350.
தோழி கூற்று
பாடியவர்:
ஆலத்தூர்
கிழார்.
திணை: பாலை.
கூற்று : பிரிவு
நேர்ந்த
(உடன்பட்ட) தலைமகள், அவனது
நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது.
கூற்று
விளக்கம்: பொருள்
தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவினால், தலைவி வருந்தி, உடல்
மெலிந்ததைக் கண்ட தோழி, ”அவர் செல்லும் பொழுது, நாம் அவரைப் போக வேண்டாம் என்று தடுத்திருந்தால், அவர்
போயிருக்க மாட்டார். அவர் செல்லும் பொழுது, பிரிவுக்கு உடன்பட்டு, இப்பொழுது வருந்துவது முறையன்று”
என்று கூறுகிறாள்.
அம்ம வாழி
தோழி முன்னின்று
பனிக்கடுங் குரையஞ் செல்லா தீமெனச்
சொல்லின மாயிற் செல்வர் கொல்லோ
ஆற்றய லிருந்த இருந்தோட் டஞ்சிறை
நெடுங்காற் கணந்துள் ஆளறி வுறீஇ
ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்
மலையுடைக் கான நீந்தி
நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே.
பனிக்கடுங் குரையஞ் செல்லா தீமெனச்
சொல்லின மாயிற் செல்வர் கொல்லோ
ஆற்றய லிருந்த இருந்தோட் டஞ்சிறை
நெடுங்காற் கணந்துள் ஆளறி வுறீஇ
ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்
மலையுடைக் கான நீந்தி
நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே.
கொண்டு
கூட்டு:
தோழி! வாழி! அம்ம! ஆற்று அயல் இருந்த, இருந்தோட்டு அம்சிறை, நெடுங்கால் கணந்துள் ஆள் அறிவுறீஇ, ஆறுசெல் வம்பலர் படை தலைபெயர்க்கும்,
மலையுடைக் கானம் நீந்தி, நிலையாப் பொருட்பிணிப்
பிரிந்திசினோர் முன்நின்று, ”பனிக் கடுங்குரையம்; செல்லா தீம்” எனச் சொல்லினமாயின்
செல்வர் கொல்லோ?
அருஞ்சொற்பொருள்: அம்ம
-
இடைச் சொல். நான் சொல்வதைக் கேட்பாயாக என்ற பொருளில்
வந்தது; குரை - அசைநிலை;
செல்லாதீம் = செல்லாதீர்கள்; ஆற்று அயல் = வழிப் பக்கத்தில்; இரும் = பெரிய; தோடு = கூட்டம்; சிறை = சிறகு;
கணந்துள் = ஒருவகைப் பறவை (இது, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வாழும் பறவை.
இது, மனிதர்களைக் கண்டால், அவர்கள் அகன்று செல்லும் வரை கத்தும் வழக்கம் உள்ள பறவை என்று கூறுவர்.);
அறிவுறீஇ = அறிவுறுத்தி; வம்பலர் = வழிப்போக்கர்; நீந்தி
= கடந்து; பிணி = பற்று.
உரை: தோழி! வாழி! நான் கூறுவதைக் கேட்பாயாக! வழிப் பக்கத்தில், பெரிய கூட்டமாக இருந்த, அழகிய சிறகுகளையும் நெடிய கால்களையும் உடைய கணந்துள் பறவைகள், தமக்கு ஊறு விளைக்கும் வேட்டுவ மக்கள் உள்ளதை அறிவுறுத்தி, வழிப்போக்கர்களது படைத்திரளை அந்த இடத்தினின்று நீங்கச் செய்யும். அத்தகைய மலையையுடைய காட்டைக் கடந்து, நிலையில்லாத
பொருள் வேட்கையினால் நம்மைப் பிரிந்து சென்றோர், அவர்
பிரியுங்காலத்து, அவர் முன்னே நின்று, ” நாம் பனிக் காலத்தில் தாங்க முடியாத கடுந்துயர் அடைவோம். எம்மைப் பிரிந்து செல்லாதீர்”என்று முன்பே கூறியிருந்தால்,
அவர் சென்றிருப்பாரோ?
No comments:
Post a Comment