Monday, December 19, 2016

288. தலைவி கூற்று

288.  தலைவி கூற்று

பாடியவர்: கபிலர்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகனது வரவு உணர்ந்து, நம்பெருமான் நமக்கு அன்பிலன் என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பொருள் தேடுவதற்காகச் சென்றிருக்கிறான்.  “தலைவன் வருவதாகக் கூறிய பருவம் வந்தது. இன்னும் அவன் வரவில்லை. அவன் உண்மையில் நம்மீது  அன்புடையவனாக இருந்தால் இந்நேரம் வந்திருக்க வேண்டும்.” என்று தோழி தலைவனைப் பழித்துக் கூறினாள். ஆனால், தலைவன் பொருளோடு திரும்பிவந்துவிட்டான். அவன் வந்தது தலைவிக்குத் தெரியும். அது தோழிக்குத் தெரியாது. தலைவன் வந்ததால் மகிழ்ச்சி அடைந்த தலைவி, “தலைவன் மிகவும் அன்புடையவன். அவன் செயல்கள் அனைத்தும் இனிமையானவை. அவன் செயல்கள் துன்பம் விளைவித்தாலும் அவை இன்பமானவைதான்.” என்று தோழியிடம் கூறுகிறாள்.

கறிவளர் அடுக்கத் தாங்கண் முறியருந்து
குரங்கொருங் கிருக்கும் பெருங்க னாடன்
இனிய னாகலி னினத்தி னியன்ற
இன்னா மையினு மினிதோ
இனிதெனப் படூஉம் புத்தே ணாடே. 

கொண்டு கூட்டு: கறிவளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங்கல் நாடன் இனியன். ஆகலின், இனத்தின் இயன்ற இன்னாமையினும், இனிது எனப் படூஉம் புத்தேள் நாடு இனிதோ

அருஞ்சொற்பொருள்: கறி = மிளகுக் கொடி; அருந்துதல் = உண்ணுதல்; அடுக்கம் = மலைப்பக்கம்; ஆங்கண் = அவ்விடத்தில்; முறி = தளிர்; கல் = மலை; இனம் = சுற்றம்; இயற்றுதல் = செய்தல்; புத்தேள் நாடு = சுவர்க்க உலகம்.

உரை: தோழி! மிளகுக் கொடி வளர்கின்ற மலைப்பக்கத்தில்தளிரை உண்ணுகின்ற குரங்குகள் ஒன்றாகத் திரண்டு இருக்கும்  பெரிய மலைகளையுடைய நாட்டின் தலைவன், பழகுவதற்கு இனிமையானவன். ஆதலின், சுற்றத்தார்களால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், இன்பம் நிறைந்தது என்று சொல்லப்படும் தேவருலகம், இனிமையுடையதாகுமோ?

சிறப்புக் குறிப்பு: இனத்தின் இயன்ற இன்னாமைஎன்று தலைவி கூறியதைத் தலைவனை மனதில் வைத்துக் கூறியதாகக் கொள்வது பொருத்தமானதாகத் தோன்றுகிறது. தலைவனின் செயல்களில் சில இன்னாதனவாக இருந்தாலும் முடிவில் அவை இனியனவாகவே முடியும் என்பது தலைவியின் கருத்து.


தேவருலகத்தில் உள்ளவர்கள் இன்பத்தை மட்டுமே நுகர்வதால் அவர்கள் இன்பத்தின் அருமையை அறிய மாட்டர்கள். தலைவனின் பிரிவினால் தலைவி துன்பத்தை அடைந்தாலும், அவன் வந்த பிறகு அவனோடு கூடும்பொழுது இன்பம் மிகுதியாக இருப்பதால்அன்புடைய தலைவனால் வந்த துன்பம் தேவருலகத்தில் உள்ளவர்கள் அனுபவிக்கும் இன்பத்தைவிட அதிகமானது என்றாள்

No comments:

Post a Comment