Monday, December 19, 2016

286. தலைவன் கூற்று

286.  தலைவன் கூற்று

பாடியவர்: எயிற்றியனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று – 1: இரந்து பின்னின்ற கிழவன், குறைமறாமற் (வேண்டுகோளை மறுக்காதவாறு)  கூறியது.
கூற்று – 2:  பாங்கற்குச் சொல்லியதூஉமாம்.
கூற்று விளக்கம் - 1: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் சந்தித்துப் பழகினார்கள். ஆனால், சில நாட்களாகத் தலைவியைக் காண முடியவில்லை. தலைவியை மீண்டும் சந்திக்க விரும்பிய தலைவன், தோழியின் உதவியை நாடுகிறான். தன்னுடைய வேண்டுகோளைத் தோழி மறுத்துவிடுவாள் என்று நினைத்த தலைவன், தனக்கும் தலைவிக்கும் ஏற்கனவே நெருங்கிய உறவு உண்டு என்பதைச் சுட்டிக் காட்டுகிறான்.
கூற்று விளக்கம் - 2: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் சந்தித்துப் பழகினார்கள். ஆனால், சில நாட்களாகத் தலைவியைக் காண முடியவில்லை. அதனால் தலைவன் வருத்தத்தோடு இருக்கிறான். தலைவனுடைய தோழன் அங்கு வருகிறான். அவன் தலைவனின் வருத்தத்திற்கு என்ன காரணம் என்று கேட்கிறான். ”நான் ஒரு பெண்மீது காதல் கொண்டேன். அவள் மிகவும் அழகானவள். இப்பொழுது அவளைக் காண முடியவில்லை. இனிமேல் நான் அவளை என் உள்ளத்தில் எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருக்கப்போகிறேன் போலிருக்கிறது.”என்று தலைவன் தன் தோழனிடம் கூறுகிறான்.

உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற்
றமிழ்த மூறும்அஞ் செவ்வாய்க் கமழகில்
ஆர நாறும் அறல்போற் கூந்தல்
பேரமர் மழைக்கட் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே. 

கொண்டு கூட்டு: முள் எயிற்று அமிழ்தம் ஊறும்அம் செவ்வாய், அகில் கமழ் ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்பேரமர் மழைக்கண் கொடிச்சி மூரல் முறுவலொடு மதைஇய நோக்கு உள்ளிக் காண்பென் போல்வல்.

அருஞ்சொற்பொருள்: உள்ளி = நினைத்து; எயிறு = பல்; ஆரம் = சந்தனம்; அறல் = கருமணல்; அமர் = போர்; மழை = குளிர்ச்சி; கொடிச்சி = குறிஞ்சி நிலத்துப் பெண்; மூரல் = பல்; முறுவல் = புன்சிரிப்பு; மதைஇய = செருக்குடன் கூடிய.

உரை: முள்போன்ற கூர்மையான பற்கள், அமிழ்தம் ஊறுகின்ற அழகிய சிவந்த வாய்,  அகிற் புகையும், சந்தனப் புகையும் மணக்கின்ற, கருமணலைப் போன்ற கரிய கூந்தல், பெரிதாகப் போரிடுவது போல் அமைந்த குளிர்ந்த கண்கள், புன்சிரிப்போடு கூடிய செருக்கான பார்வை  - இவை அனைத்தையும் உடைய குறிஞ்சி நிலப்பெண்ணாகிய என் தலைவியை, இனி நான் நினைவளவிலே மட்டும் காண்பேன் போலிருக்கிறது.

சிறப்புக் குறிப்பு: மூரல் முறுவல்என்றது பற்கள் சிறிது மட்டும் தோன்றுகின்ற புன்சிரிப்பைக் குறிக்கிறது.

முதற் கூற்றுக் கருத்து: தனக்கும் தலைவிக்கும் நெருங்கிய உறவு உண்டு என்பதைத் தோழிக்கு உணர்த்துவதற்காகத் தலைவன் தலைவியின் அழகை விளக்கமாகக் கூறுகிறான். அவன் தலைவியோடு முன்னரே நன்கு பழகியவன் என்பதைத் தோழி அறிந்தால், தலைவியைச் சந்திப்பதற்குத் தோழி  உதவி செய்வாள் என்று அவன் எண்ணுகிறான்.


இரண்டாம் கூற்றுக் கருத்து: அழகிற் சிறந்த தன் காதலி அடைதற்கு அரியவள் என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான்

No comments:

Post a Comment