334. தலைவி கூற்று
பாடியவர்: இளம்பூதனார்.
திணை: நெய்தல்.
கூற்று : “வரைவிடை ஆற்றகிற்றியோ?” என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.
கூற்று
விளக்கம்: ”தலைவன் திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்றால், உன்னால் அவன் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியுமா?” என்று
கேட்ட தோழிக்கு, “அவன் பிரிந்தால் என் உயிர் போகும். அதைத் தவிர இழப்பதற்கு என்னிடம் வேறு என்ன உள்ளது?” என்று
தலைவி கூறுகிறாள்.
சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோ
டெறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப்
பனிபுலந் துறையும் பல்பூங் கானல்
விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பி னொருநம்
இன்னுயி ரல்லது பிறிதொன்
றெவனோ தோழி நாமிழப் பதுவே.
கொண்டு
கூட்டு:
தோழி! சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோடு எறிதிரைத் திவலை ஈர்ம்புறம்
நனைப்ப, பனி புலந்து உறையும் பல்பூங்கானல், விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பின், நாம் இழப்பது,
ஒரு நம் இன்னுயிர்
அல்லது பிறிது ஒன்று எவன்?
அருஞ்சொற்பொருள்: தோடு = தொகுதி (கூட்டம்); எறிதல்
= வீசுதல்; திரை = அலை;
திவலை = நீர்த்துளி; புறம்
= முதுகு; புலந்து = வெறுத்து;
பனி = குளிர்; புலந்து
= வெறுத்து; உறையும் = தங்கும்;
கானல் = கடற்கரைச் சோலை; விரி நீர் = அகன்ற நீருள்ள இடம் ( கடற்கரை); சேர்ப்பன் = நெய்தல்
நிலத்தலைவன்; நீப்பின் = பிரிந்தால்.
உரை: தோழி! சிறிய, வெண்ணிறமான, சிவந்த வயையுடைய
காக்கைகளின் பெரிய கூட்டம், வீசுகின்ற அலைகளின் நீர்த்துளிகள் தம் ஈரமான முதுகை
நனைப்பதால், குளிரை வெறுத்து, அவை தங்கும்
இடமாகிய, பலமலர்கள் உள்ள சோலையையுடைய, அகன்ற
கடற்கரைத் தலைவன் நம்மைப் பிரிந்தால், நாம் இழக்கப் போவது நமது
ஒரே ஒரு இனிய உயிர் மட்டுமே; அதைத் தவிர நம்மிடம் வேறு என்ன உள்ளது?
No comments:
Post a Comment