355. தோழி கூற்று
பாடியவர்: கபிலர்.
திணை: குறிஞ்சி.
கூற்று : இரவுக்குறி
வந்த தலைமகற்குத் தோழி நொந்து (வருந்திக்) கூறியது.
கூற்று
விளக்கம்: தலைவன், மழை பெய்கின்ற, இருள் மிகுந்த நள்ளிரவில் தலைவியைச் சந்திப்பதற்கு
வருகிறான். ”இந்த நள்ளிரவில், இருளில்,
மழையில், நீ எவ்வாறு வந்தாய்?” என்று தோழி தலைவனை வியப்போடு கேட்கிறாள்.
பெயல்கண்
மறைத்தலின் விசும்புகா ணலையே
நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலையே
எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்
யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப
வேங்கை கமழுமெஞ் சிறுகுடி
யாங்கறிந் தனையோ நோகோ யானே.
நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலையே
எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்
யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப
வேங்கை கமழுமெஞ் சிறுகுடி
யாங்கறிந் தனையோ நோகோ யானே.
கொண்டு
கூட்டு:
ஓங்கல்
வெற்ப! பெயல் கண் மறைத்தலின் விசும்பு காணலை.
நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலை. எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று.
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் யாங்கு வந்தனையோ! வேங்கை கமழும் எம் சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ? யான் நோகு.
நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலை. எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று.
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் யாங்கு வந்தனையோ! வேங்கை கமழும் எம் சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ? யான் நோகு.
அருஞ்சொற்பொருள்: ஓங்கல் = உயர்ந்த மலை; பெயல் = மழை;
விசும்பு = ஆகாயம்; எல்
= ஞாயிறு; சேறல் = செல்லல்;
துஞ்சும் = உறங்கும்; பானாள்
= நள்ளிரவு; நோகு = வருந்துகிறேன். வந்தனையோ, அறிந்தனையோ என்பவற்றில் உள்ளா ஓகாரம் அசைநிலை. நோகோ என்பதில் உள்ளா ஓகாரம் இரங்கற்
குறிப்பு. ஏகாரங்கள் அசைநிலை.
உரை: உயர்ந்த
மலையையுடைய தலைவனே!
மழை கண்ணை மறைப்பதால் ஆகாயத்தைக் காண முடியவில்லை. அம்மழை நீர் எங்கும் பரந்து ஓடுவதால், நிலத்தைக் காணமுடியவில்லை.
கதிரவன் மறைந்ததால், இருள் மிகுதியானது.
இந்நிலையில், பலரும் உறங்குகின்ற நள்ளிரவில்,
எங்ஙனம் வந்தாய்? வேங்கைமரத்தின் மலர் மணம்
வீசுகின்ற, எமது சிற்றூரை, எங்ஙனம்
அறிந்தாய்? உன் வருகையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.
சிறப்புக்
குறிப்பு:
மழை
பெய்ததால்,
ஆகாயத்தில் உள்ள விண்மீன்களின் ஒளியைக் காணமுடிவில்லை. அதனால், செல்லும் திசையை அறிய முடியவில்லை. நீர் பரவி ஓடுவதால், நிலத்தைக் காண முடியாததால்,
செல்லும் வழியைக் காண முடியவில்லை. தலைவன் வந்த
நேரம் நள்ளிரவாகையால், ஊரில் அனைவரும் ஒலியின்றி உறங்குகிறார்கள்.
இவ்வாறு, இன்னல்கள் மிகுந்த சூழ்நிலையில் தலைவன்
தலைவி இருக்கும் இடத்தை எப்படித் தேடி வந்தான் என்று தோழி வியப்படைகிறாள்.
‘வேங்கை கமழும் எம் சிறுகுடி’ என்றது,
‘அவ்வேங்கை மலரின் மணத்தைக் கொண்டு எம் ஊரை அறிந்தாய் போலும்!’
என்று தோழி கூறுவதைக் குறிக்கிறது. இவ்வாறு,
இன்னல்களை எதிர்கொண்டு, இரவில் வருவதைவிட,
திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்துவது சிறந்தது என்பது குறிப்பு.
No comments:
Post a Comment