322. தலைவி கூற்று
பாடியவர்: ஐயூர்
முடவனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தலைமகன்
வரவுணர்ந்து தலைமகள் இயற்பட மொழிந்தது. (இயற்பட மொழிதல் = தலைவனின் இயல்பைச் சிறப்பித்துக் கூறுதல்)
கூற்று
விளக்கம்: தலைவன்
வரவுக்காகத் தலைவி காத்திருக்கிறாள். தலைவன் குறித்த நேரத்தில்
வராததால், தோழி, “தலைவனின் தன்மை வேறு;
நம்முடைய தன்மை வேறு. இருவர் தன்மையும் ஒத்தவை
அல்ல. அவனுக்காகக் காத்திருப்பதில் பயனில்லை.” என்று அவன் இயல்பைப் பழித்துக் கூறுகிறாள்.
தலைவன் வருகையை அறிந்த தலைவி, “அவன் வராவிட்டால்,
நாம் அவன் இருக்கும் இடத்திற்கு நடந்து செல்வோம். அங்குப் போய், அவனோடு கூடிப் பழகுவோம்.” என்று தோழியிடம் கூறுகிறாள்.
அமர்க்க
ணாமான் அஞ்செவிக் குழவி
கானவ ரெடுப்ப வெரீஇ யினந்தீர்ந்து
கான நண்ணிய சிறுகுடிப் பட்டென
இளைய ரோம்ப மரீஇயவ ணயந்து
மனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு
மருவின் இனியவு முளவோ
செல்வாந் தோழி யொல்வாங்கு நடந்தே.
கானவ ரெடுப்ப வெரீஇ யினந்தீர்ந்து
கான நண்ணிய சிறுகுடிப் பட்டென
இளைய ரோம்ப மரீஇயவ ணயந்து
மனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு
மருவின் இனியவு முளவோ
செல்வாந் தோழி யொல்வாங்கு நடந்தே.
கொண்டு
கூட்டு:
தோழி! கானவர் எடுப்ப, அமர்க்கண் ஆமான்
அம் செவிக் குழவி, வெரீஇ, இனம் தீர்ந்து கானம் நண்ணிய சிறுகுடிப் பட்டென இளையர் ஓம்ப
மரீஇ, அவண் நயந்து மனையுறை
வாழ்க்கை வல்லியாங்கு, மருவின் இனியவும் உளவோ? ஒல்வாங்கு நடந்து செல்வாம்!
அருஞ்சொற்பொருள்: அமர் = விருப்பம்; ஆமான் = காட்டுப்பசு;
செவி = காது; குழவி
= கன்று; வெரீஇ = அஞ்சி;
கானம் = காடு; நண்ணிய
= அருகே உள்ள; ஓம்ப = பாதுகாக்க;
மரீஇ = கலந்து (பழகி);
அவண் = அவ்விடம்; நயந்து
= விரும்பி; வல்லியாங்கு = வலிமையைப் பெற்றது போல; மருவுதல் = கலத்தல்; ஒல்வாங்கு = இயன்ற அளவு.
உரை: தோழி! காட்டில் உள்ள வேட்டுவர் ஒலி எழுப்பியதால், விரும்பத்
தகுந்த கண்களையுடைய காட்டுப்
பசுவின் அழகிய காதுகளையுடைய கன்று, அஞ்சித் தன்
இனத்தினின்றும் பிரிந்து சென்று, காட்டின் அருகே உள்ள சிறிய
ஊருக்குப் போய்ச் சேர்ந்தது. அவ்வூரில் உள்ள இளைஞர்கள் அந்தக் கன்றைப் பாதுகாத்து வளர்த்தனர்.
அந்தக் கன்று அந்த இளைஞர்களோடு கூடிப் பழகியது. பின்னர், அவ்விடத்தையே விரும்பி, காட்டில் வாழ்வதைவிட வீட்டில் வாழும் வாழ்க்கையில் வன்மை பெற்றது. அது போலக் கூடிப் பழகுதலைவிட, இனியதும் உளதோ?
அதனால், நாமும் நம்மால் இயன்ற அளவு நடந்து,
தலைவன் இருக்கும் இடத்திற்குச் செல்வோம்.
சிறப்புக்
குறிப்பு:
காட்டுப்பசுவின்
கன்று,
காட்டில் வாழும் வாழ்க்கையைவிட, சிறுகுடியில் உள்ள
இளைஞர்களோடு கூடிப் பழகி, வீட்டில் வாழும் வாழ்க்கையை விரும்புவதைப்
போல், தலைவன் இயல்பு
தன் இயல்பிலிருந்து மாறுபட்டதானாலும் அவனோடு பழகி, அவன் இயல்புகளைப் பெற்று வாழவேண்டும் என்று தலைவி விரும்புகிறாள் என்பது குறிப்பு.
சிறுவயதில் பெற்றோரின் வீட்டில் வளர்ந்து பழக்கப்பட்ட தலைவி,
திருமணத்திற்குப் பிறகு, தலைவன் வீட்டிற்குச் சென்று,
அவனோடும் அவன் சுற்றத்தாரோடும் ஒத்து வாழ்வதை விரும்புகிறாள் என்பதைத்
தலைவனுக்குத் தெரிவிக்கும் வகையில், அவன் காதுகளில் கேட்குமாறு,
காட்டுப் பசுவின் கன்றைப் பற்றிக் கூறுகிறாள் என்றும் பொருள் கொள்ளலாம்.
No comments:
Post a Comment