310. தலைவி கூற்று
பாடியவர்: பெருங்கண்ணனார்.
இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 289 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று : வரைவிடை
முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது.
கூற்று
விளக்கம்: தலைவன்
பொருள் தேடச் சென்றிருக்கிறான். தலைவியால் பிரிவைப் பொறுத்துக்கொள்ள
முடியவில்லை. தோழி, “தலைவன் திருமணத்திற்காகப்
பொருள் தேடத்தான் சென்றிருக்கிறான்.
ஆகவே, இந்தப் பிரிவை நீ பொறுத்துக்கொள்ள வேண்டும்.” என்று வலியுறுத்துகிறாள்.
தோழியின் கூற்றால் கோபமடைந்த
தலைவி, ”நான் பொறுத்துகொள்ள வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறுவதை
விடுத்து, யாராவது எனக்காகத் தலைவனிடம் சென்று என் நிலையைப் பற்றிக்
கூறினால் நான் உயிரோடு இருக்க இயலும்.” என்று தோழியிடம் கூறுகிறாள்.
புள்ளும் புலம்பின பூவுங் கூம்பின
கானலும் புலம்புநனி யுடைத்தே வானமும்
நம்மே போலும் மம்மர்த் தாகி
எல்லை கழியப் புல்லென் றன்றே
இன்னும் உளெனே தோழி இந்நிலை
தண்ணிய கமழு ஞாழல்
தண்ணந் துறைவர்க் குரைக்குநர்ப் பெறினே.
கொண்டு
கூட்டு:
தோழி! புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின; கானலும் புலம்பு நனி உடைத்து; வானமும் நம்மே போலும் மம்மர்த்து ஆகி எல்லை கழியப் புல்லென்றன்று.
இந்நிலை, தண்ணிய கமழும் ஞாழல் தண்அம் துறைவர்க்கு உரைக்குநர்ப் பெறின் இன்னும் உளென்.
அருஞ்சொற்பொருள்: புள் = பறவை; புலம்பின = ஒலித்தன;
நனி = மிகுதியாக; மம்மர் = மயக்கம்; எல்லை
= பகல் நேரம்; புல்லென்றன்று = பொலிவிழந்தது; ஞாழல் = ஒருவகை மரம்
(புலிநகக் கொன்றை); துறைவன் = நெய்தல் நிலத் தலைவன்.
உரை: தோழி! பறவைகளும் ஒலித்தன; மலர்களும் குவிந்தன; கடற்கரைச்
சோலையும் தனிமை மிகுந்ததாயிற்று. வானமும் நம்மைப் போல் மயக்கத்தை
உடையதாகி, பகல் நேரம்
முடிந்ததால் பொலிவிழந்தது. குளிர்ச்சியுடன் கூடிய மணம் கமழும் மலர்களை உடைய
ஞாழல் மரங்கள் வளர்ந்த, குளிர்ந்த அழகிய துறையை உடைய தலைவருக்கு, என்னுடைய இந்த நிலையைப் பற்றி உரைப்பவரைப் பெற்றால், நான் தொடர்ந்து உயிரோடு இருப்பேன்.
(இல்லையேல், நான் இறப்பேன்.)
சிறப்புக்
குறிப்பு:
பூ
என்றது ஆம்பல் முதலிய நீர்ப்பூக்களை குறிக்கிறது. ”நம்மே போலும்
மம்மர்த்தாகி” என்பதனால் தான் மயக்கமுடையவள் என்பதைத் தலைவி தெரிவிக்கிறாள். தன்னைக் கடிந்துரைப்பவர்கள் மட்டும்தான் உண்டு. தன்னுடைய
துயரத்தை உணர்ந்து தனக்காகத் தலைவனிடம் சென்று தன் நிலையை உரைப்பார் யாரும் இல்லையே
என்று தலைவி வருந்துகிறாள். இவ்வாறு தலைவி கூறுவது, தோழி தலைவனிடம் சென்று, தன் நிலையைப் பற்றிக் கூற வேண்டும்
என்று அவள் விரும்புவதைக் குறிக்கிறது.
No comments:
Post a Comment