240.
தலைவி கூற்று
பாடியவர்: கொல்லனழிசியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 26 – இல் காணலாம்.
திணை: முல்லை.
திணை: முல்லை.
கூற்று: வரைவிடை
ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று
விளக்கம்:
பொருள்
ஈட்டுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து
சென்றிருக்கிறான்.
அவன் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். இப்பொழுது, கார்காலம் முடிந்து குளிர்காலமும் வந்துவிட்டது.
ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. தலைவனின் பிரிவைத் தலைவி பொறுத்துக்கொள்ள முடியாமல் வருந்துவாளே என்று எண்ணிய
தோழி, தலைவியைக் கண்டு ஆறுதல் கூற வருகிறாள். “தலைவனின் பிரிவை எப்படிப் பொறுத்துக் கொள்கிறாய்?” என்று
தோழி தலைவியைக் கேட்கிறாள். அதற்கு மறுமொழியாகத் தலைவி,
“ இங்கிருந்து பார்த்தால் தலைவன் நாட்டில் உள்ள குன்று தெரிகிறது. அதை பார்த்தால், தலைவனைப் பார்த்தது போல் இருக்கிறது. அதனால்,
பகல் நேரத்தில் பிரிவைப் பொறுத்துக் கொள்கிறேன். ஆனால், வாடைக் காற்று வீசும் மாலை நேரத்தில்,
அந்தக் குன்று மறையும் பொழுது என் வருத்தம் அதிகமாகிறது” என்று கூறுகிறாள்.
பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக்
கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர்
வெருக்குப்பல் லுருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் றலையும் நோய்பொரக்
கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக்
கடலாழ் கலத்திற் றோன்றி
மாலை, மறையு மவர் மணிநெடுங் குன்றே.
கொண்டு
கூட்டு:
தோழி! வாழி! பனிப்புதல்
இவர்ந்த பைங்கொடி அவரைக் கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு
பன்மலர் வெருக்குப்பல் உருவின் முல்லையொடு கஞலி, வாடை வந்ததன் தலையும் நோய்பொர, அவர் மணிநெடுங்குன்று
தெண்திரைக் கடல் ஆழ் கலத்தின் தோன்றி, மாலை, மறையும். கண்டிசின்!
அருஞ்சொற்பொருள்: புதல் = புதர்; இவர்தல் = படர்தல்;
வெருகு = காட்டுப்பூனை; கஞலி
= நிறைந்து; நோய் = துன்பம்;
பொருதல் = அலைமோதுதல்; போரிடுதல்;
மணி = அழகு.
உரை: தோழி! வாழி! குளிர்ந்த புதரில் படர்ந்த, பசுமையான அவரைக் கொடியின், கிளி மூக்கைப் போன்ற உருவத்தோடு
ஒளி வீசும் பல மலர்கள், காட்டுப் பூனையின் பல்லைப் போன்ற உருவத்தை
உடைய முல்லை மலர்களோடு நெருங்கிப் பூத்து, வாடைக்காற்று
வீசுங்காலம் வந்த பிறகும், துன்பம் என்னை அலைக்கும் வண்ணம்,
தலைவரது அழகிய உயர்ந்த குன்று, தெளிந்த அலைகள்
உள்ள கடலில் ஆழ்கின்ற கப்பலைப் போலத் தோன்றி, மாலைக்
காலத்தில் மறையும். இதனைக் காண்பாயாக!
சிறப்புக்
குறிப்பு:
அவரைப்
பூவிற்கு கிளிமூக்கு உவமை. இருளில் மறையும் குன்றுக்குக் கடலில் ஆழும் கப்பல் உவமை.
தலைவன்
கார்காலத்தில் வருவதாகக் கூறிச் சென்றான். ஆனால், அவன் கார்காலத்தில் வரவில்லை. கார்காலத்தில் முல்லை மலர்ந்ததைக்
கண்டு, தலைவன் இன்னும் வரவில்லையே என்று வருந்தினாள்.
இப்பொழுது கார்காலம் முடிந்து குளிர்காலம் வந்துவிட்டது. தலைவன் இன்னும் வரவில்லை. அவளுடைய வருத்தம் தொடர்கிறது. பகல்
நேரத்தில், தலைவனுடைய நாட்டில் உள்ள மலையைத் தலைவியால் காணமுடிகிறது.
அந்த மலையைக் காண்பது, தலைவனைக் காண்பதுபோல் தலைவிக்குத்
தோன்றியது. அது அவளுக்கு ஆறூதலாக இருந்தது. ஆனால், கதிரவன் மறைகின்ற மாலை நேரத்தில், கொஞ்சம் கொஞ்சமாக அந்த மலை மறைய ஆரம்பித்து, இருள் சூழ்ந்த
பிறகு, கடலில் மூழ்கிய கப்பலைப்போல், அந்த
மலை, தலைவியின் கண்களுக்குத் தென்படவில்லை. அதனால், அவள்
வருத்தம் அதிகமாகிறது.
No comments:
Post a Comment