281. தலைவி கூற்று
பாடியவர்: குடவாயிற்
கீரத்தனார். இவரும் இந்நூலின் 79 – ஆம் பாடலை இயற்றிய
குடவாயில் கீரனக்கனார் என்பவரும் ஒருவரே என்று சிலர் கருதுகின்றனர். கீரத்தனார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் குடவாயிலைச் சார்ந்தவராக
இருந்ததால், இவர் குடவாயில் கீரத்தனார் என்று அழைக்கப்பட்டார்.
இவர் குடவாயிலைச் சார்ந்தவரானாலும், பல ஊர்களுக்கும் சென்று
புரவலர் பலரையும் கண்டு வந்தார்.
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவன் இவருக்கு நன்கு தெரிந்தவன்.
ஆகவே, அவன் இறந்ததால் புலவர் குடவாயில் கீரத்தனார் பெரும்
வருத்தமுற்றுப் புறநானூற்றில் ஒருபாடலை இயற்றியுள்ளார். இவர் புறநானூற்றில்
இயற்றிய ஒருபாடல் (242) மட்டுமல்லாமல், அகநானூற்றில் பத்துப் பாடல்களும் (44, 60, 79, 119, 129, 287, 315,
345, 366, 385), குறுந்தொகையில் மூன்று பாடல்களும் (79, 281,
369), நற்றிணையில் நான்கு பாடல்களும் (27, 42, 212, 379) இயற்றியுள்ளார்.
திணை: பாலை.
கூற்று: பிரிவிடை
வேறுபட்டாளைக் கண்டு தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று
விளக்கம்: தலைவன்
தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவி பிரிவைப்
பொறுத்துகொள்ள முடியாமல் வருந்துகிறாள். ” தலைவர் பொருள்
தேடச் சென்றிருக்கிறார். தேடிய போருள் கிடைத்தவுடன், விரைவில் திரும்பி வந்துவிடுவார். அதுவரை, நீ வருந்தாமல், பொறுமையாக இருக்க வேண்டும்.” என்றி தோழி தலைவிக்கு ஆறுதல் கூற்கிறாள். "தலைவர் கொடிய பாலை நிலத்தை
இன்னல்கள் இன்றிக் கடந்து சென்றாரோ இல்லையோ என்று நான் வருந்துகிறேன்.” என்று தலைவி கூறுகிறாள்.
வெண்மணற் பொதுளிய பைங்காற் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட்
டத்த வேம்பி னமலை வான்பூச்
சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக்
குன்றுதலை மணந்த கானம்
சென்றனர் கொல்லோ சேயிழை நமரே.
கொண்டு
கூட்டு:
சேயிழை! நமர், வெண்மணல் பொதுளிய பைங்காற் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோடு அத்த வேம்பின் அமலை வான்பூச் சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடிக் குன்று தலை மணந்த கானம் சென்றனர் கொல்லோ?
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோடு அத்த வேம்பின் அமலை வான்பூச் சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடிக் குன்று தலை மணந்த கானம் சென்றனர் கொல்லோ?
அருஞ்சொற்பொருள்: பொதுளிய = தழைத்துப் பரவிய; பை = பசுமையான;
கால் = அடிமரம்; கருக்கு
= பனைமட்டை; கொம்மை = திரட்சி; போந்தை = பனை;
குடுமி = மரஉச்சி; வெண்தோடு
= குருத்தோலை; அத்தம் = பாலை
நிலம்; அமலை = திரளை (தழைத்த); வான் = வெண்மை;
சுரி = சுருண்ட; ஆர்தல்
= பொருந்துதல்; உளை = ஆண்
தலைமுடி; தலை மணந்த = இடையிடையே
கொண்டிருத்தல்; கானம் = காடு; சேயிழை = சிவந்த அணிகலன்களை அணிந்த பெண். கொல் - ஐயம்;
ஓ, ஏ - அசை நிலைகள்.
உரை: சிவந்த
அணிகலன்களை அணிந்த தோழியே!
நம் தலைவர், வெண்ணிற மணலில் தழைத்த, பசுமையான அடிப்பக்கத்தையும் கருக்கையும் உடைய, பருத்த
பனைமரத்தின் உச்சியில் உள்ள வெண்மையான குருத்தோலையில் வைத்துக் கட்டிய, பாலை நிலத்தில் உள்ள வேப்ப மரத்தின் தழைத்த வெண்மையான மலரை, சுருண்ட முடியை உடைய தன் தலையில் விளங்கும்படி சூடிக்கொண்டு, குன்றுகளை இடையிடையே உடைய காட்டைக் கடந்து சென்றனரோ?
சிறப்புக்
குறிப்பு:
வேம்பு
பாலை நிலத்திற்கு உரியது. வேம்பின் பூவைக் கூறியதால் தலைவன் பிரிந்த காலம் இளவேனிற் காலம் என்று தெரிகிறது. மலரைப் பனந்தோட்டில் வைத்துக் கட்டி அணிந்து கொள்வது மரபு என்று தெரிகிறது. குன்று தலைமணந்த கானம் என்றது குறிஞ்சியும்
முல்லையும் கலந்து இயல்பு திரிந்த பாலை நிலம் என்பதைக் குறிக்கிறது.
No comments:
Post a Comment