299. தலைவி கூற்று
பாடியவர்: வெண்மணிப்
பூதி.
திணை: நெய்தல்.
திணை: நெய்தல்.
கூற்று : சிறைப்புறமாகத்
தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று
விளக்கம்: தலைவன்
தலைவியின் வீட்டுக்கு வெளியே, தலைவியைக் காண்பதற்காக வந்து
நிற்கிறான். தலைவன் தன்னைக் கூடிய பிறகு, பிரிந்து சென்றால், தன் தோள்கள் மெலிவதாகவும்,
திருமணம் செய்துகொண்டால், பிரிவு இல்லாமல்
இருக்கலாம் என்றும், தலைவன் காதுகளில் கேட்குமாறு, குறிப்பாகத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
இதுமற் றெவனோ தோழி முதுநீர்ப்
புணரி திளைக்கும் புள்ளிமிழ் கானல்
இணரவிழ் புன்னை யெக்கர் நீழற்
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டன மன்னெங் கண்ணே யவன்சொற்
கேட்டன மன்னெஞ் செவியே மற்றவன்
மணப்பின் மாணல மெய்தித்
தணப்பின் நெகிழ்பவெந் தடமென் றோளே.
கொண்டு
கூட்டு:
தோழி! முதுநீர்ப் புணரி திளைக்கும், புள்ளிமிழ் கானல் இணர் அவிழ் புன்னை எக்கர்
நீழல், புணர்குறி வாய்த்த ஞான்றை,
கொண்கன் கண்டன மன் எம் கண்ணே; அவன் சொல் கேட்டன மன் எம் செவியே; மற்று அவன் மணப்பின் மாண் நலம் எய்தி, மற்று அவன்
தணப்பின் என் தட மென்தோள் நெகிழ்ப! இது மற்று எவன்?
அருஞ்சொற்பொருள்: முதுநீர் = கடல்நீர்; புணரி = கடல் அலைகள்; திளைத்தல் = பொருதல்; புள் = பறவை; இமிழ்தல் = ஒலித்தல்; எக்கர் = மணல்மேடு; கானல் = கடற்கரைச் சோலை; ஞான்று = பொழுது; கொண்கன் = நெய்தல் நிலத்தலைவன்; மணத்தல் = கூடுதல்; தணத்தல் = பிரிதல்; புணர்குறி = முதன்முதல் இருவரும் கண்டு காதல்கொண்டு கூடியது; ஞான்று = பொழுது; நெகிழ்தல் = தளர்தல் (சோர்தல்).
அருஞ்சொற்பொருள்: முதுநீர் = கடல்நீர்; புணரி = கடல் அலைகள்; திளைத்தல் = பொருதல்; புள் = பறவை; இமிழ்தல் = ஒலித்தல்; எக்கர் = மணல்மேடு; கானல் = கடற்கரைச் சோலை; ஞான்று = பொழுது; கொண்கன் = நெய்தல் நிலத்தலைவன்; மணத்தல் = கூடுதல்; தணத்தல் = பிரிதல்; புணர்குறி = முதன்முதல் இருவரும் கண்டு காதல்கொண்டு கூடியது; ஞான்று = பொழுது; நெகிழ்தல் = தளர்தல் (சோர்தல்).
உரை: தோழி!
நிலத்தைவிடப் பழையதாகிய கடலின் அலைகள் மோதுகின்ற, பறவைகள்
ஒலிக்கின்ற, கடற்கரைச் சோலையிலுள்ள, பூங்கொத்துக்கள்
மலர்ந்த புன்னைமரங்கள் வளர்ந்த, மணல்மேட்டில் உள்ள நிழலில்,
முதன்முதல் இருவரும் கூடி மகிழும் வாய்ப்புக் கிடைத்த பொழுது,
எம் கண்கள் நெய்தல் நிலத்தலைவனைப் பார்த்தன; எம்முடைய காதுகள் அவனுடைய சொற்களைக் கேட்டன.
எமது பரந்த மெல்லிய தோள்கள்,
அவன் எம்மைக் கூடினால், மிகச் சிறந்த அழகைப்பெற்று,
அவன் பிரிந்தால் அவை சோர்ந்துவிடுகின்றன. இது
என்ன வியப்பு!
சிறப்புக்
குறிப்பு:
”தலைவனைக் கண்ட கண்ணும், கேட்ட செவியும் எவ்விதமான
வேறுபாடும் இல்லாதிருக்கத் தோள்கள் மட்டும் தம் மெலிவைப் பிறர் அறியும்படி
நெகிழ்ந்தன.“என்று தலைவி கூறுகிறாள். களவொழுக்கத்தின் பொழுது, பிரிதலும்
கூடுதலும் இருப்பதால் அவள் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் மாறிமாறி
அனுபவிப்பதாகவும், திருமணம் செய்துகொண்டால், வருத்தம் இல்லாமல் இருக்கலாம் என்று தலைவனுக்கு கேட்குமாறு, தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
No comments:
Post a Comment