Sunday, November 6, 2016

264. தலைவி கூற்று

264. தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனது பிரிவால் தலைவியின் உடலில் பசலை தோன்றியது. அதைக் கண்டு தோழி கவலைப் படுகிறாள். தோழியின் கவலையைக் கண்ட தலைவி, “நான் தலைவனின் நட்பின் உறுதியை நன்கு அறிவேன். ஆகவே, நான் இந்தப் பிரிவைப் பொறுத்துக்கொள்வேன். என் உடலில் பசலை தோன்றினாலும், என் மன உறுதியால், இந்தப் பசலை நிலைத்து நிற்காமல் மறைந்து போய்விடும்.” என்று கூறுகிறாள்.

கலிமழை கெழீஇய கான்யாற் றிகுகரை
ஒலிநெடும் பீலி துயல்வர இயலி
ஆடுமயி லகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்தக் காலும் பயப்பொல் லாதே. 

கொண்டு கூட்டு: கலிமழை கெழீஇய கான்யாற்று இகு கரை ஒலிநெடும் பீலி துயல்வர இயலி ஆடுமயில் அகவும் நாடன் நம்மொடு நயந்தனன் கொண்ட கேண்மை பயந்தக் காலும் பயப்பு ஒல்லாது. 

அருஞ்சொற்பொருள்: கலி = இடி முதலியவற்றால் உண்டாகும் ஆரவாரம்; கெழீஇய = பொருந்திய; கான்யாறு = காட்டாறு; ஒலித்தல் = தழைத்தல்; இகுதல் = தாழ்தல்; இகுகரை = தாழ்ந்த கரை; பீலி = மயில்தோகை; துயல்வரும் = அசையும்; இயலி = நடந்து; அகவுதல் = கூவுதல்; நயத்தல் = விரும்புதல்; கேண்மை = நட்பு; பயந்தக் காலும் = பசலையைத் தந்தாலும்; பயப்பு = பசலை; ஒல்லாது = பொருந்தாது.

உரை: (தோழி!)  ஒலியுடன் பெய்கின்ற மழையுடன் பொருந்திய, காட்டாற்றின் தாழ்ந்த கரையில்,  தழைத்த நெடிய தோகை அசைய நடந்து, ஆடுகின்ற மயில்கள் கூவும் நாடன், நம்மோடு விரும்பி உண்டாக்கிக் கொண்ட நட்பானது, நமக்குப் பசலையைத் தந்தாலும், அப் பசலை நம்முடன் பொருந்தாமல் மறைந்து போய்விடும்.

சிறப்புக் குறிப்பு: கலிமழை கெழீஇய கான்யாற்று இகுகரை ஒலிநெடும் பீலி துயல்வர இயலிஆடுமயில் அகவும் நாடன்என்றது, கார்காலம் வந்ததைத் தலைவன் உணர்வான் என்பதையும், ஆண்மயில் பெண்மயிலைக் கூவி அழைப்பதை கண்ட தலைவன், தலைவியை நாடி விரைவில் வருவான் என்பதையும் குறிக்கிறது. இதை இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகக் கருதலாம். மற்றும், முன்பு ஒலியுடன்கூடிப் பெய்த மழை இப்பொழுது காட்டாற்றில் வெள்ளமாக வருவதைக் கண்டு ஆண்மயில் பெண்மயிலை அழைக்கிறது என்றது தலைவன் முன்பு அன்போடு இருந்ததை நினைத்துத் தலைவி இப்பொழுது இன்புறுகிறாள் என்பதைக் குறிப்பதாகக் கருதலாம்.


நயந்தனன் கொண்ட கேண்மைஎன்றது  தலைவன் தலைவியை நாடிவந்து நட்பு கொண்டான் என்பதைக் குறிக்கிறது.  தலைவனுடைய உறுதியான நட்பைத் தலைவி நன்கு அறிந்தவளாகையால், தலைவன், விரைவில் தன்னை நாடி வருவான் என்று எண்ணுகிறாள். அதனால், தன் பசலை நிலைத்து நில்லாமல் மறைந்துவிடும் என்று தோழியிடம் கூறுகிறாள்

No comments:

Post a Comment