Monday, June 5, 2017

353. தோழி கூற்று

353. தோழி கூற்று
பாடியவர்: உறையூர் முதுகூற்றனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : பகற்குறி வந்து ஒழுகும் தலைமகன் வெளிப்பாடஞ்சி இரவுக்குறி நயந்தானது குறிப்பறிந்த தோழி, இரவின் கண் அன்னையது காவலறிந்து பின்னும் பகற்குறியே நன்று; அவ்விரவுக் குறியின்என்று பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்துத் தலைமகன் சிறைப்புறத்தானாக வரைவு கடாயது.
கூற்று விளக்கம்: தலைவன் பகலில் வந்து தலைவியோடு கூடி மகிழ்ந்தான். ஆனால், பகலில் தான் தலைவியைச் சந்திப்பதைப் பாலரும் அறியக்கூடும் என்பதை உணர்ந்த தலைவன், தான் அவளை இரவில் சந்திக்க விரும்புவதாகத் தோழியிடம் கூறினான். ஒருநாள், தலைவியைச் சந்திப்பதற்காக வந்து, தலைவன் தலைவியின் வீட்டுக்கு வெளியே நிற்கிறான். “தலைவன் உன்னை இரவில் சந்திக்க விரும்புகிறான். ஆனால், அன்னை நம்மைத் தழுவிக்கொண்டு உறங்குவதால் தலைவனை இரவில் சந்திப்பது இயலாதுஎன்று தலைவனின் காதுகளில் விழுமாறு தோழி கூறுகிறாள். தலைவன் பகலில் சந்திப்பதை விரும்பவில்லை. தலைவியால் இரவில் சந்திக்க முடியாது. இந்தச் சூழ்நிலையைத் தலைவன் புரிந்துகொண்டால் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்ற நோக்கத்தோடு தோழி இவ்வாறு கூறுகிறாள். 

ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக்
கோடுயர் நெடுவரைக் கவாஅற் பகலே
பாடின் அருவி ஆடுதல் இனிதே
நிரையிதழ் பொருந்தாக் கண்ணோ டிரவிற்
பஞ்சி வெண்திரிச் செஞ்சுடர் நல்லிற்
பின்னுவீழ் சிறுபுறந் தழீஇ
அன்னை முயங்கத் துயிலின் னாதே. 


கொண்டு கூட்டு: பகல் கோடு உயர் நெடுவரைக் கவான் ஆர்கலி வெற்பன் மார்பு புணையாகபாடு இன் அருவி ஆடுதல் இனிது. இரவில் பஞ்சி வெண்திரிச் செஞ்சுடர்
நல் இல் அன்னை பின்னுவீழ் சிறுபுறம் தழீஇ முயங்க நிரை இதழ் பொருந்தாக்  கண்ணோடு, துயில் இன்னாது

அருஞ்சொற்பொருள்: ஆர்கலி = ஆரவாரம்; புணை = தெப்பம் (பற்றுக்கோடு); கோடு = மலையுச்சி; வரை = மலை; கவான் = மலைச்சாரல்; வெற்பன் = குறிஞ்சி நிலத்தலைவன்; பாடு = ஓசை; பின்னு = பின்னல்; சிறுபுறம் = பிடரி; தழீஇ = தழுவி; நிரை = வரிசை; இதழ் = இமை.

உரை: பகற் பொழுதில், உயர்ந்த சிகரங்களையுடைய நீண்ட மலைச்சாரலின் பக்கத்தில்,  இனிய ஓசையுடன் வீழ்கின்ற அருவியில், ஆர்வாரமுடைய குறிஞ்சி நிலத்தலைவனின் மார்பைத் தெப்பமாகக்கொண்டு நீராடுவது இனிது. இரவில், பஞ்சாலாகிய வெண்மையான  திரி எரிகின்ற விளக்கையுடைய நல்ல வீட்டில், நம் தாய், நம் பின்னல் தாழ்கின்ற பிடரியைத் தழுவி, அணைத்துக்கொண்டிருக்க, வரிசையாகிய இமைகள் ஒன்றோடு ஒன்று பொருந்தாத விழிகளோடு,  நாம் தூங்குதல் துன்பம் தருவதாகும்.

No comments:

Post a Comment