Sunday, January 8, 2017

290. தலைவி கூற்று

290.  தலைவி கூற்று

பாடியவர்: கல்பொரு சிறுநுரையார்.
திணை: நெய்தல்.
கூற்று: வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவி பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வருந்துகிறாள். பிரிவைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று தோழி அவளுக்கு அறிவுரை கூறுகிறாள். அதைக் கேட்ட தலைவி, “காமத்தின் இயல்பை அறியாத கொடியவர்கள், நான் என் தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறுகின்றனர்.” என்று படர்க்கையில், மற்றவர்களைப் பற்றிக் கூறுவதுபோல் தோழியிடம் வருத்தத்தோடு கூறுகிறாள்.


காமந் தாங்குமதி யென்போர் தாமஃ
தறியலர் கொல்லோ அனைமது கையர்கொல்
யாமெங் காதலர்க் காணே மாயிற்
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லா குதுமே. 

கொண்டு கூட்டு: காமம் தாங்குமதி என்போர், தாம் அஃ து அறியலர் கொல்? அனை மதுகையர் கொல்யாம் எம் காதலர்க் காணேமாயின்செறிதுனி பெருகிய நெஞ்சமொடு, பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போலமெல்ல மெல்ல இல்லாகுதுமே!

அருஞ்சொற்பொருள்: மதிமுன்னிலை அசைசொல்; அனை = அத்தனை; மதுகை = மன வலிமை; செறிதல் = நெருக்கம்; துனி = துன்பம்; செறி துனி = மிகுந்த துன்பம்; பெருநீர் = வெள்ளம்; கல் = பாறை; பொருதல் = மோதுதல்.

உரை: காம நோயைப் பொறுத்துக்கொள்.” என்று கூறுபவர்கள், அக் காமத்தின் தன்மையை அறிந்திலரோ? அல்லது அவர்கள் அவ்வளவு மனவலிமை உடையவர்களோ? நாம் எம் தலைவரைக் காணாவிட்டால், மிகுந்த துன்பத்தோடு, வெள்ளத்தில் மிதந்து வந்து பாறையின் மேல் மோதும் சிறுநுரையைப் போல், மெல்ல மெல்ல அழிந்து போவோம்.

சிறப்புக் குறிப்பு: தலைவனின் பிரிவால் தலைவி  வருந்துவதைக் கண்ட அறிவில்லாதவர்கள், அவள் படும் துன்பத்தை  உணராமல், அவள் காதால் கேட்கும் வகையிலும் கண்ணால் காணும் வகையிலும் எள்ளி நகையாடுவர் என்பதைத் திருவள்ளுவரும் கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

          யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
            யாம்பட்ட  தாம்படா வாறு.                                                             (குறள் – 1140)


பொருள்: அறிவில்லாதவர்கள், நாம் பட்ட துன்பத்தைத் தாம்பட்டு அறியாததால், நாம் காதால் கேட்குமாறு மட்டுமின்றிக் கண்ணாலுங் காணுமாறு நம்மை எள்ளி நகையாடுவர்.

No comments:

Post a Comment