305. தலைவி கூற்று
பாடியவர்: குப்பைக்
கோழியார்.
இப்பாடலில் இவர் குப்பைக் கோழியைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால்,
இவர் இப்பெயர் பெற்றார். இவர் இயற்பெயர் தெரியவில்லை.
இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: மருதம்.
கூற்று : காப்பு
மிகுதிக்கண்,
தோழி அறத்தொடு நிற்பாளாக, தனது ஆற்றாமை
தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது.
கூற்று
விளக்கம்: தலைவனும்
தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். ஒருநாள், தலைவி, வீட்டில் காவலில்
வைக்கப்பட்டாள். அதனால் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியவில்லை. தலைவி மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறாள். ”என் காம நோயைத்
தீர்ப்பதற்கு எனக்கு உதவி செய்பவர்கள் எவரும் இல்லையே.” என்று
தனக்குள் சொல்லிக்கொள்வதின் மூலம், தோழி அறத்தொடு நிற்பாள் என்று
எதிர்பார்க்கிறாள்.
கண்தர வந்த காம ஒள்ளெரி
என்புற நலியினும் அவரொடு பேணிச்
சென்றுநாம் முயங்கற் கருங்காட் சியமே
வந்தஞர் களைதலை அவராற் றலரே
உய்த்தனர் விடாஅர் பிரித்திடை களையார்
குப்பைக் கோழித் தனிப்போர் போல
விளிவாங்கு விளியி னல்லது
களைவோர் இலையா னுற்ற நோயே.
கொண்டு
கூட்டு:
கண்தர
வந்த காம ஒள் எரி, என்பு உற நலியினும், அவரொடு பேணிச்
சென்று நாம் முயங்கற்கு அருங் காட்சியம். அவர் வந்து அஞர் களைதலை ஆற்றலர். குப்பைக் கோழித் தனிப்போர் உய்த்தனர் விடாஅர்; பிரித்து இடை களையார்; அது போல, விளிவாங்கு விளியின் அல்லது, யான் உற்ற நோய் களைவோர் இலை.
சென்று நாம் முயங்கற்கு அருங் காட்சியம். அவர் வந்து அஞர் களைதலை ஆற்றலர். குப்பைக் கோழித் தனிப்போர் உய்த்தனர் விடாஅர்; பிரித்து இடை களையார்; அது போல, விளிவாங்கு விளியின் அல்லது, யான் உற்ற நோய் களைவோர் இலை.
அருஞ்சொற்பொருள்: எரி
=
நெருப்பு; என்பு = எலும்பு;
நலிதல் = வருந்துதல்; பேணி
= விரும்பி; முயங்குதல் = தழுவுதல்; அஞர் = துன்பம்;
உய்த்தல் = அனுப்புதல்; உய்த்தனர்
விடாஅர் = இழுத்து விட மாட்டர்கள்; விளிதல்
= அழிதல்.
உரை: தலைவரைக்
கண்கள் கண்டதால் உண்டாகிய காமமாகிய ஒளிரும் நெருப்பு (காம நோய்), என் எலும்பை வருத்தினாலும், தலைவரை விரும்பிச் சென்று,
அவரைத் தழுவ எண்ணினால், நாமாகச் சென்று அவரைக்
காண இயலாத நிலையில் இருக்கிறோம். நாமிருக்கும் இடத்திற்கு
வந்து நம்முடைய துன்பத்தை நீக்க அவரால் முடியவில்லை. குப்பைக்
கோழிகள் தாமாகவே தனிமையில் போரிடும் பொழுது அவற்றை இழுத்து, இடையிலே
புகுந்து இரண்டு கோழிகளையும் பிரித்துச் சண்டையை யாரும் நிறுத்த மாட்டர்கள்.
அக்கோழிகள் சண்டையிட்டு அழியும். அக்கோழிகள் அழிவது
போல, தானே அழிந்தாலன்றி, என்னுடைய காமநோயைக்
களைவார் யாரும் இல்லை.
சிறப்புக்
குறிப்பு:
தலைவனைக்
கண்டவுடன் அவன்மீது காதல் கொண்டதால், ”கண்தர வந்த
காமவொள்ளெரி”என்றாள். வெளியில் தெரியாமல் மனத்தை வருத்துவதால்
“என்புற நலியினும்” என்றாள். தலைவனை எளிதிற் காண முடியாமல் காவலில்
வைக்கப்பட்டதால், “அருங்காட்சியம்” என்றாள்.
போரிடுவதற்காகக்
கோழிகளை வளர்ப்பவர்கள்,
தங்கள் கோழிகளைச் சண்டையிடச் செய்து, தக்க சமயத்தில்
அவற்றை விலக்கிச் சண்டையை நிறுத்துவர். கோழிகள் தாமாகவே சண்டையிட்டால்,
விலக்குபவர் யாரும் இல்லாமல் அவை புண்பட்டு அழியும். “தனிமையில் சண்டையிட்டு மடியும் கோழிகள் போல, நானும் இறக்கும்
வரை இந்த காமநோயால் வருந்தப் போகிறேன். என்னுடைய இந்தக் காமநோயிலிருந்து என்னைக் காப்பற்றுபவர்கள் யாரும் இல்லை.” என்று தன் நிலையை நினைத்து
வருந்தி, தனக்குத்தானே கூறிக்கொள்கிறாள். அவ்வாறு கூறினால், அதைக் கேட்ட தோழி, தன் காதலைத் தக்க சமயத்தில் தன் பெற்றோருக்குத் தெரிவிப்பாள் என்றும்,
அவள் செயலால் திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் தலைவி எண்ணுகிறாள்.
This comment has been removed by the author.
ReplyDelete