Monday, September 12, 2016

248. தோழி கூற்று

248. தோழி கூற்று

பாடியவர்: உலோச்சனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 175 – இல் காணலாம்.
திணை: நெய்தல்
கூற்று: வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி ஆற்றுவித்தது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்குக் காலம் தாழ்த்துகிறான். அதனால் தலைவி வருத்தமாக இருக்கிறாள். தோழி, “உன் தாய் வேலனை அழைத்து வெறியாட்டு நடத்தியபொழுது, உனக்கும் தலைவனுக்கும் உள்ள காதலைப் பற்றித் தெரிந்துகொண்டாள். ஆகவே, உனக்கும் தலைவனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். நீ வருந்தாதே.” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.  

அதுவர லன்மையோ அரிதே அவன்மார்
புறுக வென்ற நாளே குறுகி
ஈங்கா கின்றே தோழி கானல்
ஆடரை புதையக் கோடை யிட்ட
அடும்பிவர் மணற்கோ டூர நெடும்பனைக்
குறிய வாகுந் துறைவனைப்
பெரிய கூறி யாயறிந் தனளே. 

கொண்டு கூட்டு: தோழி! கானல் ஆடு அரை புதையக் கோடை இட்ட அடும்பு இவர் மணற்கோடு ஊர, நெடும்பனைக் குறியவாகும் துறைவனைப் பெரிய கூறி யாய் அறிந்தனள். அதுவரல் அன்மையோ அரிதே அவன் மார்பு உறுக என்ற நாள் குறுகி  ஈங்கு ஆகின்று.

அருஞ்சொற்பொருள்: அதுவரல் அன்மையோ அரிது = அது வராமல் இருப்பது அரிது; உறுதல் = அடைதல்; அரை = அடிப்பாகம்; கோடை = மேல் காற்று; அடும்பு = அடும்புக்கொடி; இவர்தல் = படர்தல்; கோடு = குவியல்; ஊர = பரவ; துறைவன் = நெய்தல் நிலத் தலைவன்; பெரிய கூறுதல் =. இது தெய்வத்தான் வந்ததெனக் கூறுதல்.

உரை: தோழி!, கடற்கரைச் சோலையில் உள்ள, அசையும் அடிமரம் புதையும்படி, மேல்காற்றுக் கொண்டுவந்து குவித்த அடும்பங்கொடியுடன் கூடிய மணல் பரவியதால் நெடிய பனைமரங்கள் குட்டையாகத் தோன்றுகின்றன. அத்தகைய கடற்கரைக்குரிய தலைவனைப் பற்றி, தெய்வத்தால் நேர்ந்தது என்று வெறியாட்டு நடத்தியபொழுது உன் தாய் அறிந்துகொண்டாள். அதனால், திருமணத்திற்குரிய நாள் வராமல் இருப்பது அரிது. நீ அவனது மார்பை அடையும் நாள் விரைவில் வரும்.  

சிறப்புக் குறிப்பு: மேல்காகாற்றினால் பனைமரத்தின் அடிப்பாகம் மறைந்து, பனைமரம் கைக்கு எட்டும் அளவு குட்டையானது என்பது, நாட்கள் செல்லச் செல்லத் திருமணத்திற்கான நாள் விரைவில் வந்துகொண்டிருக்கிறது என்பதைக் குறிக்கிறது.


No comments:

Post a Comment