284.
தோழி கூற்று
பாடியவர்: மிளைவேள்
தித்தனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடைத்
தோழி,
கிழத்திக்கு உரைப்பாளாய் உரைத்தது.
கூற்று
விளக்கம்: தலைவன்
திருமணத்திற்காகப் பொருள் தேடச் சென்றிருக்கிறான். தன்னைவிட்டுத் தலைவன் பிரிந்து சென்றதைத் தவறாகப்
புரிந்துகொண்ட ஊர்மக்கள் தன்மீது பழிசுமத்துவதைக்
குறித்துத் தலைவி வருந்துகிறாள். ”தலைவனின் செயலுக்காக நம்மைப் பழிப்பதால் என்ன பயன்? இவ்வூர்
மக்கள் அறிவில்லாதவர்கள்.” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.
பொருத யானைப் புகர்முகங் கடுப்ப
மன்றத் துறுகல் மீமிசைப் பலவுடன்
ஒண்செங் காந்தள் அவிழும் நாடன்
அறவ னாயினும் அல்ல னாயினும்
நம்மே சுவரோ தம்மிலர் கொல்லோ
வரையிற் றாழ்ந்த வால்வெள் ளருவி
கொன்னிலைக் குரம்பையி னிழிதரும்
இன்னா திருந்தவிச் சிறுகுடி யோரே.
கொண்டு
கூட்டு:
பொருத
யானைப் புகர்முகம் கடுப்ப, மன்றத் துறுகல் மீமிசை ஒண்செங் காந்தள் பலவுடன் அவிழும் நாடன் அறவன் ஆயினும் அல்லன் ஆயினும், வரையில் தாழ்ந்த வால்வெள் அருவி கொன் நிலைக்
குரம்பையின் இழிதரும், இன்னாது இருந்த இச் சிறுகுடியோர் நம் ஏசுவரோ? தம்மிலர் கொல்லோ?
அருஞ்சொற்பொருள்: பொருத = போர் செய்த; புகர் = புள்ளி;
கடுப்ப = போல; மன்றம்
= பொதுவிடம்; துறுகல் = பாறை
(குண்டுக்கல்); மீமிசை = மேலே; ஓண் = ஓளி பொருந்திய;
அறவன் = அறவழியில் நடப்பவன்; ஏசுதல் = பழித்தல்; வரை
= மலை; வால் = தூய;
கொன் = அச்சம்; குரம்பை
= குடிசை; இழிதல் = இறங்கி
வருதல்.
உரை: என் காதலனாகிய
தலைவன்,
போர் செய்த யானையின், செங்குருதிப் புண்பட்ட,
புள்ளியை உடைய முகத்தைப் போல், பொதுவிடத்தில் உள்ள
குண்டுக்கல்லின்மேல், ஒளி பொருந்திய செங்காந்தள் மலர்கள் பல
ஒருங்கே மலர்கின்ற நாட்டை உடையவன். அவன் அறவழியில் நடப்பவனானாலும்,
அவ்வாறு நடக்காதவனானாலும், மலையிலிருந்து தாழ்ந்து
விழுகின்ற தூய
வெண்ணிறமான அருவியானது, இலைகளால் வேயப்பட்ட கூரையுடன் கூடிய, அச்சத்தைத் தரும், குடிலின் அருகில் இறங்கி ஓடுவதால், துன்பத்தோடு வாழும் இச்சிற்றூரில்
உள்ளவர்கள், தலைவன் செயலுக்காக
நம்மைப் பழிப்பார்களோ? அவர்கள்
தமக்கென்று ஓர் அறிவும் இல்லாதவர்களோ?
சிறப்புக் குறிப்பு: தலைவன்
திருமனத்திற்காகப் பொருள்தேடச் சென்றிருக்கிறான். அவன் திரும்பி
வந்தவுடன், அறவழியைப் பின்பற்றித் தன் பெற்றோர்கள் சம்மதத்தோடு தன்னை முறையாகத் திருமணம் செய்து
கொள்வானோ அல்லது பெற்றோர்கள் சம்மதிக்காவிட்டால் மடலேற விரும்புவானோ என்பது தலைவிக்குத்
தெரியாது. தலைவன் செய்யப்போகும் செயலுக்காகத் தன்னை ஏன் இவ்வூர்
மக்கள் பழிக்கிறார்கள் என்ற சிந்தனை தலைவியை வருத்துகிறது. ”இவ்வூர்
மக்கள் அறிவில்லாதவர்கள்.” என்று கூறித் தோழி தலைவிக்கு ஆறுதல்
அளிக்கிறாள்.
போர் செய்ததால்
யானையின் முகத்தில் உண்டான புண்ணும் இயல்பாக உள்ள புள்ளிகளும் பாறையின்மேல் மலர்ந்திருக்கும்
செங்காந்தள் மலர்களுக்கு உவமை. பாறையில் மலர்ந்துள்ள செங்காந்தள்
மலர்கள் யானையின் புண்களும் புள்ளிகளும் உள்ள முகம்போல் காட்சி அளிப்பதைப்போல்,
தலைவன் பிரிந்து சென்றிருப்பதை, அவ்வூரில் உள்ள
மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு, தலைவிமீது பழிசுமத்துகிறார்கள்
என்பது குறிப்பு. மலையிலிருந்து விழும் அருவி, இலைகளைக் கூரையாக வேய்ந்த குடிசையில் உள்ளவர்களுக்கு அச்சத்தைத் தருவது போல்,
அவ்வூர் மக்களின் ஓயாத பழிச்சொற்கள் தலைவிக்கு வருத்தத்தைத் தருகின்றன.
No comments:
Post a Comment