பிடுவது வழக்கிலிருந்ததாகத் தொல்காப்பியம் கூறுகிறது.

          தாயத்தின் அடையா ஈயச் செல்லா
            வினைவயின் தங்கா வீற்றுக் கொள்ளப்படா
            ”எம்என வரூஉம் கிழமைத் தோற்றம்
            அல்ல ஆயினும் புல்லுவ உளவே.
                                                (தொல்காப்பியம், பொருளியல்  - 27)
பொருள்: (தாயம் = உரிமை; வீறு = வெற்றி; கிழமை = உரிமை; புல்லும் = பொருந்தும்) முன்னோர் சேர்த்துவைத்த  சொத்தைப் போல உரிமையால் அடைய முடியாததாய், கொடுத்துப் பெற இயலாததாய், தொழில் முறையால் வந்தடையாததாய்,
எவராலும், வெற்றி கொள்ள முடியாததாய், “எம்முடையதுஎனக்குரியதுஎன்று உரிமை கொண்டாடும்படியான தலைவியின் மேனி வனப்பு தோழியது அல்லவாயினும், அவளுக்கும் பொருந்தும்படிச் சொல்லும் வழக்குகள் உண்டுஉதாரணமாக, ”தலைவியின் அழகு முதலியவற்றைத் தன்னுடையது போலச் சொல்லும் கூற்றுக்கள் பலவுள. தலைவிக்காகப் பேசும் அவள், ‘என் அழகைத் திரும்பித் தா’, ‘என் தோளை மெலிய வைத்தனைஎன இவ்வாறு பேசுவாள்என்று முனைவர் தமிழண்ணல் தம் நூலில் குறிப்பிடுகிறார்.


மருத நிலத்திற்கு உரிய கருப்பொருளாகிய நாரை, நெய்தல் நிலத்திற்குப் புதிதாக வந்து, அங்குள்ள மீன்களை உண்டு, புன்னைமரத்தின் கிளையில் தங்கி இருக்கிறது. அதுபோல், தலைவி இருக்கும் ஊருக்குப் புதிதாக வந்து,  தலைவன் தலைவியின் நலனை நுகர்ந்தான். ஆனால், நாரை தான் மீன்களை உண்ட இடத்தில் தங்கி இருப்பதைப் போல், அவன் தலைவியின் ஊரில் தங்கி அவளை மகிழ்விக்காமல், பிரிந்து செல்ல நினைக்கிறான்.  ”நாரைக்கு உள்ள பண்புகூட உன்னிடம் இல்லையேஎன்று தோழி தலைவனைக் கடிந்து கொள்வதை, இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகக் கருதலாம்.

No comments:

Post a Comment