360. தலைவி கூற்று
பாடியவர்: மதுரை
ஈழத்துப் பூதன் தேவனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தலைமகன்
சிறைப்புறத்தானாக வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது. (வெறி = வெறியாட்டு).
கூற்று
விளக்கம்: தலைவனும்
தலைவியும் இரவில் சந்தித்துத் தங்கள் களவொழுக்கத்தைத் தொடர்ந்து வந்தார்கள். தலைவனோடு கூடி மகிழ்வதைத் தலைவி விரும்பினாலும், அவன்
இரவில் வருவதால் அவனுக்கு இன்னல்கள் நேரலாம் என்பதை நினைத்து வருந்துகிறாள்.
இவ்வாறு, களவொழுக்கத்தைத் தொடர்வதைவிட,
திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்தினால் இன்பமாக இருக்கலாம்.
ஆனால், அதற்கான முயற்சிகளைத் தலைவன் மேற்கொள்ளவில்லை.
இத்தகைய எண்ணங்களால் தலைவி மிகவும்
வருந்தி உடல் மெலிந்தாள். அவள் உடலில் தோன்றிய மாற்றங்களைக் கண்ட
தாய், வேலனை அழைத்து வெறியாட்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்கிறாள்.
தன் நோயின் காரணத்தையும், அதற்கான பரிகாரத்தையும்
வேலன் அறியாதவன் என்பதைத் தாய் அறிந்துகொள்ள வேண்டும் என்று தலைவி விரும்புகிறாள்.
ஒருநாள் இரவு, தலைவியைக் காண்பதற்காகத் தலைவன்
வழக்கம் போல் வந்து, வீட்டின் வேலிக்கு வெளியே நிற்கிறான்.
அவன் வரவை உணர்ந்த தலைவி, “தலைவன் இனி இரவில் வராமலிருக்க
வேண்டும். அதுவே என் விருப்பம்” என்று தலைவன்
காதுகளில் விழுமாறு தோழியிடம் கூறுகிறாள்.
வெறியென உணர்ந்த வேல னோய்மருந்
தறியா னாகுதல் அன்னை காணிய
அரும்படர் எவ்வம் இன்றுநாம் உழப்பினும்
வாரற்க தில்ல தோழி சாரற்
பிடிக்கை அன்ன பெருங்குரல் ஏனல்
உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே
சிலம்பிற் சிலம்புஞ் சோலை
இலங்குமலை நாடன் இரவி னானே.
கொண்டு
கூட்டு:
தோழி
அரும்படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும், வெறிஎன
உணர்ந்த வேலன், நோய் மருந்து அறியான் ஆகுதல், அன்னை காணிய, சாரல்
பிடிக் கை அன்ன பெருங்குரல் ஏனல், உண்கிளி கடியும் கொடிச்சி கைக்குளிரே சிலம்பின் சிலம்பும் சோலை இலங்குமலை நாடன் இரவினான், வாரற்க! தில்ல!
அருஞ்சொற்பொருள்: வெறி = வெறியாட்டு; படர் = நினைத்தல்; எவ்வம் = துன்பம்; உழத்தல் = வருந்துதல்; தில்ல – விழைவுக் குறிப்பு; பிடி = பெண்யானை; கை = துதிக்கை; குரல் = கதிர்; ஏனல் = தினை; குளிர் = ஒருவகை இசைக்கருவி.
பிடிக் கை அன்ன பெருங்குரல் ஏனல், உண்கிளி கடியும் கொடிச்சி கைக்குளிரே சிலம்பின் சிலம்பும் சோலை இலங்குமலை நாடன் இரவினான், வாரற்க! தில்ல!
அருஞ்சொற்பொருள்: வெறி = வெறியாட்டு; படர் = நினைத்தல்; எவ்வம் = துன்பம்; உழத்தல் = வருந்துதல்; தில்ல – விழைவுக் குறிப்பு; பிடி = பெண்யானை; கை = துதிக்கை; குரல் = கதிர்; ஏனல் = தினை; குளிர் = ஒருவகை இசைக்கருவி.
உரை: தோழி! பொறுத்தற்கரிய நினைவால் உண்டாகும்
துன்பத்தை அடைந்து, இன்று நாம் வருந்தினாலும், நமது நோயைத் தீர்க்கும் வழி வெறியாடுதல் என்று தெளிந்த வேலன், அந்நோயைத் தீர்ப்பதற்கு உரிய பரிகாரத்தை அறியாதவன் என்பதை, நம் தாய் அறிந்துகொள்ள வேண்டும். நம்மைக் காணும்பொருட்டு,
மலைச்சாரலின் கண், பெண்யானையின் துதிக்கையைப் போன்ற,
பெரிய கதிர்க் கொத்திலுள்ள தினையை, உண்ணுகின்ற
கிளிகளை ஓட்டும், குறமகளின் கையிலுள்ள ”குளிர்” என்னும் கருவி, சிலம்பைப்
போல ஒலிக்கின்ற, சோலைகள் விளங்கும் மலைநாடனாகிய தலைவன்,
இராக்காலத்தே, இங்கு வராமலிருக்க வேண்டும்.
அதுவே என் விருப்பம்.
சிறப்புக் குறிப்பு:
”என் விருப்பத்திற்கு இணங்கித் தலைவன் இரவில் வராமல் இருந்தால், என்னுடைய காமநோய் அதிகரிக்கும்; உடலில் மேலும் மாற்றங்கள்
தோன்றும். அதனால் வெறியாட்டினால் பயன் எதுவும் இல்லை என்பதைத்
தாய் உணர்வாள். பிறகு, என் நோயின் உண்மைக்
காரணத்தைத் தாய் அறிந்துகொள்வாள். விரைவில் எனக்கும் தலைவனுக்கும்
திருமணம் நடைபெறும்” என்று தலைவி எண்ணுகிறாள்.
No comments:
Post a Comment