329. தலைவி கூற்று
பாடியவர்: ஓதலாந்தையார்.
திணை: பாலை.
கூற்று : பிரிவிடை
மெலிந்த கிழத்தி வற்புறத்துந் தோழிக்கு யான் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.
கூற்று
விளக்கம்: தலைவனின்
பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலைவி வருத்தத்தோடு அழுதுகொண்டிருந்தாள். அதைக் கண்ட தோழி, “நீ பொறுமையாக இருக்க வேண்டும்.
அவர் விரைவில் வந்துவிடுவார். அவரை நினைத்து,
நீ தூங்காமல் இருப்பதையும் அழுவதையும் நிறுத்து.“ என்று கூறுகிறாள். அதற்கு மறுமொழியாக, “நான் பொறுத்துக்கொண்டுதான் இருக்க விரும்புகிறேன். இருந்தாலும்,
என் கண்கள் தானாகவே தூக்கத்தை இழந்து அழுகின்றன. அதற்கு நான் என்ன செய்வேன்.?” என்று தலைவி தன் கண்களை
வேறுபடுத்திக் கூறுகிறாள்.
கான
விருப்பை வேனல் வெண்பூ
வளிபொரு நெடுஞ்சினை உகுத்தலி னார்கழல்பு
களிறுவழங்கு சிறுநெறி புதையத் தாஅம்
பிறங்குமலை அருஞ்சுரம் இறந்தவர்ப் படர்ந்து
பயிலிருள் நடுநாள் துயிலரி தாகித்
தெண்ணீர் நிகர்மலர் புரையும்
நன்மலர் மழைக்கணிற் கெளியவாற் பனியே.
வளிபொரு நெடுஞ்சினை உகுத்தலி னார்கழல்பு
களிறுவழங்கு சிறுநெறி புதையத் தாஅம்
பிறங்குமலை அருஞ்சுரம் இறந்தவர்ப் படர்ந்து
பயிலிருள் நடுநாள் துயிலரி தாகித்
தெண்ணீர் நிகர்மலர் புரையும்
நன்மலர் மழைக்கணிற் கெளியவாற் பனியே.
கொண்டு
கூட்டு:
கான
இருப்பை வேனல் வெண்பூ வளி பொரு நெடும் சினை உகுத்தலின், ஆர்கழல்பு, களிறு வழங்கு
சிறுநெறி புதையத் தாஅம் பிறங்கு மலை அருஞ்சுரம்
இறந்தவர்ப் படர்ந்து, பயில் இருள் நடுநாள் துயில் அரிதாகித் தெள்நீர் நிகர்மலர் புரையும் நன்மலர் மழைக்கணிற்கு
பனி எளிய.
அருஞ்சொற்பொருள்: கானம் = காடு; இருப்பை = ஒருவகை
மரம்; வேனல் = வேனிற்காலம்; வளி = காற்று; பொருதல்
= தாக்குதல்; சினை = கிளை; உகுத்தல் = உதிர்த்தல்; ஆர் = காம்பு;
கழல்பு = கழன்று; புதைய = மறைய;
தாஅம் = பரவும்; பிறங்குதல்
= விளங்குதல்; இறந்தவர் = கடந்தவர்; படர்தல் = நினைத்தல்;
பயில்தல் = நெருங்கல்; நிகர்
= ஒளி; புரையும் = போன்ற;
பனி = நீர்த்துளி.
உரை: காட்டில்
வளர்ந்த இருப்பை மரத்தின்,
வேனிற்காலத்திலே மலரும் வெண்ணிறமான
பூக்கள், காற்றால்
அலைக்கப்பட்ட நெடிய கொம்புகள் உதிர்ப்பதால், காம்பினின்றும் கழன்று,
யானைகள் செல்லும் சிறிய வழி மறையும்படி, பரவிக்
கிடக்கும். அத்தகைய மலைகளையுடைய, கடத்தற்கு
அரிய பாலைநிலத்தைக் கடந்து சென்ற தலைவரை நினைத்து, மிகுந்த இருளையுடைய
நடு இரவில், தூங்காமல், தெளிந்த நீரில் உள்ள ஒளி பொருந்திய மலரைப் போன்ற,
நன்றாக விளங்குகின்ற, குளிர்ச்சியையுடைய என் கண்களில்,
நீர்த்துளிகள் எளிதில் உண்டாகின்றன.
No comments:
Post a Comment