301.
தலைவி கூற்று
பாடியவர்: குன்றியனார்.
இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 50 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடை
வைப்ப,
“ஆற்ற கிற்றியோ?” என்ற தோழிக்குக் கிழத்தி
சொல்லியது. (வரைவிடை வைத்தல் – திருமணத்திற்குப்
பொருள் தேடத் தலைவன் பிரிந்து செல்லும் காலம்; ஆற்றகிற்றியோ?
– பொருள் தேடித் தலைவன் வரும்வரை உன்னால் ஆற்றியிருக்க முடியுமா?)
கூற்று
விளக்கம்: தலைவன்
பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்றிருக்கிறான். ”தலைவன் பிரிவை
உன்னால் பொறுத்துக்கொள்ள முடிகிறதா?” என்று தோழி கேட்கிறாள்.
அதற்குத் தலைவி, “தலைவன் வாராவிட்டாலும்,
அவனுடைய தேர் வருவது போன்ற ஒலியை நான் கேட்கிறேன். அதனால், அவன் வருவான் என்னும் நினைவினால் நான் என்னுடைய
உறக்கத்தை இழந்து வருந்துகிறேன்.” என்று கூறுகிறாள்.
முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக்
கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக்
கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல்
மன்றம் போழும் இனமணி நெடுந்தேர்
வாரா தாயினும் வருவது போலச்
செவிமுத லிசைக்கு மரவமொடு
துயில்துறந் தனவால் தோழியென் கண்ணே.
கொண்டு
கூட்டு:
தோழி! முழவுமுதல் அரைய தடவுநிலைப் பெண்ணைக் கொழுமடல் இழைத்த, சிறுகோல் குடம்பைக் கருங்கால் அன்றில் காமர்
கடுஞ்சூல் வயவுப் பெடை அகவும் பானாள் கங்குல் மன்றம் போழும் இனமணி நெடுந்தேர் வாராதாயினும்
வருவது போலச் செவிமுதல் இசைக்கும் அரவமொடு, என் கண் துயில் துறந்தன.
அருஞ்சொற்பொருள்: முழவு = முரசு; அரை = அடிமரம்;
தடவு = வளைவு, பெருமை; பெண்ணை
= பனை; குடம்பை = கூடு;
காமர் = அழகு; கடுஞ்சூல்
= நிறை கருப்பம்; வயவு = கருப்பத்தினால் உண்டாகிய நோய்; பெடை = பெண்பறவை; அகவும் = அழைக்கும்
(கூவும்); பானாள் = நள்ளிரவு;
கங்குல் = இருள்; மன்றம்
= பொதுவிடம்; போழ்தல் = பிளத்தல்;
இசைக்கும் = ஒலிக்கும்; அரவம்
= ஒலி; துறந்தன = இழந்தன.
உரை: தோழி! முரசைப்போன்ற அடிமரத்தையுடைய, பருத்த பனையின்,
கொழுவிய மடலில், கரிய கால்களையுடைய அன்றில் பறவைகள்
சிறிய சுள்ளிகளைக் கொண்டு கூடு கட்டி இருக்கின்றன. அக்கூட்டிலுள்ள, அழகிய, நிறை கருப்பத்தால் உண்டான நோயையுடைய பெண் பறவை, ஆண்பறவையை அழைக்கின்ற, இருள் நிறைந்த நள்ளிரவில்,
தனது சக்கரத்தால் பொதுவிடத்தின் தரையைப் பிளந்து கொண்டு வரும்,
நிறைந்த மணிகளையுடைய தலைவனது நெடியதேர் வராவிட்டாலும், வருவது போல, என் காதில் ஒலிக்கும் ஒலியினால், என்னுடைய கண்கள், தூக்கத்தை இழந்தன.
சிறப்புக்
குறிப்பு:
இரவில் அன்றில் பறவைகள் இன்பமாக வாழ்கின்றன. அவற்றைப்போல் தன் தலைவனோடு
கூடி இன்பமாக வாழும் வாழ்க்கை தனக்குக் கிடைக்கவில்லையே என்ற எண்ணத்தோடு தலைவன் நினைவாகவே
தலைவி இருக்கிறாள். இரவில் தலைவனது தேர் வருவதால் எழும் மணியோசையை முன்பு கேட்டு
அறிந்தவளாதலால், அந்த நினைவால் தேர்மணியின் ஒலி கேட்பதாகத் தலைவிக்குத்
தோன்றுகிறது.
No comments:
Post a Comment