Sunday, November 20, 2016

269. தலைவி கூற்று

269. தலைவி கூற்று

பாடியவர்: கல்லாடனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 260 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று : தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவி நெய்தல் நிலத்தில் வாழ்பவள். அவள் தந்தை ஒரு மீனவன். சுறாமீன் தாக்கியதால் உண்டாகிய புண்ணால் அவள் தந்தை பல நாட்கள் வீட்டில் தங்கினான். அவனுக்குப் பணிவிடை செய்வதற்காகத் தலைவியின் தாயும் வீட்டில் இருந்தாள். அதனால், தலைவனும் தலைவியும் பல நாட்கள் சந்திக்க வாய்ப்பில்லாமல் இருந்தது. இந்நிலையில் தலைவன் ஒருநாள் வந்து தலைவியின் வீட்டுக்கு வெளியே மறைவான இடத்தில் நின்றான். அவன் முன்பு பலமுறை வந்து தலைவியைக் காணமுடியாமல் திரும்பிச் சென்றான். இன்றும் தலைவன் தன்னைக் காணாமல் போய்விட்டால் என்ன செய்வதென்று கவலைப்பட்ட  தலைவி, முன்பு தம் கூட்டத்திற்குத் தடையாக இருந்த தந்தையும் தாயும் இன்று வீட்டில் இல்லை என்பதையும் தன்னைச் சந்திப்பதற்கு இதுவே தக்க சமயம் என்பதையும் யாராவது  தலைவனிடம் சொல்லுவதற்காகத் தூது சென்றால் நான்றாக இருக்கும் என்று அவன் காதுகளில் விழுமாறு தோழியிடம் கூறுகிறாள்.

சேயாறு சென்று துனைபரி யசாவா
துசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்ல
வயச்சுறா எறிந்த புண்தணிந் தெந்தையும்
நீனிறப் பெருங்கடல் புக்கனன் யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்புவிளை கழனிச் சென்றனள் அதனால்
பனியிரும் பரப்பிற் சேர்ப்பற்
கினிவரி னெளியள் என்னும் தூதே. 

கொண்டு கூட்டு: ந்தையும் வயச்சுறா எறிந்த புண்தணிந்து, நீல்நிறப் பெருங்கடல் புக்கனன்; யாயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்புவிளை கழனிச் சென்றனள்; அதனால், ”பனியிரும் பரப்பின் சேர்ப்பற்கு இனிவரின் எளியள் என்னும் தூதே சேயாறு சென்று துனை பரி அசாவாது உசாவுநர்ப் பெறினே நன்று மன், தில்ல

அருஞ்சொற்பொருள்: சேயாறு = சேய் + ஆறு = நெடுவழி; துனை = விரைவு; பரிதல் = ஓடுதல்; அசாவாது = சோர்வுறாமல்; உசாவுநர் = ஆலோசனை கூறுவோர்; தில்லவிழைவுக் குறிப்பு; வயம் = வலிமை; தரீஇய = கொண்டு வருவதற்கு; உப்புவிளை கழனி = உப்பு விளைகின்ற அளம்; பனி = குளிர்; இரு = பெரிய; பரப்பு = அகன்ற இடம்; சேர்ப்பன் = நெய்தல் நிலத்தலைவன்.

உரை: (தோழி!) வலிமை உடைய சுறாமீன் தாக்கியதால் உண்டான புண் ஆறி,  மீண்டும் மீன் வேட்டை ஆடும் பொருட்டு, என் தந்தை நீல நிறத்தை உடைய பெரிய கடலுக்குப் போய்விட்டான்;  என் தாயும்,  உப்பை விற்று,  வெண்ணெல்லை வாங்கி வரும் பொருட்டு,  அவ்வுப்பு உண்டாகின்ற அளத்திற்குச் சென்றிருக்கிறாள்; அதனால், குளிர்ச்சியை உடைய பெரிய பரப்பாகிய கடற்கரையை உடைய நெய்தல் நிலத்தலைவனுக்கு,  இப்பொழுது இங்கே வந்தால் தலைவியை எளிதில் கண்டு மகிழலாம்என்ற தூது மொழியை, விரைந்து செல்வதற்கு வருந்தாமல், நெடுந்தூரமாகிய வழியைக் கடந்து சென்று, ஆலோசனை கூறுகின்றவரைப்  பெற்றால் மிகவும் நல்லதாகும். இதையே நான் விரும்புகிறேன்.


சிறப்புக் குறிப்பு: “வயச்சுறா எறிந்த புண்தணிந்து எந்தையும் நீனிறப் பெருங்கடல் புக்கனன்என்றது இதுவரைத் தலைவனைக் காணமுடியாமல் இருந்ததற்குக் காரணத்தைக் குறிப்பிடுகிறது. மற்றும், “நீனிறப் பெருங்கடல்என்றது தந்தை திரும்பிவருவதற்கு நேரமாகும் என்பதைக் குறிக்கிறது. தலைவன் வெகுதூரத்தில் இருப்பவனாகையால் விரைந்து செல்லும் தூதுவர் வேண்டும் என்று  தலைவி விரும்புகிறாள்.   தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்வதால், தூது செல்பவர் பிறர் அறியாமல் ஆராய்ந்து தான் சொல்ல வேண்டியதைச் சரியான முறையில் சொல்ல வேண்டும் என்பதற்காகஉசாவுநர்என்று குறிப்பிடுகிறாள்

1 comment:

  1. ஐய்யா! தமிழண்ணல் அவர்களின் உரையில்: 'தோழி இதைக் கேட்டு, விரைந்து சென்று தலைவனுக்குக் கூற வேண்டும் என்ற குறிப்பும் வரும்போது தோழி விலகிப்போய்விடுமாறு வேண்டுகின்ற குறிப்பும் இதிலுள'

    எனக்கு இது தெளிவாக விளங்கவில்லை.

    ReplyDelete